Published : 26 May 2015 11:30 AM
Last Updated : 26 May 2015 11:30 AM

விக்கி மட்டுமா, விகாஸும் தகவல் களஞ்சியம்தான்

விக்கி பீடியா தெரியும். விகாஸ் பீடியா தெரியுமா? இந்திய அரசின் தொலைத்தொடர்பு - தொழில்நுட்ப அமைச்சகம்தான் அதை நடத்துகிறது. ஹைதராபாத்தில் இயங்கும் கணினி வளர்ச்சி மையம் (Centre for Development of Advanced Computing CDAC ) விகாஸ்பீடியாவை ( >http://vikaspedia.in) இயக்குகிறது.

விகாஸ் என்ற இந்தி மொழிச் சொல்லுக்கு வளர்ச்சி என்று பொருள். பீடியா என்பதற்குக் களஞ்சியம் என்று பொருள். எனவே, விகாஸ்பீடியா என்பது வளர்ச்சிக்கு அல்லது மேம்பாட்டுக்கு உரிய செய்திகளைக்கொண்ட கலைக்களஞ்சியம் என்று பொருள்கொள்ளலாம்.

விகாஸ் பிறந்தது

விகாஸ்பீடியா 2014 பிப்ரவரி 18 - ல் இந்தி, தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம், அசாமி, ஆகிய மொழிகளில் தொடங்கப்பட்டது. 2014 ஜுலையில் தமிழ்மொழியிலும் தொடங்கப்பட்டது. தற்பொழுது மலையாளம், கன்னடம், வங்காளம், குஜராத்தி, என மொத்தம் 10 இந்திய மொழிகளில் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் தகவல்களைத் தருவது இதன் இறுதி இலக்கு. தமிழில் ஏறத்தாழ ஏழாயிரம் கட்டுரைகள் இதில் உள்ளன.

விகாஸ்பீடியா தளத்தில் வேளாண்மை, உடல்நலம், கல்வி, சமூகநலம், எரிசக்தி, மின்னாட்சி என்ற பகுப்புகளில் செய்திகள் உள்ளன. இந்தத் தளத்தின் மேம்பாட்டுக்குத் தன்னார்வலர்கள், அரசு, அரசு சாராத தொண்டு நிறுவனத்தினர், தனியார் அமைப்பினர் பங்களிப்பு செய்கிறார்கள்.

பகுப்புகளாய் பல செய்திகள்

கல்வி என்ற பகுப்பில் உள்ள செய்திகள் குழந்தைகள் பகுதி, ஆசிரியர்கள் பகுதி, என்று உள்ளன. வேளாண்மை என்ற பகுப்பில் வேளாண் இடுபொருள்கள், கால்நடைப் பராமரிப்பு, வேளாண் தொழில்கள், பண்ணை சார் தொழில்கள், அரசு திட்டங்கள், விவசாயக் கடன், வேளாண் காப்பீடு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காணொளிகளின் இணைப்புகள் இந்தப் பகுதியை வளமுடையதாக வைத்துள்ளன.

உடல்நலம் என்ற பகுப்பில் பெண்கள் உடல்நலம், குழந்தைகள் உடல்நலம், அரசுத் திட்டங்கள், ஊட்டச்சத்து, நோய்கள், மன நலம், முதல் உதவி, வாழ்க்கைமுறை மாற்றங்கள், ஆரோக்கியக் குறிப்புகள், தெரிந்து கொள்ள வேண்டியவை, உடல் நலம்- கருத்து பகிர்வு என்ற தலைப்புகளில் செய்திகள் தமிழில் உள்ளன.

சமூக நலம் என்ற பகுப்பில் ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, மலைவாழ் மக்கள் நலம், மூத்த குடிமக்கள் நலம், வறுமை ஒழிப்பு, நலிவடைந்த பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை என்னும் தலைப்புகளில் அரிய செய்திகள் உள்ளன.

எரிசக்தி என்னும் பகுப்பில் எரிசக்தி அடிப்படை, எரிசக்தி சேமிப்பு, எரிசக்தி திறன், எரிசக்தி உற்பத்தி, கிராம மக்களின் கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல், என்னும் தலைப்புகளில் செய்திகள் உள்ளன.

மின் ஆளுகை

மின்னாட்சி என்ற பகுப்புக்குச் சென்றால் மின்னாட்சி, அரசு மானியங்கள், பயனுள்ள ஆதாரங்கள், ஆதார் கார்ட் சேவை, வங்கி சேமிப்பு, பொது இ-சேவை மையம், இந்தியக் கூலி வழங்கல் சட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம், தொழிலாளர்களுக்கான போனஸ் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 என்ற தலைப்புகளில் செய்திகள் உள்ளன.

கருவுற்ற, பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புத் தொடர்பான தகவல்கள், குறிப்பிட்ட பயனாளிக்குக் கைப்பேசி வழியாகக் குரல் அழைப்பு வடிவில் வழங்கப்படுகின்றன. வல்லுநரைக் கேளுங்கள் என்ற மென்பொருள் வழியாகத் துறைசார் வல்லுநர்களிடமிருந்து நமக்குத் தேவையான விவரங்களை நம் தாய்மொழி வழியாகப் பெறமுடியும்.

இணையவழிப் பாடங்கள் (e-Learning Courses) என்ற மென்பொருள் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், சமூகத்தில் பின்தங்கிய மக்கள் அறிவுத்திறன்களைப் பயன்பெறும் வகையில் அவரவர் தாய்மொழியில் பாடங்களைக் கொண்டுள்ளன.

கற்பதற்கான வளங்கள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள், பல்துறை சார்ந்த செய்திகளை உள்ளடக்கிய குறுவட்டுகள் விகாஸ்பீடியாவால் வழங்கப்படுகின்றது.

இந்தத் தளத்தில் பங்களிப்போர் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டு, அதிகம் பங்களிப்பு செய்தோர் படத்துடன் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விகாஸ்பீடியாவில் உறுப்பினர்களாக இணைந்து அதில் இடம்பெற்றுள்ள வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுபோல் பங்களிப்பாளராக இணைந்து விகாஸ்பீடியாவில் செய்திகளை உள்ளிட இயலும். முன்பு உள்ளிடப்பட்ட செய்திகளை மேம்படுத்தவும் முடியும்.

உங்கள் பங்கை எப்போது நீங்கள் அளிப்பீர்கள்?

தொடர்புக்கு: muelangovan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x