Published : 25 May 2015 12:32 PM
Last Updated : 25 May 2015 12:32 PM

துணிவே தொழில்: ஆலோசகரை எப்படி அடையாளம் காணலாம்?

தொழில் தொடங்கி அதில் வெற்றி பெறுவதற்கு மென்டார் எனப்படும் குரு அவசியம் என்பதை கடந்த வாரம் பார்த்தோம். ஒரு தொழிலைத் தொடங்கி நாம் வைத்த இலக்கை நோக்கி முன்னேறும்போது அதில் எதிர்ப்படும் இடையூறுகள், பிரச்சினைகளைச் சமாளிக்க இத்துறையில் அனுபவம் மிக்கவரின் ஆலோசனை அவசியமாகிறது.

ஒரு பிரச்சினையில் இருக்கும் நீங்கள் அதிலிருந்து மீள்வதற்கு வழிதேடும்போது பிரச்சினையின் தீவிரம் காரணமாக உங்கள் பார்வையில் வழி தெரியாமல் போகும். அதேசமயம் வெளியிலிருந்து உங்கள் பிரச்சினையைப் பார்ப்பவருக்கு தவறு எங்கே என்பது தெளிவாகத் தெரியும். அத்துடன் அதிலிருந்து வெளியே வருவதற்கான வழியும் தெரியும்.

மென்டாரை தேர்வு செய்யும்போது அவருக்கு 4 விதமான குண நலன்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய வேண்டும். பின்வரும் குணநலன்களைக் கொண்டவரை தேர்ந்தெடுத்தால் தொழிலில் வெற்றி நிச்சயம்.

1. உங்கள் ஆலோசகர் 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் தொழிலில் 20 ஆண்டுக்கும் மேலான அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்றேன். எனக்கு மிகவும் பரிச்சயமான, தெரிந்த துறைகளான பிராண்டிங், சந்தைப்படுத்துதல் உள்ளிட் டவற்றை விவரித்தேன்.

ஆனால் அங்கிருந்தவர்களுக்கு அது எந்த அளவுக்கு பயனுள்ளதாயிருந்திருக்கும் என்பது புரியவில்லை. ஒரு தொழிலில் இதுபோன்ற பரந்துபட்ட விளக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு உதவாது. மாறாக ஒரு ஆலோசகரின் ஆலோசனை உதவிகரமாக இருக்கும். பலரது ஆலோசனையை விட ஒரு மென்டாரின் ஆலோசனையில் உள்ள வித்தியாசம் நன்கு புரியும்.

2. மென்டாருக்கு உங்கள் பலம், பலவீனம் தெரியும். மென்டாராகத் திகழும் பலருக்கும் தங்களிடம் ஆலோசனை பெறுபவரது பலம், பலவீனம் நன்கு புரியும். இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை இங்கு கூறுவது சரியாக இருக்கும். ஒரு இணையதள டிசைனர் இருந்தார். ஆனால் தனது தொழில் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது தெரியவில்லை.

இணையதள வடிவமைப்பு யாருக்கு தேவைப்படும் என்பதும் அவருக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் தேவை மென்டார் எனப்படும் ஆலோசகர். கல்லூரி கால நண்பர்கள், உள்ளிட்டவர்களை சமூக இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற முடியும்.

3. ஆலோசகர் என்பவர் உங்களுக்கு நேரடியாக தொடர்புள்ளவராக இருக்க வேண்டும் என்பதல்ல. அவருடன் நீங்கள் அடிக்கடி உரையாடி தீர்வு காண வேண்டும் என்பதல்ல. அவர்கள் இந்த உலகில் எந்த ஒரு மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களைப் பற்றிய முழுவிவரத்தையும் நீங்கள் அறிந்து கொண்டு அவரை நீங்கள் குருவாக ஏற்கலாம். அவர்கள் எதைப் படிக்கிறார்கள், அவர்களது அன்றாட பழக்க வழக்கங்கள் என்ன? அவர்கள் எதைப் பார்த்து வியக்கிறார்கள்? அவர்களிடையே தாக்கம் ஏற்படுத்தியது எது?

அவர்கள் எதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறார்கள் ஆகியவற்றை அவர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதன் தெரிந்து கொள்ளலாம். உங்களது மென்டார் உயிருடன் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு (புத்தகங்கள் வாயிலாக) அவரை உங்கள் மென்டாராக ஏற்கலாம்.

அவரது வாழ்வியல் அனுபவங்களை நீங்கள் உங்கள் தொழிலில் பயன்படுத்தலாம். இவ்விதம் உங்களைக் கவர்ந்தவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக இறந்திருக்கலாம்.

4. எப்போதும் நல்லதையே நினை யுங்கள். உதவி தேவைப்படும்போது அதற்குரிய எதிர் பார்ப்பும் இருக்கும். அத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும்போது ஆலோசனைகள் வரு வது தவிர்க்க முடியாது.

இணையதள உலகில் நீங்கள் விரும்பும் மென்டாரின் இணையதள முகவரியைப் பெறுவது கடினமான விஷயமல்ல. நீங்கள் தொடர்ந்து முயலும்போது அவரிடமிருந்து நிச்சயம் பதில் கிடைக்கும்.

நீங்கள் ஆலோசனை எதிர்பார்க்கும் போது, உங்களிடமிருந்து எதையாவது அவர் எதிர்பார்ப்பார் என்பதை உணருங்கள். உள்ளூர் தொழில் முனைவோராக இருந்தாலும், கல்லூரி பேராசிரியாராக இருப் பவரும் கூட தங்களது நேரத்தை ஒதுக்கி ஆலோசனை தர முடியும் என்பதை நீங்கள் உணருங்கள். உரிய ஆலோசகரைத் தேர்ந்தெடுங்கள், தொழிலில் வெற்றி பெறலாம்.

aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x