வருங்கால வைப்புநிதி அதிகாரிப் பணி காலியிடங்கள்

வருங்கால வைப்புநிதி அதிகாரிப் பணி காலியிடங்கள்
Updated on
1 min read

தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது பி.எப். எனப் பொதுவாக அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (Employees Provident Fund) திட்டம்தான்.

அமைப்புசார்ந்த தொழிலாளர்களுக்கான மிகப் பெரிய சமூகப் பாதுகாப்பு திட்டம் இது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கழகம்தான் இந்தப் பணிகளைக் கவனித்துவருகிறது.

இதில், அதிகாரிகள் அந்தஸ்தில் பணியாற்றும் பி.எப். உதவி ஆணையர்கள், தனியார் நிறுவனங்களில் பி.எப். சட்டம் சரியாக அமல்படுத்தப் படுகிறதா,தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பி.எப். நிதி சரியாகச் செலுத்தப்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளைக் கவனிக்கிறார்கள்.விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது சட்டப் பூர்வமாக நடவடிக்கை எடுப்பதும் இவர்கள்தான்.

தகுதிகளும் தளர்வுகளும்

உதவி ஆணையர் பணியிடங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலமாக நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது170 பி.எப். உதவி ஆணையர்கள் பணியிடங்களைச் சிறப்புத் தேர்வு மூலம் நிரப்புவதற்கு தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தொழிலாளர் சட்டம், கம்பெனி சட்டம், பொது நிர்வாகம் ஆகியவற்றில் டிப்ளமா பெற்றிருப்பது விரும்பத்தக்க தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 35. எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும்,ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

கடைசித் தேதி

வழக்கமாக எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். ஆனால், இந்த முறை நேரடியாக நேர்காணல் நடத்தித் தேர்வுசெய்ய தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. எனினும், தேவை ஏற்பட்டால் எழுத்துத் தேர்வும் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. தகுதியான நபர்கள் ஜூலை மாதம் 9-ந் தேதிக்குள்ஆன்லைனில் (>www.upsconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். விரிவான தகவல்களை >www.upsc.gov.in இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in