Last Updated : 02 Jun, 2015 12:07 PM

 

Published : 02 Jun 2015 12:07 PM
Last Updated : 02 Jun 2015 12:07 PM

சாதிக்க உதவும் சான்றிதழ் படிப்புகள்

சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் பலவகை. படிக்கும் பாடத்தைக் கூடுதல் விசாலமாக அறிந்துகொள்ள உதவுபவை, பாடத்துக்குத் தொடர்பில்லாதவை என்றபோதும் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் தொலைநோக்கு தேவைகளுக்கானவை. சான்றிதழ் படிப்பையே முழு நேரக் கல்வியாக மேற்கொள்வது... உள்பட இவற்றில் பல வகையுண்டு.

இவற்றுக்கு உதாரணமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் செய்முறை பயிற்சிக்காகப் பாடம் சார்ந்த கம்ப்யூட்டர் சான்றிதழ் / டிப்ளமோ படிப்பைப் பகுதி நேரமாக மேற்கொள்வது, கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர் தனது தனிப்பட்ட ஆர்வத்துக்காகக் காந்தியச் சிந்தனை குறித்தோ ஒளிப்படகலை குறித்தோ சான்றிதழ் படிப்பில் சேர்வது, தனிப்பட்ட காரணங்களால் வேறு முழு நேரப் படிப்புக்கு வாய்ப்பில்லாது சான்றிதழ் / பட்டயப் படிப்புகளின் மூலம் எதிர்காலத்தை நிர்மாணிக்க முயல்வது ஆகியவற்றைச் சொல்லலாம்.

நேரமும், செலவும் குறைவு

சான்றிதழ் படிப்பின் சிறப்பே அவற்றின் குறுகிய காலத்தில் அதைப் படிக்க முடிவதும், அதிகச் செலவில்லாமலும் பயில முடியும் என்பதுதான். மேலும் பகுதி நேரமாக, மாலையில், வார இறுதி விடுமுறையிலும் இவற்றைப் படிக்கலாம். பெரும்பாலானவற்றை வீட்டிலிருந்தபடியேயும் பயில முடியும். பல்வேறு பட்டயப் படிப்புகள் சான்றிதழ் படிப்புகளின் நீட்சியாக, அவற்றின் அடுத்த நிலை கல்வியாகவோ இருப்பதால், இங்கே சான்றிதழ் படிப்புகளை மட்டுமே கவனப்படுத்திப் பார்த்துவிடலாம்.

பிரபலத் தேசியத் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தனியார் பயிற்சி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவை ஏராளமான சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. இணையம் வாயிலாக அவற்றை அணுகுவது எளிது. பெரும்பாலான கல்லூரிகளும் கல்லூரி கல்விக்கு இணையாகச் சான்றிதழ் / டிப்ளமா படிப்புகளை வளாகத்துக்குள்ளாகவே வழங்குகின்றன.

மூத்த மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் வாயிலாக, அவற்றில் முக்கியப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். வேலை தேடலுக்காக மேற்கொள்ளப்படும் செய்முறை சார்ந்த முழு நேரப் படிப்புகளின் முடிவில் சான்றிதழ் அவசியம். மற்றபடி தனியார் பயிற்சி மையங்களில் பாடத்துக்கு உதவியாக, கூடுதல் அறிவுக்காக, சுவாரசியத்தியத்துக்காக என வழங்கப்படும் படிப்புகளில் சான்றிதழ் தேவையில்லை எனத் தெரிவித்துவிட்டால் கல்விக் கட்டணத்தில் சகாயமாகும்.

கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் சான்றிதழ் படிப்புகள்

கலை அறிவியல், பொறியியல் எனப் பட்டப் படிப்பு எப்படியிருந்தாலும், அதற்கு இணையான அல்லது உதவியான கம்ப்யூட்டர் சார்ந்த சாப்ட்வேர், ஹார்ட்வேர் படிப்புகளைத் தவிர்க்க முடியாது. அதிலும் இணையம் சார்ந்த தரமான சான்றிதழ் படிப்புகள் தற்போது அதிகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. உதாரணமாக 'தேசியத் தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் திட்டம்' என்ற பெயரில் ஐ.ஐ.டி. வழங்கும் இணையதளக் குறுகியகாலச் சான்றிதழ் படிப்புகளைச் சொல்லலாம். தரமான சான்றிதழ் படிப்புகளைப் பெறத் தேர்வுக் கட்டணம் தவிர்த்து அனைத்தும் இலவசம் என்கிறது சென்னை ஐ.ஐ.டி. கூடுதல் தகவல்களுக்கு https://onlinecourses.nptel.ac.in/explorer

வணிகம், சந்தை சார்ந்தவை

வங்கிகள், முதலீட்டு - நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ், மியூசுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட துறைகளை வேலை வாய்ப்புக் களமாகக் கொண்டு கல்லூரிக் கல்வியை மேற்கொள்பவர்கள் அவை தொடர்பான பல்வேறு சான்றிதழ் படிப்புகளைப் பயிலலாம். படிப்புடன் பகுதி நேரமாக இன்சூரன்ஸ், மியூசுவல் ஃபண்ட் முகவராகச் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கும் உரிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள இப்படிப்புகள் உதவும். பொருளியல், வணிகம், வணிக மேலாண்மை பட்டப் படிப்புகளை மேற்கொள்வோருக்கு, இவை அத்தியாவசியமானதும்கூட.

மேலும் பொருட்களைச் சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி, இறக்குமதி சாத்தியங்கள் ஆகியவை தொடர்பான சான்றிதழ் படிப்புகள் படிப்பு, வேலை, சுயதொழில் என அனைத்து நிலைகளிலும் இவை கைகொடுக்கும். இவை தொடர்பான மென்பொருள் விரிவாக்கம், அப்ளிகேஷன் சார்பான தொழில்நுட்பங்களைக் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு, பொறியியல் மாணவர்கள் சான்றிதழ் படிப்பாகப் படிக்கலாம். காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தகச் சட்டங்கள் தொடர்பான சான்றிதழ் படிப்புகள் சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு அத்தியாவசியமானது.

மருத்துவம், சுகாதாரம்

நாளுக்கு நாள் விரிவடைந்துவரும் மருத்துவத் துறையில் செவிலியர்கள், மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள் தேவையும் விரிவடைந்தேவருகிறது. சில

தனியார் பல்நோக்கு மருத்துவ மனைகள் கல்விக் கட்டணத்தைப் பகுதி நேரமாக வழங்கும் பணிக்கான உதவித்தொகையில் சமன் செய்து பொருளாதார ரீதியிலும் மாணவர்களுக்கு உதவுகின்றன.

சாதாரணச் சான்றிதழ் படிப்பு மூலம் மருத்துவத் தொழில்நுட்பக் கருவிகளை இயக்குவதில் சில ஆண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆச்சரியமூட்டும் வகையில் ஊதியம் கிடைப்பதால், பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்தச் சான்றிதழ் பயிற்சியைப் பயில்வது அதிகரித்துவருகிறது. அதே நேரம் ‘பாரா மெடிக்கல்’ பயிற்சி நிறுவனங்கள் மூலைக்கு மூலை பெருகி இருப்பதால், அவற்றில் தரமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி பெறுவது நல்லது.

இதேபோல, பட்டதாரிகள் மத்தியில் பார்மசூட்டிகல் மார்க்கெட்டிங் சான்றிதழ் படிப்புக்கு வரவேற்பு குறையாது இருக்கிறது. அடிப்படை பட்டப் படிப்புடன் மருத்துவக் கழிவு மேலாண்மை போன்ற சான்றிதழ் படிப்பை மேற்கொள்பவர்களுக்கு, இன்றைய சூழலில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகம்.

பிளஸ் 2 முடித்தவர்கள் தமிழக அரசின் பன்னோக்கு உயர் மருத்துவமனையில் ஒரு வருட முழு நேரப் படிப்பில் சேரலாம். இசிஜி, அறுவை சிகிச்சை அரங்கம், டயாலிசிஸ் உள்ளிட்ட 12 தலைப்புகளில் இங்கு சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதேபோல வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் குறைந்த கட்டணத்தில் 11 தலைப்புகளில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x