

அமெரிக்காவில் வருடந்தோறும் ஃபர்ஸ்ட் டெக் சேலன்ஜ் (first tech challenge) எனப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடந்த 22- ம் தேதி முதல் 24- ம் தேதி வரை இது நடைபெற்றது. சர்வதேச அளவில் 18 ஆயிரம் பேர்கள் 900 குழுக்களாக கலந்து கொண்டனர். இதில் 50- க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கோவையைச் சேர்ந்த தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐ.பி.டி.பி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் (+1,+2க்கு சமமான கல்வி) மாணவ மாணவிகள் அஷ்வின் ஏ.குமார், நிதின் ஏ.குமார், நிசாந்த் ஜெய்குமார், நிகிலேஷ் எஸ். குமார், அஜய் விஜயக்குமார் மற்றும் ஆத்மிகா செந்தில்குமார் ஆகியோர் டெக்னோமான்சர்ஸ் என்ற குழுவாக அதில் பங்கேற்றனர்.
அவர்கள் வடிவமைத்த ‘ஓம்’ என்ற பெயருள்ள ரோபோ, தன்னிடம் வந்து சேரும் பந்துகளை வேகமாக கூடையில் எடுத்துப் போடுகிறது. அதன் அதிவேகத்தை பார்த்து பார்வையாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்துள்ளனர்.
12 முதல் 18 வயது வரையிலான குழுவினருக்கான இந்தப் போட்டியில் 128 குழுக்கள் கலந்து கொண்டன.அதில் 9 குழுவினர் இறுதிச் சுற்றுக்கு வந்தனர். அதில் 4 குழுவினரிடம் தோற்று, 5 குழுவினருடன் வென்று ‘எனேபிளேர்’ என்ற விருதை நமது மாணவர்கள் வென்றுள்ளனர்.
இந்த ரோபோ மட்டுமல்ல, பார்வையற்றவர்கள் தம் கையில் உள்ள ஸ்டிக் மூலம் 3 அடி தூரத்தில் தடையாக இருக்கும் ஒரு பொருளை இனம் காணும் வகையில் சிறிய ரோபோவை உருவாக்கி அவர்களது ஸ்டிக்கில் இந்த மாணவர்கள் பொருத்தியுள்ளனர்.
பந்துகள் சேகரிக்கும் ரோபோவைப் போல, எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோவை செய்ய முடியுமா? எனக்கேட்டேன். “சாத்தியம்தான். ஆனா ரொம்ப காலம் ஆகும். ரொம்பவும் கஷ்டப்படணும்!’ என்றனர் ஒருமித்த குரலில்.
மேடை
சென்னை தரமணியில் இயங்கும் கணித ஆராய்ச்சி மையம், கணிதத்தில் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் ஜூன் 29,30 தேதிகளில் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு >http://www.imsc.res.in/~knr/facets15/