Published : 12 May 2014 12:00 AM
Last Updated : 12 May 2014 12:00 AM

எல்லாப் பாடல்களும் ஏழு ஸ்வரங்களுக்குள்

இசைக் கருவியைச் சாதி. மதம், பால் வேறுபாடுகள் அற்ற நிலையில் இசைத்து ஆன்மிக அனுபவம் பெற முடியும். இசையைக் கற்க இசை மீதான ஆர்வம் மட்டுமின்றி, கடுமையான உழைப்பும் தேவைப்படுகிறது. நாளும் இடைவிடாத பயிற்சியின் மூலம் யார் வேண்டுமானாலும் இசைக் கலைஞராக முடியும் என்கிறார்

‘தி மியூசிக் ஸ்கூல்’ நூலின் ஆசிரியரான செழியன். பத்துத் தொகுதிகளில் 1609 பக்கங்களில் மேற்கத்திய இசையின் நுட்பங்களைக் கற்றுத்தரும் செழியனின் ஆர்வம் பிரமிப்பு உண்டாக்குகிறது.

காற்று வாத்தியமான பியானோ, எலக்ட்ரானிக் கீ போர்டு மூலம் மேற்கத்திய இசையை எப்படி இசைப்பது என்பதைச் செழியன் நுட்பமாக விளக்கியுள்ளார். இந்திய மரபில் குருவிடமிருந்து பாரம்பரியமான முறையில் இசையைக் கற்கும் மரபு இன்றும் தொடர்கிறது. இம்மரபு வாய்ப்பாட்டுக்கு முழுக்கப் பொருந்தும். இசைக் கருவியை இசைத்து மேற்கத்திய இசையை அறிந்துகொள்ள ‘தி மியூசிக் ஸ்கூல்’ புத்தகம் அடிப்படையானது. இந்தப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள இசை தொடர்பான பயிற்சிகளை நூலின் ஆசிரியர் குறிப்பிடுவது போலத் தொடர்ந்து செய்யும் ஒருவரால் ஓராண்டிற்குள் இசையின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

மேற்கத்திய இசைக்கென இங்கிலாந்திலுள்ள லண்டன் டிரிடினி இசைக் கல்லூரித் தேர்வுகள் நடத்தி, எட்டு நிலைகளில் சான்றிதழ் வழங்குகிறது. கோட்பாடு, செய்முறை என நடத்தப்படும் தேர்வுகளில் கோட்பாட்டு நிலையில் மூன்று நிலைகளில் தேர்வெழுதி வெற்றியடைய ‘தி மியூசிக் ஸ்கூல்’ நூல் பெரிதும் உதவுகிறது. மேற்கத்திய இசையின் நுட்பங்களை நம்மால் அறிய முடியுமா என்ற தயக்கத்தைத் தகர்த்துத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் இந்நூல் தமிழில் புதிய முயற்சி.

மேற்கத்திய இசைப் பாடலின் நோட்டுகள் எப்படிப்பட்டவை? அவற்றின் பெயர்கள் என்ன? என்ன வகையான ரிதமில் இருக்கிறது? அவற்றின் கால அளவு என்ன? என அடிப்படையான விஷயங்கள் நூலில் விளக்கப்பட்டுள்ளன. அவை இசையை ரசிப்பதற்கும் இசைக் கருவியை இசைப்பதற்கும் புதிய இசையை உருவாக்குவதற்கும் பின்புலமாக உள்ளன.

செழியன், பல்லாண்டுகள் உழைத்துக் கற்ற இசையின் ரகசியங்களைப் பத்துத் தொகுதிகளில் தந்துள்ளார். கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ள அசுர சாதகம் முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகிறது. மேற்கத்திய இசையைக் கற்பதற்கும் அதுவே அடிப்படை. ஒரு நாள் ஒரு பாடம், குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் என்ற அடிப்படையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செழியன், கற்பவரை முன்னிறுத்திப் பாடங்களை உருவாக்கியுள்ளார். ஆசிரியர் நேரடியாக இல்லாவிடினும் அவரது குரல் பாடங்களில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. பேசுவதுபோல எழுதப்பட்டுள்ள பாடங்கள் வாசிப்பின் வழியே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. புதிதாகக் கற்பவர் எதிர்கொள்ள விருக்கும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்துள்ள ஆசிரியர், அதற்கான விளக்கங்களை எளிய மொழியில் தந்துள்ளார். அடுத் தடுத்துக் கேட்கப்படும் கேள்விகள் மாணவரின் கற்றல்திறனைச் செழுமையடையச் செய்யும்.

இசைப் பாடங்களைப் பயிலும்போது ஏற்படுகிற தீராத சந்தேகத்தைக் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அதற்கான பதில் அளிக்கப்படும் என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இது பயிற்சியை நடைமுறையுடன் தொடர்பு படுத்து கிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியைப்

பொய்யாக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இசை சார்ந்த பயிற்சியில் செய்முறை அறிவு அவசியம். எங்கெங்கு விளக்கங்கள் தேவைப்படுமோ அங்கெல்லாம் குறிப்பிட்ட இணையதளத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தும் இணைப்புகள் பாடம் முழுக்க உள்ளன. ஒலி வடிவில் கேட்கும் இசையானது பயிற்சியை எளிமைப்படுத்துகிறது. இசையின் நுட்பங்களை ஒலி வடிவில் அறியும்போது கற்பவரின் சந்தேகங்கள் தெளிவடையும்.

இசைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தினமும் மேன்மையான இசையை ரசனையுடன் கேட்டல், இசைக் கச்சேரிகளுக்குச் சென்று இசையின் நுட்பங்களைக் கண்டறிதல் வேண்டும் என்ற செழியனின் ஆலோசனை முக்கியமானது. இந்நூல் அழகிய அச்சமைப்பில் கற்பவரின் ஆவலைத் தூண்டுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தி மியூசிக் ஸ்கூல் :

மேற்கத்திய இசைப் பயிற்சியின் வழிகாட்டி. பத்துத் தொகுதிகள், செழியன். தி மியூசிக் ஸ்கூல் பதிப்பகம் சென்னை. விலை: ரூ. 7,000/-. கைபேசி: 9445762191. தொடர்புக்கு:

ந.முருகேசபாண்டியன்- murugesapandian2011@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x