Last Updated : 14 Jun, 2015 01:16 PM

 

Published : 14 Jun 2015 01:16 PM
Last Updated : 14 Jun 2015 01:16 PM

பெண் சக்தி: மறுக்கப்படும் பெண் எழுத்துக்கான குரல்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காரணமாகப் புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம். அந்தப் பயணத்தின்போதே கிட்டத்தட்ட 10 லட்சம் அப்பாவி மக்கள் மரணமடைந்தனர். 75 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர், கடத்தப்பட்டனர், வலுக்கட்டாயமாகக் கருவுறச்செய்யப்பட்டனர். ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கிராமங்கள் சிதைக்கப்பட்டன. வடக்கில் உள்ள பல நகரங்களின் நிலப்பரப்புகள் அகதி முகாம்களாயின. ஆனால் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை அவர்களுக்கான ஒரு நினைவுச் சின்னமோ, நினைவுகூரலோ இல்லை.

இது எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியாவின் வாய்மொழி சரித்திரப் பதிவான ‘மவுனத்தின் மறுபக்கம்: இந்தியப் பிரிவினையின் குரல்கள்’ (Other Side of Silence: Voices from the Partition of India) புத்தகத்தின் ஒரு பகுதி. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையிலிருந்து மீண்டவர்களில் எழுபதுக்கும் மேற்பட்டவர்களை நேர்காணல் செய்து உருவாக்கப்பட்ட நூல் இது. கடந்த பத்து ஆண்டுகளில் தெற்காசிய ஆய்வுகள் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு.

பிரிவினை என்னும் பயங்கரச் சம்பவத்துக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தன் நூல் முழுவதும் விவரிக்கிறார் ஊர்வசி புட்டாலியா. “நான் பதிவு செய்திருப்பவை முடிவுறாத உண்மைகள் மட்டுமே. அங்கு எழுந்த அலறல்களை அடக்கி நிலைநாட்டப்பட்ட மவுனத்துக்குள் உண்மை ஒளிந்து கிடக்கிறது” என்கிறார் ஊர்வசி.

இந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பாளர்

இந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பகமான காளி ஃபார் விமனை (Kali for Women) ரிது மேனனுடன் இணைந்து தோற்றுவித்தவர் ஊர்வசி புட்டாலியா. கடந்த முப்பது ஆண்டுகளாகப் பிற பதிப்பாளர்கள் பிரசுரிக்க மறுக்கும் பெண் படைப்புகளைப் பிரசுரிப்பதையே தன் சமூகக் கடமையாகக் கொண்டிருப்பவர். ஒருவரின் வீட்டுப் பணிப் பெண் சுயசரிதை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் சிறைவாசியின் நினைவுக் குறிப்புகள் என ஊர்வசி புட்டாலியா நடத்திவரும் சுபான் புத்தகங்கள் (Zubaan Books) பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள் சமூக அரசியல் முகமூடிகளைக் கிழிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து முன்னணிப் பத்திரிகைகளில் எதிர்வினையாற்றிவரும் பெண்ணியச் சிந்தனையாளர் இவர்.

பெண் எழுத்துக்குப் பொதுவெளி

தற்போது டெல்லியில் வசிக்கும் ஊர்வசி, 1952-ல் ஹரியானா மாநிலத்தின் அம்பாலா பகுதியில் பிறந்தார். இந்தியாவில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 1977-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். டெல்லியில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தது முதல் அவரது பதிப்பு அனுபவங்கள் தொடங்கின. 1982-ல் லண்டனில் உள்ள செட் புத்தகங்கள் (Zed Books) அமைப்பில் பெண்ணிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து 1984-ல் இந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பகமான காளி ஃபார் விமனை ரிது மேனனுடன் இணைந்து உருவாக்கினார்.

வளரும் நாடுகளைச் சேர்ந்த பெண்களின் நிலை குறித்து ஆழமான ஆய்வுகளைப் பிரசுரித்தது காளி பதிப்பகம். மேலும் பெண் எழுத்தாளர்களுக்கு ஒரு பொதுவெளியை உருவாக்கி அவர்களின் படைப்பாற்றலையும் கல்வியறிவையும் முன்னேற்ற விழைந்தது. ஆனால் 2003-ல் ஊர்வசியும் ரிது மேனனும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இயங்க முடிவெடுத்தனர். அதன் பின் ‘சுபான் புத்தகங்கள்’ பிரசுரத்தைத் தொடங்கினார் ஊர்வசி.

ஊர்வசியின் சிறந்த படைப்புகளின் மையப் பொருள் நவீன இந்தியாவின் பிரிவினை மற்றும் வாய்மொழி சரித்திரங்களாகும். தி இந்து, தி கார்டியன், தி நியூ இண்டர்நேஷனலிஸ்ட், அவுட் லுக், இந்தியா டுடே எனப் பல்வேறு நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் ஊடக அரசியல், அடிப்படைவாதம், இனவாதம், பாலினச் சிக்கல்களை விவாதப் பொருளாக்கிவருகிறார் இவர். தெஹல்கா பத்திரிகையில் இடது சாரி சிந்தனை கொண்ட பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

வறுமைதான் மிகப் பயங்கரமான அநீதி எனும் சித்தாந்தத்தில் வறுமையை ஒழிக்க இயங்கிவரும் ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அலோசகராகவும் இயங்கிவருகிறார். 2011-ல் ஊர்வசிக்கும் ரிது மேனனுக்கு சேர்த்து பத்ம  விருதை இந்திய அரசு வழங்கிக் கவுரவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x