மன்னரின் குடலுக்குத் தனி சமாதி
தந்தையும் பேரரசனுமான அக்பரின் எதிர்ப்பால் காதல் நிறைவேறாமல் போன சலீம், மதுவுக்கு அடிமையானதாகவும், அனார்கலி துயரத்தில் இறந்துபோனதாகவும் நம்பப்படுகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு ஜஹாங்கீர் என்ற பெயரில் சலீம் மன்னரானார்.
அனார்கலியின் இடத்தை நிரப்ப வந்தவள் மெஹருன்னிஸா. பாரசீக அழகி. கணவனை இழந்து தனிமையில் இருந்த மெஹருன்னிஸா பிறகு ஜஹாங்கீருக்கு மனைவியானார். ஜஹாங்கீர் அவருக்கு வைத்த பெயர்தான் நூர்ஜஹான் (உலகத்தின் வெளிச்சம்).
பெயரளவுக்கே ஜஹாங்கீர் மன்னன். உண்மையில் ஆட்சி செய்தது நூர்ஜஹான் தான் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
வேட்டையில் மரணம்
ஜஹாங்கீர் 1627-ன் கோடைகாலத்தில் நூர்ஜஹானுடன் நகர் சென்றார். அங்கே அவர் உடல்நிலை மோசமானது. ஆனாலும், லாகூரை நோக்கி பயணம் தொடங்கியது.
பயணத்தின் இடையே ஒருநாள் ஜஹாங்கீர் மான் வேட்டையாடினார். அப்போது செங்குத்தான பாறையிலிருந்து ஒரு வீரன் கீழே விழுந்து இறந்து போனான். தன்னையும் மரண தேவதை நெருங்கிவிட்டாள் என்னும் அறிகுறியாக இதை மன்னர் எடுத்துக்கொண்டார்.
மன்னரும் மரணத்தின் விளிம்புக்குச் சென்றுவிட்டார். அவரோடு தலைநகர் ஆக்ரா நோக்கி நூர்ஜகான் பயணித்தார். ஜம்முவை அடுத்த செனாப் நதியைத் தாண்டி, அக்னூர் கோட்டையை நெருங்கும்போது மன்னரின் மூச்சு நின்றுபோனது.
குடலுக்கு சமாதி
நூர்ஜஹானின் கையில் முகலாயப் பேரரசு முழுமையாக மாறிய கணம் அது. மன்னர் இறந்த ஜம்மு-காஷ்மீரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நட்பான சூழல் கிடையாது. அவற்றின் இடையில், மன்னரின் உடலை, தலைநகர் ஆக்ரா கொண்டு செல்ல வேண்டும். மன்னரின் மூன்றாவது மகன் குர்ரம் (பின்னாளில் ஷாஜஹான்) அடுத்த அரசனாகப் பொறுப்பேற்பதற்குள், வாரிசுப் போர் வெடித்துவிடக் கூடாது. மொகலாய பேரரசுக்கு ஏற்பட்ட இந்தச் சோதனையை ஒரு பெண் புலியாக நூர்ஜஹான் எதிர்கொண்டாள்.
இறந்துபோன மன்னரை உடன் வந்தவர்கள்கூட அறியாதபடி, தோளில் தாங்கி அக்னூர் கோட்டையிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பென் பாசர் கோட்டைக்கு வந்தாள். நெருக்கமானவர்களுடன் ஆலோசனை செய்தாள். மன்னரின் குடலை அப்புறப்படுத்தி அதைக் கோட்டைக்குள் புதைத்தனர். மன்னரின் வயிற்றைச் சுற்றிக் கட்டுப்போட்டு அரச ஆடைகளை அணிவித்து யானை மீது ஏற்றினாள். எப்போதும் போதையில் இருக்கும் மன்னர் இப்போதும் நூர்ஜஹானின் தோளில் சாய்ந்திருக்கிறார் என வீரர்கள் நினைத்துக் கொண்டனர். படையினர் பின்தொடர, மன்னரின் உடல் தவி, பசந்தர், சுக்வால், தர்ணா, உகநல்லா, காலிபாடி எனப் பல நதிகளைக் கடந்தது.
இரு சமாதிகள்
அரசன் இறந்து ஒரு வாரமாகிய பிறகு, அவரது உடல் பதான்கோட்டையை அடைந்தது. ஆக்ரா போக வேண்டுமென்றால் இன்னும் ஒரு வாரமாகும். அரசன் உயிரோடு இல்லை என்று தெரிந்தால் வாரிசுப் போட்டிக்காக எதுவும் நடக்கும். எனவே, மூன்றாவது மகன் குர்ரத்தை ஆக்ராவிலிருந்து லாகூருக்கு உடனடியாக வரச் சொன்னாள். லாகூரில், மன்னரின் படுக்கை அறைக்கு வெளியே நூர்ஜஹான் நின்றுகொண்டாள். “மன்னருக்குத் தற்போது உடல்நலமில்லை. தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், தனக்குப் பின் குர்ரம் அரசனாக வேண்டும் என்று விரும்புகிறார்” என்று தெரிவித்தாள். நிலைமை சீரடைந்ததும் மன்னர் இறந்த செய்தியை அறிவித்தாள். சுமுகமாக குர்ரம் அரசனாக்கப்பட்டார்.
இதனால், லாகூரில் மன்னரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதால் லாகூரில் ஒரு சமாதியும், மன்னனின் குடல் உள்ளிட்ட உறுப்புகள் அடக்கம் செய்யப்பட்ட பாசர் கோட்டையில் ஒரு சமாதியும் அமைக்கப் பட்டன. ஏறக்குறைய 250 மைல் தூர இடைவெளியில் இரு சமாதிகள் இருப்பது ஜஹாங்கீருக்கு மட்டுமே.
தன் கணவனுக்கு அருகில், சிறிய கல்லறை ஒன்றைத் தனக்காகவும் தன் வாழ்நாளிலேயே நூர்ஜஹான் வடிவமைத்துக்கொண்டார். ஆனால், இன்று இருவரின் கல்லறைகளையும் பிரித்தபடி, இடையே ஒரு ரயில் பாதை ஓடுகிறது.
- கட்டுரையாளர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி
