Last Updated : 02 Jun, 2015 12:24 PM

 

Published : 02 Jun 2015 12:24 PM
Last Updated : 02 Jun 2015 12:24 PM

எளிமையாக இருப்பதாலேயே…

டெல்லியிலிருந்து திரும்பும்போது ஒரு வயோதிகர் ரயில் சிநேகிதரானார். 70 வயதிருக்கும். வயதாக ஆக அவருக்கு ஒரு விஷயம் உறைத்தது. நாட்கள் வீணே கழிகிறதே, எப்போது வேண்டுமானாலும் சாவு வரும் என்ற நிலையில், இன்னும் எப்போதும் டி.வி, சினிமா என்று இருக்கிறோமே, குத்தாட்டங்களை ஆனந்தமாய்ப் பார்ப்பதைக் கடவுள் விரும்புவாரா என்று தெரியவில்லையே என்று அவருக்குத் தோன்றுகிறது.

“திடீர்னு இறைவனை நினை, தியானம் பண்ணுன்னா என்ன பண்றது? அதெல்லாம் தெரிஞ்சாத்தானே? வயசானால் இதெல்லாம் தன்னாலயே தெரிஞ்சுரும்னு இளமையிலே நினைச்சுட்டேன்” என்றார்.

ஆன்மிக வயது

“வயதானால், அனுபவம் காரணமாக வாழ்க்கையைப் பற்றிய தெளிவும், பேச்சில் முதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம். உண்மையில், இவை ஏற்படுவதே நிறைய பேருக்குச் சாத்தியமில்லாத சூழலில், வயதான ஒரே காரணத்துக்காக ஆன்மிக அறிவு வாய்க்கப் பெற்று, கண்களில் தீட்சண்யம் கசியும்”னு எதிர்பாக்கறது சரிதானா? “ என்றார் பெரியவர்.

ஆன்மிகத்துக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்? வயதாவது ஒன்றே ஆன்மிக அறிவுக்கான சாவியைத் தந்து விடும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..? 100 வருடம் தமிழ் பேசினால்கூட அதன் இலக்கணங்கள் எல்லாம் கைகூடி விடும் என்று கருதுவதற்கு நியாயம் இல்லை.

எளிமையான விஷயம்

“தியானம் பண்ணுங்கறான்..மூச்சை இழுங்கறான்... குண்டலினி, துரியம், முக்திங்கறான், மாயை, ஆத்மாவுக்குக் காலாவதி ஆகிற தேதியே இல்லைங்கறான், திரும்பவும் பிறப்புங்கறான், ஒண்ணுமே புரியல தம்பீ, இளமைலயே பதில் தேடியிருந்தா இப்ப தெளிவா இருந்திருக்கலாமோ, என்னவோ, புரியாத இந்தச்சூழல்ல என்ன தோணிச்சுன்னா....” என்று இழுத்தார்.

நிமிர்ந்து உட்கார்ந்தேன். ரயிலின் சப்தம் குறைந்து எங்கும் அமைதி.

“ எல்லா மதமும், கடவுளும், கெட்டதை நினைக்காத...நல்லதையே நினை. மனசாட்சிக்கு விரோதமா செய்யாதேன்னுதான சொல்றாங்க. இனி அப்படியே இருந்துட்டுப் போறேன். எனக்குத் தெரிஞ்ச எளிமையான விஷயம் இது...” என்று முடித்தார்.

விதிகளின் புத்தகம்

ஒவ்வொரு அலுவலகத்திலும் விதிமுறைகளை மென்று ஜீரணித்து, விதிகளின் புத்தகமாய் நடமாடும் ஒருவர் இருப்பார். அப்படியொரு மதுரை நண்பர். தூக்கத்தில் எழுப்பினாலும், பிரிவு 154 என்ன சொல்லுதுன்னா...”என்று கொட்டாவியுடன் விதிகளை அவரால் கொட்ட முடியும். அவ்வளவு விதிகளும், ஓட்டைகளும் தெரிந்ததால்தான் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளித்துக்கொள்ள அவரால் முடிந்தது.

அதென்னவோ தெரியவில்லை. விதிகளைத் தெரிந்து வைத்திருப்பவர்களுக்குத்தான் அவற்றை உபயோகிக்க வேண்டிய அவசியமும் பெரும்பாலும் ஏற்படுகின்றது. அளவுக்கு மீறித் தெரிந்ததால்தான் பிரச்சினைகள் வருகிறதா. இல்லை, பிரச்சினை வந்ததால்தான் இவர்கள் தெரிந்து கொண்டார்களா என்பது புரியாத விஷயமாகவே இருக்கிறது.

தலையில் அடிபட்டுவிட்டது. கொஞ்சநேரத்தில் சரியாகாவிட்டால் டாக்டரிடம் போகலாம் என்பவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். மூளையின் உள்ளே அடிபட்டு இருக்கலாம் என்பவர்களுக்குத்தான் பிரச்சினையும், குழப்பமும் வருகிறது.

தெளிவே அறிவு

விதிகள் புத்தகமான அதே நண்பர் தனது ஜுனியரிடம் “எல்லா விதிகளையும் தெரிஞ்சு வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்காத. அது ஒரு கடல். விதிப் புத்தகம் எங்க இருக்குதுன்னு தெரிஞ்சாப் போதும். சிம்ப்பிள்.” என்றும் சொல்வார்.

எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் வாழுங்கள், அறிவில்லாமல் இருப்பதே சிறந்த அறிவு. வாழ்க்கையில் இன்பமாக இருக்க அளவுகடந்த அறிவு தேவையே இல்லை என்றெல்லாம் உபதேசிப்பதற்கல்ல இதையெல்லாம் சொல்வது. நிம்மதியையும், தெளிவையும் தருவதுதான் உங்கள் அறிவின் நோக்கமே தவிர, அவை, மேலும் குழப்பத்தையும், சிக்கல்களையும் தரக்கூடாது என்பதே.

எளிமையே தேர்வு

கசடற கற்றுப் புரிந்து கொள்ளுங்கள். அவை புரியாவிட்டால் அதில் உள்ளதிலேயே எளிமையானது என்று உங்களுக்குப் படுவதைத் தேர்வு செய்யுங்கள். நீட்டப்படும் பல கரண்டிகளில் இதுவரை பார்த்திராத கலவைகள். அவை கசக்கவும் செய்யும். விஷமாகவும் இருக்கலாம். உடனடியாக முடிவெடுத்து ஏதேனும் ஒன்றை ருசி பார்த்துத்தான் தீரவேண்டும் என்ற நிலையில் உங்களுக்குத் தெரிந்த எளிமையான பதார்த்தத்தைத் தேர்வு செய்யுங்கள்.அது நம்பிக்கையளிப்பதாகவே இருக்கும். குறைந்தபட்சம் அது உங்களுக்குத் திருப்தியைத் தரும்.

ஏனென்றால், எளிமையாக இருப்பதாலேயே அவை தரம் குறைந்ததாகவோ, பொய்யாகவோ ஆகிவிட முடியாது. எளிமையாக இருப்பதாலேயே அவை இகழத்தக்கதோ, பொய்யானதோ அல்ல.

ஹரித்துவார் நகரில் பெருக்கெடுத்தோடும் கங்கைக்கும், கங்கையின் ஆரம்பத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா? கங்கையின் பிறப்பிடம் நம்பமுடியாத அளவு எளிமையானது. பெரிய விருட்சத்தின் மூலம் ஒரு எளிமையான விதையாக இருக்கிறது.

எளிமை என்பதாலேயே

எளிமையாக இருப்பதாலேயே நாம் அவற்றின் சுலபமான தன்மையைக் கருதி அதைப் புறக்கணிக்கிறோம். இன்னும் சிக்கலாக்கிக் கொள்கிறோம். ரயில் எப்போது வரும், எப்படி ரிசர்வ் செய்வது, என்பது தெரிந்தால் போதுமானது. இன்ஜின் எப்படி வேலை செய்கிறது, எத்தனை பாகங்கள் உள்ளன, டிரைவர் எந்த யூனியனைச் சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் தெரியாவிட்டாலும், அவை நமது பயணத்தைச் சிக்கலாக்கப் போவதில்லை.

திருவனந்தபுரத்தில் ஒரு லேடி டாக்டர். மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி ஸ்கேன் ரிப்போர்ட்கள் என்ன சொல்கின்றன என்று நச்சரித்த என்னிடம் கூறினார். “இதெல்லாம் நீ பணம் கொடுத்து எடுத்ததுதான், ஆனால், இதன் விவரங்கள் எனக்குத்தான், உனக்கு அல்ல. எனக்குத்தான் குழந்தை எப்படி இருக்குன்னு புரிஞ்சாகணும். அதைத் தெரிஞ்சுக்கறதுக்குதான் நாங்க இருக்கறோம். இந்த மெடிக்கல் வார்த்தைகளையும், விவரங்களையும் புரியும்படி எளிமையா சொல்லணும்னா, குழந்தை நல்லா இருக்கு. போதுமா?' என்றார். ஒப்புக்கொண்டு நடையைக் கட்டினேன்.

எளிமையாக இருப்பதாலேயே அவை தரம் குறைந்ததாகவோ, இகழத்தக்கதோ ஆகிவிட முடியாது. சரிதானே?

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x