

மாலத்தீவு ஆயிரக்கணக்கான தீவுகளால் ஆன ஒரு நாடு. அதில் ஒன்று வக்காறு (Vakkaru) தீவு. பவளப் பாறைகளால் சூழப்பட்ட, கடலுக்கு மேலே சற்றே தலையைத் தூக்கியமாதிரி இருக்கிற ஒரு திட்டு போன்ற தீவு. சற்றே புல் புதர். ஒரு சில மரங்கள் மட்டும். இதுதான் தீவு.
கடலின் அடியிலிருந்து எழும் மலை போன்ற நிலப்பரப்பில் இந்தியாவில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளன. ஆனால், மணல் படிந்து ஏற்பட்ட மணல் திட்டாக வக்காறு தீவு உள்ளது. அதாவது, மாலத்தீவுகளின் பல தீவுகள் பவளப் பாறைகளின் சிதைவு சிறுசிறு மணலாக மாறி தரையில் வீழ்ந்து பல ஆண்டுகளாக, படிந்து குவிந்து திரண்டு உருவாகி உள்ளன.
எதால் ஆனது தீவு?
மாலத்தீவுகளில் ஆங்காங்கே பவளப் பாறைகளைச் சுற்றிலும் வளைவடிவ தொகுதிகளாகக் (atolls) சுமார் 1,200 தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகள் உருவாகக் காரணமான பொருள்கள் எப்படி உருவாகின்றன? எங்கிருந்து வருகின்றன? என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் நட்ட நடுவே இந்தத் தீவுகள் உள்ளன. நீரிலும், காற்றிலும் கண்டங்களின் மணல் அடித்து வரப்பட்டு அவை படிந்ததால் உருவானவையாக இந்தத் தீவுகள் இருக்க முடியாது. மாலத்தீவுகளைச் சுற்றியுள்ள பவளப் பாறைகள்தாம் சிதைந்து மணலாக மாறிப் படிந்து இந்தத் தீவுகளை உருவாகியிருக்க முடியும். மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் தாம் பவளப் பாறைகளை மணலாகச் சிதைப்பதில் பங்காற்றுகின்றன.
எந்த உயிரினம்?
இங்கிலாந்தின் எக்ஸ்ட்டர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரிஸ் பெர்ரி (Chris Perry) வக்காறு போன்ற தீவுகளை உருவாக்கும் கழிவுகளை எந்த எந்த மீன் இனம் வெளியிடுகிறது என ஆராய முடிவு செய்தார்.
முதலில், அந்தக் கடல் பகுதியில் எந்தெந்தக் கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன என்று கணக்கெடுத்தார். பின்னர், அவற்றில் எந்த எந்த உயிரினம் மணல் போன்ற கழிவுகளை வெளியேற்றுகிறது என ஆய்வு செய்தார்.
வக்காறு தீவில் உள்ள மணலின் தன்மைகளை ஆராய்ந்தார். அங்குள்ள மணல் திட்டில் குறுகுறு மணல், தூசு போல உள்ள பொடி மணல் என எந்த எந்த வகை மணல்கள் எந்த சதவீதத்தில் உள்ளன என்று ஆராய்ந்தார். இதை இரண்டையும் பொருத்தி, வக்காறு தீவின் தோற்றத்தில் எந்தெந்தக் கடல் வாழ் உயிரினங்கள் பங்கு செய்துள்ளன என ஆராய்ந்தார் அவர்.
ஆல்கே தந்த பத்து
பவளப் பாறையில் துளையிட்டுச் சில வகை ஸ்பான்ஜ் (sponges) படிவ மணல் உருவாக முடியும். ஆனால், அந்தக் கடல் பகுதியில் இந்த வகையான ஸ்பான்ஜ் அரிது என்பதால் அவை முக்கியமான பங்கு ஆற்றியிருக்க முடியாது என அவர் முடிவு செய்தார். மேலும் உள்ளபடியே அந்தக் கடல்பகுதியில் காணப்படும் வகையான ஸ்பான்ஜ் உயிரித் தூசு மணலைத்தான் உருவாக்குகிறது. அந்த வகையான தூசு மணல் அந்த வக்காறு தீவில் இல்லை. அதேபோல, பவளப் பாறைகளில் மேய்ச்சலில் ஈடுபடும் கடல் முள்ளேலி (sea urchins) எனும் ஓர் உயிரினம் வெளிப்படுத்தும் மணல் அளவும் பொருந்தவில்லை. எனவே, வக்காறு தீவின் உருவாக்கத்தில் இந்த உயிரிகளின் பங்கு ஏதுமில்லை என்றும் அவர் கண்டார்.
அந்தக் கடல் பகுதியில் உள்ள ஆல்கே வகைகளையும் ஆய்வு செய்தார். பலவகை ஆல்கேகளுக்கு ஆமையின் முதுகுக் கவசம் போன்ற வெளிப்புற ஓடு உண்டு. ஹளிமீட (Halimeda) எனும் ஒருவகை ஆல்கேவிடமிருந்து வக்காறு தீவுக்கான சுமார் பத்து சதவீத மணல் பெறப்பட்டது என்று பெர்ரி கண்டார். இந்த வகை அல்கேவின் மேலே சற்றே தடிமனான ஓடு உள்ளது. காலப்போக்கில் அந்த ஓடு முறிந்து உடைந்து சிறு சிறு மணலாக மாறுகிறது.
கிளிமீன்களின் கழிவு
ஆனாலும், வக்காறு தீவை உருவாக்கியதில் மிக முக்கியமான பங்குவகிப்பது கிளிமீன்கள் (parrotfish) என்கிறது அவரது ஆய்வு. வக்காறு தீவின் சுமார் 85 சதவீத மணலை இரண்டு வகையான கிளிமீன்கள்தான் உருவாக்கின என்று பெர்ரி மதிப்பீடு செய்கிறார். அந்தக் கடல் பகுதியில் பவளப் பாறைகளில் வாழும் Chlorurus sordidus மற்றும் C. strongylocephalus எனும் கிளிமீன் வகை மீன்கள் தாம் வக்காறு தீவை உருவாக்கிய படிம மணல் உருவாக்கத்தில் பெரும்பங்கைச் செலுத்தியுள்ளன என்று அவர் கூறுகிறார்.
பவளப் பாறைகளில் வாழும் இந்தக் கிளிமீனின் உணவு பவள மொட்டுக்கள் (polyps) தான். தேங்காய் ஓட்டுக்குள் இருக்கும் பூ போல, பவள மொட்டுகள் தடிமனான ஓட்டின் உள்ளேதான் இருக்கும். ஓட்டை உடைத்துக் கிளிமீன் மொட்டை மட்டும் தனித்துத் தின்ன முடியாது. சிறு பழங்களை அதன் நடுவே உள்ள விதையுடன் முழுங்கிக் கொட்டையை மட்டும் மலக் கழிவாக வெளியேற்றும் பறவைகளைப் போல, கிளிமீன்கள் பவளப் பாறைகளின் மொட்டுகளை அவற்றின் ஓடுகளுடன் உண்கின்றன.
கிளிமீனின் வயிற்றில் மொட்டு ஜீரணமாகிறது; கல் போன்ற அதன் ஓடு வயிற்றில் சிதைக்கப்பட்டுக் குறுகுறு மணல் வடிவில் மலக்கழிவாக வெளிப்படுத்தப்படுகிறது. மலமாக வெளிப்படும் குறுகுறு மணல் அங்கு வீசும் பருவக் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுச் சுற்றியுள்ள தீவுகளில் படிந்துவிடுகிறது. இவ்வாறுதான் ஆண்டாண்டு காலமாக உருவாகும் மணல் படிந்து வக்காறு தீவு உருவாகியுள்ளது என்கிறார் பெர்ரி.
மீன்கள் வெளித்தள்ளும் மலக்கழிவு சேர்ந்த குப்பை மேடுதான் வக்காறு தீவு என்கிறது அவர் ஆய்வு.
மேலும், அந்த மீனினம் ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு மணல் கழிவை ஏற்படுத்துகிறது என அளவு செய்தும் மதிப்பீடு செய்தார். வக்காறு தீவைச் சுற்றி மட்டும் ஓர் ஆண்டில் இந்த மீன்கள் சுமார் 6 லட்சத்து 85 ஆயிரம் கிலோ எடை உள்ள மணல் கழிவை வெளிப்படுத்துகின்றன என்று அவரது ஆய்வு காட்டியது.
இதன் பொருள் என்ன? இந்த மீன்கள் அந்தக் கடல் பகுதியில் அரிதாகிப் போனால் கடல் அரிப்பில் சிதையும் இந்தத் தீவுகள் மெல்லக் மெல்ல காணாமல் போய்விடும். புவி வெப்பமடைதல் காரணமாகக் கடல் மட்டம் உயரும்போது இந்தத் தீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடாமல் இருக்க வேண்டும் என்றால் பவளப் பாறைகளில் வாழும் இந்தக் கிளி மீன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பெர்ரி வலியுறுத்துகிறார்.
தொடர்புக்கு: tvv123@gmail.com