Published : 26 Jun 2015 09:08 AM
Last Updated : 26 Jun 2015 09:08 AM

சினிமா ரசனை 4: உயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா!

நீங்கள் ஒரு இயக்குநராக இருந்தால், ஒரு திரைப்படம் எடுக்க உச்சபட்சமாக என்னென்ன சோதனைகளை எதிர்கொள்வீர்கள்? ஒரு மாத காலம் தன் உடலையே மருந்துகளைப் பற்றிய பரிசோதனைகளுக்காக ஒப்புக்கொடுத்து, பல விதமான வாதைகளை அனுபவித்து, அதன் மூலம் திரட்டிய பணத்தில் படம் எடுத்து உலகப் புகழ் பெற்ற ராபர்ட் ரோட்ரிகஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திரைப்படத் துறையில் ரோட்ரிகஸைப் போல உத்வேகமூட்டும் ஒரு நபரைக் காண்பது மிகவும் அரிது. யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று இன்றும் உறுதியாக நம்புபவர் அவர். அவரைப் பின்பற்றியே பலரும் தனியாளாகப் படம் எடுத்திருக்கின்றனர். ஒரு மிகப் பெரிய குழுவை வைத்துக்கொண்டு படம் எடுப்பதையோ, பலகோடி டாலர்கள் கொட்டுவதையோ விரும்பாத நபர் அவர். படமெடுப்பதில் கிட்டத்தட்ட ஒருவித கெரில்லா ஸ்டைலைப் புகுத்தியவர்.

அவரது ஊக்கமூட்டும் முயற்சிகளைப் பற்றிய கட்டுரைதான் இது. திரைப்படம் என்பது பலரும் சேர்ந்து பணியாற்றும் ஒரு துறை. இயக்குநர் என்பவர்தான் எந்த ஒரு திரைப்படத்துக்கும் தலையாய நபர். என்றாலும், அவரின் கீழ் ஏராளமானவர்கள் பணியாற்றினால்தான் எந்த ஒரு திரைப்படமும் முழுமையடையும். அப்போதுதான் அந்த இயக்குநரின் பார்வை மழுங்காமல் திரைப்படத்தில் இடம்பெறும். ஆனால், கடந்த சில வருடங்களாக, குழு சார்ந்து பணியாற்றும் முறை மெதுவே தகர்ந்து, உலகம் முழுக்கவே மெல்லமெல்லத் தனியாகவே படமெடுக்கும் முறை அதிகரித்துவருகிறது.

எப்படியென்றால், ஒரு நபருக்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியாவது முயற்சி செய்து ஒரு கேமராவைத் தயார் செய்கிறார். தனது மனதில் இருக்கும் கதையை விரிவாக எழுதிக்கொண்டு, அந்தக் கதை நடக்கும் களத்துக்குச் செல்கிறார்.

அங்கே இருக்கும் நிஜமான மக்களை வைத்துக்கொண்டு, அவர்களிடம் பேசி, அவர்களையே கதாபாத்திரங்களாக ஒப்பந்தம் செய்துகொள்கிறார். இவரே ஒளிப்பதிவாளராகவும் மாறி, படத்தை எடுக்கிறார். பின்னர் எடிட்டிங், டப்பிங், ஒலிக்கலவை முதலியே எல்லா வேலைகளையும் இவரே செய்து படத்தை முழுமையாக உருவாக்குகிறார். இதுதான் உலகெங்கும் பிரபலமாக இருக்கும் One man film crew என்ற வகை. பல வருடங்கள் முன்னரே ஹாலிவுட்டில் சிலர் முயன்று பார்த்து வெற்றியடைந்த விஷயம் இது.

படிக்கும்போது மிக எளிதானதாக இது தோன்றலாம். ஆனால், நிஜத்தில், திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற வெறி மூளை முழுதும் ஆக்கிரமித்தால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம் இது.

உதாரணமாக, ராபர்ட் ரோட்ரிகஸ் என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே குறும்படங்கள் மூலமாக மிகவும் திறமைசாலி என்று பெயர் எடுத்திருந்தார். இந்தக் குறும்படங்களும் மலிவான கேமரா ஒன்றில் தனது சகோதர சகோதரிகளை வைத்து இயக்கியவைதான். ஆனாலும், அவரது அபாரமான திறமையால் பல திரைவிழாக்களில் அவை பரிசு வாங்கின (‘Bedhead’ என்ற குறும்படம் இன்றைக்கும் பிரபலம்).

இதனால் உந்தப்பட்டு, முழு நீளத் திரைப்படம் ஒன்றை எடுக்கும் முயற்சியில் ரோட்ரிகஸ் இறங்குகிறார். ஆனால், அவரிடம் கையில் ஒரு பைசா கூடப் பணமில்லை. என்றாலும் மனம் தளராமல், படம் எடுக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுகிறார் ரோட்ரிகஸ். மிகக் குறைந்த பட்ஜெட் என்றால்கூட, 7,000 டாலர்கள் ஆகும் என்று தெரிகிறது. படத்தை எடுக்க இந்தப் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது?

ரோட்ரிகஸின் ஊரில் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் உண்டு. அங்கே சென்று நம்மை நாமே சோதனை எலியாக ஒப்புக்கொடுத்தால் பணம் கிடைக்கும். இப்படி, ஒரு மாதப் பரிசோதனைக்கு 3,000 டாலர்கள் கிடைப்பது தெரிந்துகொண்டு, அங்கே உடனடியாக சென்று தன் பெயரை ரோட்ரிகஸ் பதிவுசெய்துகொண்டார்.

தினமும் அடிக்கடி ஊசி போட்டு ரத்தம் எடுப்பார்கள். ஆனால், அட்டகாசமான சாப்பாடு கிடைக்கும். சில பல சோதனைகளுக்குப் பின் ரோட்ரிகஸ் தேர்வாகிறார். உள்ளே நுழைகிறார். முதல் நாளில் பல முறை ரத்தம் எடுக்கிறார்கள். அவர்களின் மருந்தை உடலில் செலுத்துகிறார்கள். நரக வேதனை. பொறுத்துக்கொள்கிறார் ரோட்ரிகஸ்.

ஒரு வாரம் கழித்து, அங்கே கிடைக்கும் 24 மணி நேர ஓய்வில் திரைக்கதையை எழுத ஆரம்பிக்கிறார். அங்கு இருக்கும் இன்னொரு நபரும் இவருக்கு நண்பராக ஆக, அவரிடமும் இன்னொரு 3,000 டாலர்கள் தேறுகிறது. பாக்கிப் பணத்தை எப்படியோ அங்குமிங்கும் புரட்டுகிறார்.

பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்து, ஒரு நண்பரிடம் இருந்த ஆரிஃப்ளெக்ஸ் கேமராவை இரண்டு வாரங்கள் கடனாக வாங்கிக்கொள்கிறார். படம் நடக்கும் களமான மெக்ஸிகோவின் சிற்றூர் ஒன்றுக்குச் சென்று, அங்கிருப்பவர்களை வைத்தே படத்தை முடிக்கிறார். படத்தின் டப்பிங், எடிட்டிங் ஆகியவற்றுக்கு ரோட்ரிகஸ் கஷ்டப்பட்டது தனிக்கதை. ஆனால், மனம் தளராமல் படத்தை எடுத்து முடித்து இறுதியான வடிவத்தைத் தயார் செய்கிறார்.

இப்படி எடுக்கப்பட்ட படம், பற்பல சம்பவங்களுக்குப் பின்னர் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கே பரிசும் பெறுகிறது. உலகெங்கும் பிரபலமான இயக்குநராக மாறுகிறார் ரோட்ரிகஸ். அந்தப் படம் - எல் மரியாச்சி (El Mariachi). இதன்பின் அதன் இரண்டாம், மூன்றாம் பாகங்களையும் (Desperado, Once upon a Time in Mexico) வெளியிடுகிறார். இன்று ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உடையவர். ஆனால் வயதோ நாற்பதுகளில்தான்.

இவரது வாழ்க்கை, திரைப்படம் எடுக்க விரும்பும் அனைவருக்கும் அவசியம் உற்சாகமூட்டக்கூடியது. ஏழை இளைஞனாக இருந்த அவர் எப்படித் தனது முதல் படத்தைத் தனியொரு ஆளாக எடுத்தார் என்ற அருமையான கதையை ‘Rebel Without a Crew' என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார். திரைப்படம் எடுக்கும் தாகம் உள்ள அனைவரும் அவசியம் பலமுறை படிக்க வேண்டிய புத்தகம் இது.

தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x