

நவீன மனிதர்கள் ஆப்பிரிக் காவில்தான் தோன்றினர். சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்து ஐரோப்பா, ஆசியா, இந்தியா என உலகம் முழுவதும் படர்ந்து பரவிக் குடியேறினர் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஏன் ஆப்பிரிக்காவிலிருந்து நமது மூதாதைகள் இடம் பெயர்ந்தனர்?
நெருப்பின் முதல் பயன்
சுமார் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்பு நவீன மனிதர்கள் பிறந்தனர் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மனிதச் சாயல் கொண்ட விலங்குகளிலிருந்து ராமாபிதிகஸ் (Ramapithecus), அஸ்திரலோ பிதிகஸ் (Australopithecus), ஹோமோ எரக்டஸ் (Homo erectus) நியண்டர்தால் (Neandertals) எனும் பல படிநிலைகள் முதல் இன்றைய நவீன மனிதர்கள் வரை பல பரிணாம வளர்ச்சிப்படிகள் இதுவரை நடந்துள்ளன.
ஆயினும் இன்றைய மனித இனம் முழுமைக்குமான மூதாதையாக ஹோமோசேபியன் எனும் மனிதவகை சுமார் 2 லட்சம் வருடம் முன்பு ஆப்பிரிக்காவில்தான் தோன்றியது.
மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட சிறப்பு நெருப்பின் பயன்தான். ஏனைய விலங்குகள் நெருப்பைக் கண்டு விலகி ஓட மனிதர்கள் மட்டுமே நெருப்பைப் பயன்படுத்தும் விலங்குகளாய் இருந்தனர்.
சுமார் எட்டு லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதச் சாயல் கொண்ட, நவீன மனித இனத்தின் மூதாதையர் நெருப்பைப் பயன்படுத்தியதற்கான தடயம் உள்ளது. இஸ்ரேல் பகுதியில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள் இதை உறுதிப் படுத்துகின்றன.
குளிர் காய்வதற்காக அல்லது அடுப்பு மூட்டுவதற்காக, பயன்பட்ட நெருப்பின் தடயம் இங்குக் கிடைத்துள்ளது. ஹோமோ எரக்டஸ் எனும் இனத்தைச் சார்ந்த மனிதச் சாயல் விலங்குகள் இந்த நெருப்பைப் பயன்படுத்தி உள்ளன. அது இயற்கையில் உருவான நெருப்பா, அல்லது அவர்களே செயற்கையாக உருவாக்கிய நெருப்பா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆப்பிரிக்காவிலிருந்து
எப்படியானாலும், செயற்கையாக நெருப்பு மூட்டிப் பயன்படுத்திய தடயம் சுமார் ஒரு லட்சம் முதல் 60 ஆயிரம் ஆண்டுகள் வரை தொன்மையானது என்பது மட்டும் நிச்சயம்.
ஆப்பிரிக்காவின் காடுகளில், நவீன மனிதக் குடியிருப்புகளின் தொல் எச்சங்களில் நெருப்பின் உபயோகம் மற்றும் நெருப்பை உண்டாக்கும் கருவியின் தடயங்கள் கிடைத்துள்ளன. அதாவது, சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பாக, நெருப்பின் பயன்பாடு பரவலாக இருந்தது எனக் கூறலாம். இது நவீன மனிதனின் குறியீடு.
சுமார் 60 ஆயிரம் வருடம் முன்பாக, ஆப்பிரிக்காவிலிருந்து நவீன மனிதக் குடிகள் வெளியேறி உலகின் பல பகுதிகளில் குடியேறினர். நவீன மரபணு ஆய்வுகள் உலகம் முழுமையும் உள்ள மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றிய பூர்வீகக் குடிகளின் சந்ததியினர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்ல, எப்போது, எங்கே நவீன மனித இனம் குடிபுகுந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன.
சமீபத்தில் உலகம் முழுவதும் தன்னார்வலர்களின் உதவியோடு நடத்தப்பட்ட ஆய்வு ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் உலகம் முழுமைக்குப் புலம் பெயர்ந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறு இந்த நிகழ்வு ஏற்பட்டது என்பதையும் விவரமாக விளக்கியுள்ளது. சுமார் 60 ஆயிரம் - 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து நவீன மனித இனம் இந்தியாவுக்கு வந்து குடியேறியது எனவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஏன் இடப்பெயர்வு?
ஆப்பிரிக்காவின் காடுகளிலிருந்து உலகம் முழுமைக்கும் யாத்திரை செய்தது, ஏன்? ஆப்பிரிக்காவில் மலர்ந்த நவீன மனித இனம் அங்கிருந்து இடம் பெயர்ந்து உலகம் முழுமையும் பரவ முயன்றது, ஏன்? தொல் வரலாற்று அறிஞர்கள் விடை தேடும் கேள்விகள் இவை.
ஆப்பிரிக்கக் காடு தாங்கும் அளவைவிட மனிதர்களின் எண்ணிக்கை பெருகியதன் காரணமாகவே அவர்கள் இடம்பெயர்ந்தனர் என ஒரு சாரார் வாதிடுகின்றனர். மக்கள் தொகை பெருகப் பெருக அங்குள்ள இயற்கை வளம் மீது அதிக அழுத்தம் ஏற்படும்.
இயற்கை வளம் கிடைப்பது அரிதாகும்போது மனிதர்கள் அங்கிருந்து வெளியேறி வேறு இடம் தேடி ஓடினர் என்கின்றனர் சிலர்.
வேறு சிலர் எரிமலை வெடிப்பில் ஏற்பட்ட உலகத் தட்பவெட்ப நிலை மாற்றமே காரணம் என்கின்றனர். சுமார் 74 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமத்திராத் தீவுகளில் திடீர் எனப் பல எரிமலைகள் வெடித்தன. எரிமலைகள் கக்கிய தூசு, தும்புகளினால் வானம் இருண்டது.
உலகத்தின் தட்பவெப்ப நிலைமை மாறியது. மழை பொழிவதில் மாறுதல் ஏற்பட்டது. சுமார் ஆறு ஆண்டு காலத்துக்கு நீண்ட குளிர்காலம் ஏற்பட்டது என அறிஞர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே, மனிதர்கள் இடம் பெயர்ந்தனர் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி?
சமீபத்தில் நடத்தப்பட்ட வேறொரு ஆய்வு நவீன மனிதர்கள் பஞ்சம் பிழைக்கவோ, சுற்றுச்சூழல் அகதியாகவோ இடம் பெயரவில்லை, மாறாக, நவீன தொழில்நுட்பத்தின் புதுமையால்தான் இடம் பெயர்ந்தனர் எனத் தடாலடியாகக் கூறுகிறது.
80 ஆயிரம் ஆண்டுகள் முன்னால் கற்காலம் தான் இருந்தது. கல்லைச் செதுக்கித் தான் கருவிகள் செய்தனர். இந்தக் கற்காலத்தில் சுமார் 72 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முது கற்காலக் கட்டத்தில் ஆப்பிரிக்காவில் ஸ்டில்பே (stillbay) தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டது.
அதேபோல, சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹவுசாயின் போர்ட் (Howieson poort) தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டது. இரண்டு புரட்சியிலும் மேலும் நுட்பமான நவீன கல் கருவிகள் வடிவமைக்கப்பட்டன.
விலங்கின் தோலை உரிக்கப் பயன்படும் கருவி மற்றும் ஈட்டி முனையாகப் பயன்படும் கருவி முதலியவற்றைக் கற்களைச் செதுக்கி முதன்முதலில் படைத்த புரட்சி ஸ்டில்பே காலக் கட்டத்தில் உருவாகியது.
இது மேலும் செழுமைப்பட்டு சிறு கையடக்கக் கத்தி, பிளேடு, உளி, சுரண்டும் கருவிகள் எனப் பல பல புதிய பணிகளுக்கான கருவிகளாக உருவாயின.
நவீனக் கருவிகளைப் படைத்த மனித இனம் புது இடங்களுக்கு இடம் பெயர முடிந்தது. புதிய பகுதிகளிலும் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் எனப் பல வேலைகளில் ஈடுபட முடிந்தது.
புதிய கற்கருவி கொண்டு விலங்கின் தோலை உரித்து எடுத்து ஆடையாக அணிந்து குளிர் பிரதேசத்திலும் புலம் பெயர முடிந்தது. புது இடங்களில் ஏற்கெனவே இருந்த விலங்குகளைத் தாக்குப்பிடித்து அவர்களால் வாழ முடிந்தது. அவ்வாறுதான் ஆப்பிரிக்காவிலிருந்து நவீன மனித இனம் உலகம் முழுமைக்கும் பரவியது என இந்த நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தொடர்புக்கு: tvv123@gmail.com