

காரல் மார்க்ஸ் பிறந்த நாள்: மே- 5
காரல் மார்க்ஸ் (5 மே 1818 14 மார்ச் 1883) ஜெர்மனியில் பிறந்தவர். அவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். தன்னைப் போலவே மகனும் ஒரு வழக்கறிஞராக வர வேண்டும் என அவர் விரும்பினார். ஆனாலும், அவர் கட்டாயப்படுத்தவில்லை. மார்க்ஸ் சட்டம் படித்தாலும் தத்துவத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
அடக்குமுறை
படித்து முடித்ததும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். அப்போது மன்னராட்சி முறையில்தான் அவரது நாட்டில் ஆட்சி நடந்தது. அவரது பத்திரிகை மன்னராட்சியை எதிர்த்தது. மக்களின் பிரச்சினைகளை ஆதரித்தது. அதனால் மன்னரின் அடக்குமுறையைச் சந்தித்தது. இறுதியில் மூடப்பட்டது.
ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து சென்று குடியேறிய மார்க்ஸ் அங்கே ஆழமான பொருளாதார ஆய்வைச் செய்தார். அவரும் அவருடைய உயிர் நண்பர் எங்கல்ஸும் அமெரிக்கப் பத்திரிகை உள்ளிட்ட பல பத்திரிகைகளுக்கு எழுதினார்கள். அவர்களின் பல நூல்களில், மூலதனம், கம்யூனிஸ்ட் அறிக்கை, ஆகியவை மிகவும் முக்கியமானவை.
நாடுகளில் மார்க்ஸ்
மனிதரின் உழைப்புதான் செல்வத்தின் அடிப்படை என்றும் எட்டு மணிநேர வேலை நேரம் என்ற உரிமையை ஆதரித்தும் அவர் எழுப்பிய குரல் இன்றும் உலகில் பலதரப்பு மனிதர்களால் நினைவுகூரப்படுகிறது. மனித சமூகத்தின் உயிரியல்ரீதியான பரிணாம வளர்ச்சியை விளக்கிய டார்வினைப் போல, மனித சமூகத்தின் பொருளியல்ரீதியான வளர்ச்சிப் போக்கை மார்க்ஸ் விளக்கியுள்ளார். பொருளாதாரம், தத்துவம், அரசியல், வரலாறு உள்ளிட்ட பல துறைகளில் அவரின் கருத்துகள் தாக்கம் செலுத்தியுள்ளன.
வரலாற்றை உருவாக்குவதில் தலைவர்களைவிட, மக்கள்தான் தீர்மானகரமான பங்காற்றுகிறார்கள் என்ற கருத்தும் அத்தகைய பல ஆய்வுகளுக்கு வழிவகுத்துள்ளது. அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான அவரின் கருத்துகளை இன்று சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் உலகில் அமலாக்கி வருகின்றன. அவரது அரசியல் கருத்துகள் விமர்சிக்கப்பட்டாலும், அவற்றைப் பின்பற்றுகிற நாடுகளின் மக்கள் முன்னேறுவதைப் பொதுவாக யாரும் மறுப்பது கிடையாது.
மூலதனம் நூலின் முதல் தொகுதியை மட்டும் வெளியிட்டுவிட்டு 65 வயதில் மறைந்த அவரின் மற்றத் தொகுதிகளை எங்கல்ஸ் வெளியிட்டார்.
இன்றைய நமது பாடத்திட்டங்களில் விவாதிக்கப்படுகிற கருத்துகளிலும் நமது பணிச் சூழலிலும் அவரின் கருத்துகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.