அமெரிக்கக் கல்லூரிகளில் சேர சிறப்புத் தேர்வு

அமெரிக்கக் கல்லூரிகளில் சேர சிறப்புத் தேர்வு
Updated on
1 min read

தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு மட்டுமின்றி மேற்படிப்புக்கும் இந்திய மாணவர்கள் செல்ல விரும்பும் முக்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இளங்கலைப் பட்டப் படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்கள் சேர வேண்டுமானால் ஸ்கொலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட் (Scholastic Aptitude Test-SAT) எனப்படும் சிறப்புத் திறனாய்வுத் தேர்வு எழுத வேண்டும்.

அமெரிக்காவில் இளங்கலைப் படிப்பில் சேர எந்தக் கல்வி நிறுவனத்துக்கு விண்ணப் பித்தாலும் இந்த “சாட்” தேர்வு மதிப்பெண் தரத்தைக் (கிரேடு) கேட்பார்கள். எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (Educational Testing Service) என்ற அமைப்பு இந்தத் தேர்வை ஆண்டுக்கு

8 முறை நடத்துகிறது. தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் சாட் தேர்வு நடத்தப்படுகிறது. 3 மணி 45 நிமிடம்

கொண்ட இந்தத் தேர்வில், ஆங்கில மொழித் திறமையும், கணிதத் திறனும் பரிசோதிக்கப்படுகின்றன.

ஆங்கில வாசிப்பு, ஆங்கிலத்தில் எழுதுதல், கணிதம் என 3 பிரிவுகளை உள்ளடக்கியது சாட் தேர்வு. ஆங்கில வாசிப்புப் பகுதியில், ஆங்கில வாக்கியங்களைப் படித்துப் புரிந்துகொள்ளுதல், வார்த்தைகள் அறிந்திருந்தல் ஆகியவற்றை அறியும் வகையில் கேள்விகள் இடம்பெறும். ஆங்கிலத்தை எழுதும் பிரிவில், ஆங்கில இலக்கணம், வாக்கியங்களில் தவறுகளைக் கண்டுபிடித்தல் தொடர்பாக அப்ஜெக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்கும் முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கணிதப் பிரிவில், எண்கள், அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, நிகழ்தகவு, தகவல் தொகுப்பு ஆய்வு (டேட்டா அனலிசிஸ்) ஆகியவை தொடர்பான அடிப்படைக் கேள்விகளைக் கேட்பார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 800 மதிப்பெண் (ஸ்கோர்) வீதம் மொத்தம் 2,400 மதிப்பெண். சாட் தேர்வில் இவ்வளவு மதிப்பெண் எடுத்தால் பாஸ், பெயில் என்றில்லை. இதில் எடுக்கப்படும் ஸ்கோர் கிரேடு பாயிண்ட் ஆகக் கணக்கிடப்படுகிறது.

அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் வெறும் செட் தேர்வு மதிப்பெண்ணை வைத்தே அட்மிஷன் வழங்கிவிடுவதில்லை. அட்மிஷன் நடைமுறைகளில் சாட் தேர்வு மதிப்பெண்ணும் பார்க்கப்படும். அவ்வளவுதான். கோச்சிங் மையங்களுக்குச் சென்று படித்துத் தேர்வு எழுதுவது போல, சாட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. அமெரிக்கக் கல்லூரியில் படிக்கத் தேவையான அடிப்படை ஆங்கில அறிவு, கணிதத் திறன் உள்ளதா என்பதை அறியும் வகையில்தான் தேர்வு அமைந்திருக்கும். சாட் தேர்வு, அதற்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு முடிவு, மதிப்பெண் முறை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும்

www.sat.collegeboard.org என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விரிவாக அறிந்துகொள்ளலாம். அடுத்த சாட் தேர்வு ஜூன் 7-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு மே 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 23 வரை தாமதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in