Last Updated : 13 Jun, 2015 02:11 PM

 

Published : 13 Jun 2015 02:11 PM
Last Updated : 13 Jun 2015 02:11 PM

வாசகர் பக்கம்: மின் கட்டணக் காப்பு வைப்புத் தொகை கணக்கீட்டு முறை

இந்த மாதம் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது என்று நினைப்பவர்கள் இந்த விளக்கக் கட்டுரையைப் படித்ததும் கட்டணம் கூடியதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வார்கள்.வைப்புத் தொகை கூட்டியது சரியா தவறா என்பது தனிப்பட்ட விவாதம். எப்படி வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது என்பதற்கான விளக்கமே இந்தக் கட்டுரை.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் சட்ட விதிகளின்படி (As per Regulation 5(5) of the Tamil Nadu Electricity Supply Code)ன் படி 2015-2016 நிதி ஆண்டுகான காப்புத் தொகையை மறு நிர்ணயம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வசூலித்துவருகிறது.

இதன் கணக்கீடு எப்படியென்றால் சென்ற வருடம் ஏப்ரல் 2014 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 2015 முடிய நாம் இரு மாதங்களுக்கொரு முறை அதாவது ஒரு நிதியாண்டில் நாம் செலுத்தும் மின் கட்டணங்களின் கூட்டுத் தொகையில் மாத சராசரித் தொகையில் மூன்று மடங்கு மின் கட்டணம் காப்பு நமது கணக்கில் வைப்புத் தொகையாக இருப்பு இருக்க வேண்டும் என்பது விதி.

இந்த மூன்று மடங்கு தொகையில் நமது கணக்கில் ஏற்கனவே உள்ள காப்பு வைப்புத் தொகையில் 9% வட்டி மற்றும் வருமானவரிக் கழிவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அந்தத் தொகை நமது கணக்கில் இருப்பாகக் காண்பிக்கப்படும். இந்தத் தொகையைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகையைத்தான் இம்மாத மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வசூலித்துவருகிறது.

உதாரணத்துக்கு ஒரு கணக்கீட்டினைப் பார்ப்போம். (மின்சார வாரிய இணையதளத்தில் உள்ள கணக்கீடு இது)

ஒரு மின் இணைப்பில் சென்ற வருடம் ஏப்ரல் 2014 முதல் மாரச் 2015 வரை கட்டிய தொகை

ஏப்ரல் 2014 ரூ. 4773.00

ஜூன் 2014 ரூ. 5463.00

ஆகஸ்ட் 2014 ரூ. 3910.00

அக்டோபர் 2014 ரூ. 5003.00

டிசம்பர் 2014 ரூ. 3821.00

பிப்ரவரி 2015 ரூ. 3714.00

மொத்தம் ரூ.26684.00

இதில் 3 மாத சராசரித் தொகை (26684 / 12 X 3 = 6671)

இந்த மின் இணைப்பில் ஏற்கனவே உள்ள வைப்புத் தொகை ரூ. 5908.00

மொத்தமுள்ள சராசரித் தொகையில் (6671) ஏற்கனவே உள்ள காப்பு வைப்புத் தொகை ரூ. 5908 ஐக் கழிக்க மீதம் நாம் கட்ட வேண்டிய காப்பு வைப்புத் தொகை ரூ. 763.00 இதனை 10-ன் மடங்குகளில் மாற்றப்படும்போது ரூ.770 செலுத்த வேண்டும்.

இதே கணக்கீட்டின்படி ஒரு இணைப்புக்குச் சராசரித் தொகை ரூ. 5,000 வருகிறது என்றால் அவருடைய மின் இணைப்பில் காப்பு வைப்புத் தொகை ரூ. 6,000 உள்ளது என்றால் அவர் கூடுதலாக எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஏற்கனவே உள்ள தொகையே அவருடைய இணைப்புக்குக் காப்பு வைப்புத் தொகையாக இருக்கும்.

மின் இணைப்பு உள்ள அனைவருக்கும் இந்த வைப்புத் தொகை வர வாய்ப்பில்லை. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் அதிமாக மின்சாரம் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே காப்பு வைப்புத் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இதில் யாருக்கு அதிகம் பாதிப்பு என்றால் சென்ற வருடத்தைவிட அதிகமாக மின்கட்டணம் செலுத்தியிருப்பவர்கள் அதிகமான காப்பு வைப்புத்தொகை செலுத்தப்பட வேண்டியிருக்கும்.

தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளத்தில் நாம் செலுத்த வேண்டிய காப்பு வைப்புத் தொகை மற்றும் நமது கணக்கில் ஏற்கனவே இருப்பிலுள்ள காப்பு வைப்புத் தொகை ஆகிய விவரங்களை நமது மின்சார இணைப்பு எண்ணைப் பயன்படுத்தி அறிந்துகொள்ளலாம்.

இணையதள முகவரி: http://www.tangedco.gov.in/linkpdf/How%20to%20calculate%20Additional%20Security%20Deposit.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x