Published : 23 Jun 2015 12:42 PM
Last Updated : 23 Jun 2015 12:42 PM

ஆங்கிலம் அறிவோமே- 63 : நீங்க கதை விடுவீங்களா?

THAN ME - TO ME

ஒரு வாசகர் ‘My Father likes my sister more than me’ என்ற வாக்கியத்தை எழுதி, ‘‘இது சரியா?’’ என்றும் கேட்டார். அவரது தந்தை செய்வது சரியா என்பதை ஒதுக்கி அந்த வாக்கியம் சரியா என்பதைப் பார்ப்போம்.

இந்த வாக்கியம் குழப்பத்தைத் தருகிறது. ஏனென்றால், இதை இரண்டுவிதமாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒன்று, ‘என்னை விரும்புவதைவிட என் சகோதரியை அப்பா அதிகம் விரும்புகிறார்’ என்பது. இதை My father likes my sister more than he likes me என்று சொல்லலாம்.

இரண்டு, ‘நான் என் சகோதரியை விரும்புவதைவிட என் அப்பா அவளை அதிகம் விரும்புகிறார்’ என்பது. இதை My father likes my sister more than I do என்றோ My father likes my sister more than I like my sister என்றோ சொல்லலாம்.

OUT OF THIS WORLD

ஒரு வாசகர் " ‘Out of this world’ என்று எங்கு பயன்படுத்தலாம்?" என்கிறார். தேவலோகம் சென்றாலோ, விண்கலத்தில் ஏறி பூமியைச் சுற்றும்போதோ மட்டும்தான் ‘Out of this world’ என்பது கிடையாது. ‘Out of this world’ என்பது ‘totally within this world’தான்.

"I feel out of this world" என்றால் மிகவும் உற்சாகமாகவும், பரவசமாகவும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது, "அந்தச் செய்தியைக் கேட்டதும் நான் சொர்க்கத்தில் மிதந்தேன்" என்கிறார்களே, அந்த வகை. அப்படிப் பார்த்தால் தேவலோகத்தில் ஊர்வசி, மேனகை போன்ற அழகிய நடன மங்கைகளோடு இருக்கும்போது நீங்கள் ‘Out of this world’ ஆக இருக்கலாம். அவர்கள் உங்களுடன் பூமிக்கு வர சம்மதித்தாலும், நீங்கள் ‘Out of this world’ ஆகவே உணரலாம்.

CONCERN

முன்பொருமுறை ‘To whoever it may concern’ என்பதைப் பார்த்தோம். ஒரு வாசக நண்பர் " ‘Concern’ என்ற வார்த்தையைக் குறித்து கொஞ்சம் விளக்குங்களேன்" என்று கேட்கிறார். இந்த வார்த்தையில் அவர் ஓரளவு குழம்பியிருக்க வாய்ப்பு உண்டு. காரணம், அதன் பல்வேறு அர்த்தங்கள்.

‘தொடர்புடைய’ என்கிற அர்த்தம் இதற்கு உண்டு. This notification is mainly for those concerned in this Industry.

‘ஈடுபடுவது’ என்கிற அர்த்தத்திலும் இதைப் பயன் படுத்துகிறார்கள். We need not concern ourselves with this project.

பதற்றம் கொள்வது, கவலைப்படுவது என்பவையும் சில சமயம் concern என்ற வார்த்தைக்குப் பொருந்துகின்றன. The flat owners are concerned about the frequent thefts in the complex.

ஒரு நிறுவனம் என்ற அர்த்தத் திலும் concern என்பதைப் பயன்படுத்துகிறார்கள். Why do you want to work in a a small concern?

ஆங்கிலம் பயிற்றுவிக்கும் வகுப்பில் according என்ற வார்த்தையைத் தொடர்ந்து இடம் பெறக் கூடிய preposition எது என்ற கேள்வியை கேட்டேன். 90 சதவீதம் பேர் ‘to’ என்ற சரியான பதிலைக் கூறினார்கள்.

ஆனால் according to என்று தொடங்கும் ஒரு வாக்கியத்தை எழுதச் சொன்னபோது ‘according to me’ என்று தொடங்கும் வாக்கியங்களைப் பாதிப்பேர் எழுதி இருந்தார்கள். According to you, according to him, according to her, according to them போன்றவை எல்லாம் சரியான பயன்பாடுகள்தான். ஆனால் according to me வேண்டாம்.

பின் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்று என்னைக் கேட்கிறீர்களா? In my opinion, ‘in my opinion’ என்பதைப் பயன்படுத்தலாம் என்று சொல்வேன்.

ஒரு வாசகர் "ஒரு நூலில் "I don’t want to hear your cock and bull story" என்று படித்தேன். ஆனால், I want to hear the cock and bull story. கொஞ்சம் சொல்வீர்களா?" என்று ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார் .

"ஒரு காட்டில் ஒரு சேவலும், கோழியும் வசித்து வந்தன. இரண்டுக்கும் ஒன்றின்மீது ஒன்று மிகவும் பிரியம். "உன் கொண்டை மிகவும் அழகு" என்று ஒரு நாள் கோழி சேவலைப் பார்த்துக் கூறியது. பெருமையுடன் தலையசைத்த சேவலின் கண்களில் ஒரு மாறுதல். எதிரே எருது ஒன்று கோழியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

"இன்று எனக்கு சரியான உணவு" என்றபடி கோழியின்மீது பாயத் தொடங்கியது. கோழி பதற்றத்துடன் விலகியது. சேவல் மிகவும் கோபத்துடன் எருதைப் பார்த்து "எப்போதிலிருந்து நீ கோழிகளை எல்லாம் சாப்பிடத் தொடங்கினாய்?" என்று கேட்டது.

எருது இதற்குப் பதிலளிக்காமல் மூர்க்கத்துடன் கோழியை துரத்தத் தொடங்கியது. அவ்வளவுதான் சேவல் எருதின்மீது பாய்ந்தது. ஒரே அடி. எருது வெகு தொலைவில் போய் விழுந்தது. பின்பு பயத்துடன் அந்தக் காட்டை விட்டே ஓடிவிட்டது".

இப்படி ஒரு கதையைச் சொல்லி இதுதான் நீங்கள் குறிப்பிடும் ‘Cock and bull Story’ என்றால் அது ஒருவிதத்தில் சரி. மறுவிதத்தில் தப்பு.

மேற்படி கதை முழுக்க கற்பனை. ஆனால் இதுவும் ஒருவிதத்தில் Cock and bull storyதான். அதாவது ஒருவரை ஏமாற்றுவதற்காகக் கற்பனை செய்து இஷ்டத்துக்கு ‘கதைவிடுவதுதான்’ Cock and bull story.

தாமதமாக ஒரு வகுப்புக்கு வந்து சேர்ந்தார்கள் நான்கு மாணவர்கள். ஆசிரியர் காரணம் கேட்க, " நாங்கள் ஏறிவந்த கார் வழியில் பங்ச்சர் ஆகிவிட்டது" என்றார்களாம் அவர்கள். இது ஒரு Cock and bull story என்பதை உணர்ந்துகொண்ட ஆசிரியர், நான்கு பேரையும் தனித்தனியாகக் கூப்பிட்டு, "காரில் எந்த டயர் பங்ச்சரானது?" என்று கேட்க, விதவிதமான பதில்களைக் கூறி மாணவர்கள் மாட்டிக்கொண்டனர்.

Cock and bull Story என்பதன் விளக்கம் வேறு. Cock என்பது concoction என்பதன் சுருக்கம். பல்வேறு திரவங்களில் கலவையை concoction என்பார்கள். Bull என்பது இந்த இடத்தில் bully என்பதன் சுருக்கம். டென்மார்க் நாட்டு மொழியில் bullen என்றால், மிகைப்படுத்தப்பட்ட என்ற அர்த்தம். ஆக விதவிதமாக யோசித்து, எதிராளியை ஏமாற்றுவதற்காகக் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைதான் இது. அதாவது ‘concocted and bully story’.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x