Published : 09 May 2014 12:35 PM
Last Updated : 09 May 2014 12:35 PM

நட்சத்திரங்களுடன் என் வானம்..!: தங்கர் தேர்ந்தெடுத்த படம்

சிறப்பிதழ்களுக்கான வேலைகள் என்பது பத்திரிகைப் பணிகளில் சுவாரஸ்யமாக இருக்கும். தினம் ஒரு பிரபலம் என்ற கணக்கில் சந்தித்துக்கொண்டே போகும் நிலையில் இருப்போம். ஆனால், ஒரு சிறப்பிதழ் தயாரித்து முடிந்த பிறகு பத்திரிகைத் தொடர்பு என்பதைத் தாண்டி மனதில் நிற்கும் பிரபலங்கள் என்றால் ஓரிருவர் என்ற நிலைதான் எப்போதுமே இருக்கும். அப்படியொரு சிறப்பிதழ் தயாரிப்பில்தான் தங்கர்பச்சானை முதன்முதலாகச் சந்திக்க முடிந்தது. ஒரு பழைய போட்டோகிராபி புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய், அதில் அவருக்குப் பிடித்த புகைப்படங்களைக் குறித்துத் தரச் சொல்லி அது குறித்த கமெண்ட்களை வைத்துக் கட்டுரை எழுதலாம் என்று திட்டம்.

புத்தகத்தை வாங்கி முழுமையாகப் புரட்டியவர், "ரொம்ப அருமையான புத்தகமா இருக்கே… இதுல உங்களோட தேர்வு என்ன… அதைச் சொல்லுங்க முதல்ல" என்றார். இருள் நிறைந்த ஒளிப்பதிவு, முகத்தின் ரேகைகள் படரும் க்ளோசப், என்று சில படங்களைத் தேர்வு செய்து கொடுத்தவுடன், " ஒரு புகைப்படக்காரனா இந்தப் படங்களைப் பத்தி பல குறிப்புகளை நான் சொல்ல முடியும். அதுக்கான படங்களாகத்தான் உங்களோட தேர்வு இருக்கு. ஆனா, நான் வெறும் படப்பதிவாளன் மட்டுமில்லே… அதைத் தாண்டி எனக்கும் சில சமூகப் பொறுப்புகள் இருக்கு. அதனால என் தேர்வுப் பட்டியல் வேற மாதிரி என்று சொல்லிவிட்டுச் சில படங்களைத் தேர்வு செய்தார்.

அதில் இன்றுவரையில் நினைவில் நிற்கும் படம் ஒரு வேலைக்காரப் பெண்மணி பெரிய மாளிகையில் அமர்ந்து தரை துடைத்துக்கொண்டிருக்கும் படம். அதைக் கையில் எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தில் இருக்கும் களைப்பு, அந்தப் பெண் ஒரு கையை ஊன்றியிருப்பதில் தெரியும் அழுத்தம் என்று உழைக்கும் வர்க்கத்தின் எல்லா அம்சங்களையும் விளக்கிச் சொன்னார். வெறுமே லைட்டிங், கோணம் என்ற அளவில் வந்திருக்க வேண்டிய அந்தக் கட்டுரையில் சமூகம் சார்ந்த விஷயங்களைப் புகுத்தி, அதை வித்தியாசப்படுத்தினார்.

கட்டுரைகள் வெறுமே பொழுதுபோக்குக்காக மட்டும் அமையக் கூடாது; அதைத் தாண்டி நம் சமூக அக்கறையையும் கோடிட்டுச் சொல்ல வேண்டும் என்ற கருத்தை என்னுள் விதைத்தவர் அவர்தான்.

எப்போது தங்கர்பச்சானிடம் பேட்டிக்குச் சென்றாலும் காரசாரமான தலைப்பு நிச்சயம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எதையுமே அவர் திட்டமிட்டுச் செய்ய மாட்டார். தன்னுடைய கோபத்தை முழு உணர்வோடு வெளிப்படுத்துவார். அவரைப் பேட்டி எடுத்துவிட்டு வந்தால் எதைத் தலைப்பாக வைப்பது என்று குழப்பம் ஏற்படும் வகையில் பல விஷயங்களைப் பேசியிருப்பார்.

பேட்டி எடுக்கச் செல்லும் நிருபரிடம், "உங்க ஊர்ல என்ன தானியம் விளையும்… உங்களுக்கு வயல் இருக்கா… விவசாயம் செய்றது யாரு..?" என்றெல்லாம் கேள்வி கேட்கும் பிரபலம் தங்கர்பச்சானாக மட்டும்தான் இருக்கும். "நீங்க யாரா வேணா இருந்துட்டுப் போங்க… நீங்க விவசாயி மகனா இருக்கறதுதான் பெருமை. நான் இன்னிக்கும் அதைச் சொல்லித்தான் பெருமைப்பட்டுக்கறேன்" என்பார்.

பத்திரிகைக்கு எது பயன்படும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார் அவர். ஒருமுறை, "எவ்ளோ சீக்கிரம் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வரமுடியுமோ அவ்ளோ சீக்கிரம் வாங்க…" என்று போன் பண்ணினார். அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினால் அங்கே மஜ்னு படத்துக்கான போட்டோ டெஸ்ட் ஷூட் நடந்து கொண்டிருந்தது. "பிரசாந்த் ஹீரோ, அவருக்கு ஜோடி டிம்பிள் கபாடியா பொண்ணு ரிங்கி கன்னா நடிக்குது. இன்னும் கன்பர்ம் ஆகலை. படத்துக்கு ஹீரோயினா வருதோ இல்லையோ …உங்களுக்கு அட்டைக்கு உதவுமேனுதான் வரச் சொன்னேன்" என்றார்.

கதைகள் எழுதி அவை வெளியாகும் சமயங்களில் அவற்றைப் படித்துவிட்டுக் கதை பற்றிய ஆழமான கருத்துகளைச் சொல்வார். "கதையிலே, நாம நம்ம கருத்தைச் சொல்றது முக்கியம்தான். ஆனா, அதை கதைக்குள்ளே மறைச்சு வைக்கணுமே தவிர, பிரசங்கமாச் சொல்லக் கூடாது. என்னோட ஒன்பது ரூபாய் நோட்டு கதையைப் படிச்சிருக்கீங்களா?" என்று தன் படைப்புகளைப் பற்றியும் அதன் பின்புலம் பற்றியும் விளங்கச் சொல்லி அடுத்த கதையை நன்றாக எழுதிவிட வேண்டும் என்னும் நம்பிக்கையை நமக்குள் விதைத்துவிடுவார்.

பத்திரிகைக்குள்ளே ஏன் நிக்கிறீங்க… அதைத் தாண்டி வரலாமே என்று எப்போதோ சொன்னதை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டிக்காக வந்திருந்தபோது நினைவுபடுத்தி சந்தோஷப்பட்டார். மிகச் சமீபத்தில் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்று சிறந்த படங்களைப் பார்த்து தேர்வு செய்துவிட்டு வந்திருந்த தங்கர்பச்சானை சமீபத்தில் சந்தித்தபோது, "ஃபன்ட்ரீ(Fandry) முக்கியமான படம்… ரொம்ப பயன்படும் உங்களுக்கு.' என்றார்.

நீங்கள் பத்திரிகையாளனாக இருக்கும்போது தங்கர்பச்சான் நல்ல கட்டுரைகளைத் தருவார். எழுத்தாளனாக இருக்கும்போது நல்ல கதைகளைத் தருவார். காட்சி ஊடகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் நல்ல சினிமாக்களைத் தருவார். மொத்தத்தில் அவர் எப்போதுமே தகவல் களஞ்சியம்.

தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x