

இது விளம்பர யுகம். தரமான பொருளாக இருந்தாலும் நுகர்வோர் மத்தியில் பொருளை வாங்கத் தூண்டும் கவர்ச்சியை விதைப்பதில் விளம்பரத் துறையினரின் தேவை அதிகரித்துள்ளது. அதைப்போலவே, எந்தத் துறை பணியாளருக்கும் விளம்பரத் துறையின் அடிப்படை அறிவு இருக்க வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. சந்தையைக் கணக்கிட்டுப் பொருளைத் தயாரிப்பதில் இது உதவும்.
விளம்பரத் துறை சார்ந்த சான்றிதழ் படிப்புகள் இந்த வகையில் கவனம் பெறுகின்றன. ஊடகத்துறை சார்ந்த சான்றிதழ் படிப்புகளைப் பட்டப்படிப்புடன் கூடுதல் தகுதியாகச் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை நாடெங்கும் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் தொலைதூரக் கல்வியில் தருகின்றன. தொலைக்காட்சி ஊடகம் சார்ந்த ஒலி-ஒளி அமைப்பு, டிஜிட்டல் நுட்பங்கள் சார்ந்த மல்டிமீடியா சான்றிதழ் படிப்புகளும் ஆர்வமுள்ளவர்களுக்குக் காத்திருக்கின்றன.
மொழி சார்ந்தவை
சந்தைப் பொருளாதாரம் உலகத்தை உள்ளங்கையில் சுருக்கிய பிறகு பரவலாக மொழிகளை அறிந்து வைத்திருப்பவர் கூடுதல் திறமை பெற்றவராகிறார். எனவே, கூடுதல் மொழிகளைச் சான்றிதழ் படிப்பாகப் படித்துத் நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளலாம். முழுவதும் மொழி சார்ந்த துறையில் எதிர்காலத்தைத் திட்டமிடுபவருக்கு இது அவசியம்.
உதாரணமாக, தமிழ், ஆங்கிலத் துறை மாணவர்கள் கூடுதலாக உலக மொழிகளில் ஒன்றைக் கற்று வைத்திருப்பது உயர்கல்வியின்போது ஆய்வு சார்ந்த படைப்புகளை ஆழமாகவும், பரவலாகவும் உருவாக்க உதவும். இதேபோல, மொழியாசிரியராக நினைப்பவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்வது சிறப்பு.
ஆசிரியர், அலுவலகப் பணிக்கு
பாடம் சார்ந்த சிறப்புப் பயிற்சிகள், சிறப்புக் குழந்தைகளைக் கையாள்வதற்கான பயிற்சிகள், குழந்தை உளவியல், கற்றல்-கற்பித்தல் நுணுக்கங்கள் போன்றவை குறித்த சான்றிதழ் படிப்புகள் ஆசிரியர் பணிக்குத் தயாராகும் கல்லூரி மாணவர்களுக்குக் கைகொடுக்கும்.
அதேபோல, பணிபுரிய இருக்கும் அலுவலகம் எதுவானாலும் கடிதம் எழுதுவது, கோப்பு தயாரிப்பது, பராமரிப்பது போன்றவை தொடர்பான சான்றிதழ் படிப்புகளைக் கல்லூரி காலத்தில் பயில்வது ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்கும், வேலை தேடுவதில் எவற்றை இலக்குகளாகக் கொள்ளலாம் என்று தேடலைக் கூர்மைப்படுத்தவும் உதவும்.
இதர சான்றிதழ் படிப்புகள்
தன்னார்வ அமைப்புகள், சேவை நிறுவனங்களில் பணிபுரிய விரும்புவோர் அது தொடர்பான சான்றிதழ் படிப்புகளைப் படிக்கலாம். தொற்று நோய்கள், குழந்தைகள் பாதுகாப்பு, இளம் வயதினருக்கான சட்ட உதவி, பெண்களுக்கு அதிகாரமளிப்பு, மனித உரிமைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்டவை தொடர்பான சான்றிதழ் படிப்புகள் இவர்களுக்கு உதவும்.
உளவியல் சார்ந்து மருத்துவமனை - ஆலோசனை மையங்கள், காப்பகங்களில் பணிபுரிய உளவியல், உறவு மேலாண்மை, தத்துவம் சார்ந்த படிப்புகள் உதவும். வரலாறு, இலக்கியம் பயிலும் கலைக் கல்லூரி மாணவர்களுக்குத் தத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் கூடுதல் தகுதியுடன் மிளிர உதவும்.
இவை தவிர மருத்துவம் மற்றும் ஆன்மிகம் சார்ந்து புதிய வகை சுற்றுலா பிரபலமாகிவருவதைத் தொடர்ந்து, வேலைவாய்ப்புக்கு வழி செய்யும் ஏராளமான சான்றிதழ் படிப்புகளைப் படிக்கலாம்.
வேலை வாய்ப்பு, கல்வி சார்ந்து மட்டுமல்ல தன்னை உணரவும், மேம்படுத்திக் கொள்ளவும் பல்வேறு சான்றிதழ் படிப்புகள் உண்டு. இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் இளைஞர் முன்னேற்றம் தொடர்பான சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.
இளம் வயதினர் தங்களுடைய திறனை உணர்ந்து வளர்த்துக்கொள்வது, சக வயதினரைப் புரிந்துகொண்டு அவர்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. உடல்-உள்ளம் நலம், இயற்கை மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்தும் சான்றிதழ் படிப்புகளும் உண்டு.
தமிழகத்தில்
நவீன சாகுபடி நுட்பங்கள், காளான், தேனீ வளர்ப்பு முறைகள், பழம்-காய் பதப்படுத்தல், பண்ணைக் கருவிகள் பழுது நீக்குதல், மூலிகை பயிர் வளர்ப்பு, அங்கக மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. விவசாயப் படிப்புகளை மேற்கொள்பவர்கள் மட்டுமல்ல, பாரம்பரியத்தில் ஆர்வம் கொண்ட எவரும் பயனுள்ள இந்தப் படிப்பைப் படிக்கலாம்.
இதேபோன்று தமிழ் புலவர் பயிற்சி, நுகர்வோர் கல்வி, மனித உரிமைக் கல்வி, அருங்காட்சியகவியல் தொடர்பான சான்றிதழ் படிப்புகளை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் குரலிசை, மிருதங்கம், பரத நாட்டியம் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
நுகர்வோர் பாதுகாப்பு - விழிப்புணர்வு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றவை அனைவருக்கும் அவசியமானவை. சட்டம் சார்ந்த நுணுக்கமான சான்றிதழ் படிப்புகளைப் புதுடெல்லி தேசியச் சட்டப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இவற்றில் பட்டதாரிகள் அல்லது பட்டப்படிப்பில் இறுதியாண்டு பயில்பவர்கள் மட்டுமே சேர முடியும்.
சாதிக்க நினைப்போர் ஏறிச்செல்லும் படிக்கட்டுகள்தான் சான்றிதழ் படிப்புகள்!