Published : 09 May 2014 12:00 AM
Last Updated : 09 May 2014 12:00 AM

வளர்த்தவர்களை எட்டி உதைக்கும் தொலைக்காட்சிகள்- கேயார் பேட்டி

தயாரிப்பாளர் சங்கம் இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்படுவது வாடிக்கையாகியிருக்கிறதே? கடந்த காலத்திலும் இதுதான் நிலைமையா?

நிச்சயமாக இல்லை. சங்கத் தேர்தலில் கட்சி அரசியல் புகுந்ததும், சிலர் தங்கள் சொந்த நன்மைக்காகச் சங்கப் பதவிகளைப் பயன்படுத்த நினைத்து உள்ளே வந்ததும்தான் இதற்குக் காரணங்கள். 2006-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இராம. நாராயணன் போட்டியிட்டார். ஒரு அமைப்பு என்றால் ஆளும் அரசுக்கு இணக்கமாகச் சென்றுதான் ஆக வேண்டும். எனவே திமுக சார்பில் போட்டியிட்ட இராம. நாராயணனுக்குப் போட்டியாக நாங்கள் யாரையும் நிறுத்தவில்லை. செயலாளர், துணைச் செயலாளர், செயற்குழு பொறுப்புகளுக்கு நான், சகோதரி கமீலா நாசர் உள்ளிட்ட எங்களது அணி போட்டியிட்டது. வாக்குகளில் பாதியை எண்ணிக்கொண்டிருக்கும்போதே பெரிய வித்தியாசத்தில் எங்களது அணி வெற்றிபெறுவது முடிவாகிவிட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிலர், வாக்குப் பெட்டிகளை உடைத்து, வாக்குச் சீட்டுகளை எரித்து ரகளையில் ஈடுபட்டார்கள். இவையெல்லாம் நடந்து முடிந்ததும் இராம. நாராயணன் உள்ளே வந்து வருத்தப்பட்டார். அவர் வருத்தம் தெரிவித்து முடிப்பதற்குள் திமுதிமுவென்று ஐந்நூறு போலீஸார் தயாரிப்பாளர் சங்க வளாகத்துக்குள் குவிக்கப்பட்டுவிட்டார்கள். வெற்றியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு எங்களை வற்புறுத்தினார்கள். அவர்களை மீறி எதையும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அடுத்து ஐந்தாண்டுகள் அவர்களுடைய ராஜ்ஜியமாகத்தான் இருந்தது.

2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. இராம. நாராயணன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். துணைத் தலைவாரக இருந்த எஸ்.ஏ. சந்திரசேகரன் தன்னைத் தலைவராகத் தன்னிசையாக அறிவித்துக்கொண்டார். நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். “அடுத்த தேர்தலை அறிவிக்காமல் என்னை ஒரு வருடம் விட்டுவிடுங்கள். இன்னும் நான்கைந்து வருடங்களில் மகனை முழு வீச்சில் அரசியலில் இறக்கலாம் என்று இருக்கிறேன்” என்று எஸ்.ஏ.சி. என்னிடம் வெளிப்படையாகக் கேட்டார். “அப்படிச் செய்ய சங்கத்தின் சட்டம் இடம் கொடுக்காது. தேர்தல் மூலம் பதவிக்கு வந்தால்தான் உங்களுக்கும் மரியாதை” என்று நான் மறுத்துவிட்டேன். அதை அவர் புரிந்துகொண்டார்.

பிறகு தேர்தலை அறிவித்தபோது நான் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட்டேன். எதிரணியில் எஸ்.ஏ.சி. போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு தாணு போட்டியிடுகிறார். உறுப்பினர்களுக்குப் பணத்தையும், இலவசங்களையும் கொடுத்தது மட்டுமல்ல, ஒவ்வொரு உறுப்பினரையும் வீடு வீடாகச் சென்று பார்த்து உங்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வாக்குறுதி கொடுக்கும் தவறான கலாச்சாரத்தை உருவாக்குகிறார். நடிகர் விஜய்யை ஒவ்வொரு உறுப்பினருக்கும் போன் செய்ய வைத்து ஓட்டு கேட்டார். இத்தனைக்குப் பிறகு வெறும் பதின்மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.ஏ.சி. ஜெயிக்கிறார். எங்கள் அணியில் சங்கத்தின் செயலாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பாதிக்குப் பாதியாக வெற்றிபெற்றோம்.

சங்கத்தின் பதவியேற்பு விழாவில், “தேர்தலுக்கு முன்புதான் நாம் இரண்டு அணிகள். இனி ஒரே அணியாகச் செயல்படுவோம். எனது அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பேசினேன். எஸ்.ஏ.சி. என்னைவிட மூத்தவராக இருந்தாலும் சங்கச் செயல்பாடுகளில் அவருக்கு அனுபவம் கிடையாது. வெற்றிபெற்ற பிறகு அவர் சங்க அலுவலகத்தை மாதம் ஒருமுறை எட்டிப் பார்த்தார். எந்த வேலையும் நடக்கவில்லை. விஜய்யின் கால்ஷீட் பெற வேண்டும் என்பதற்காகவே எஸ்.ஏ.சிக்கு ஜால்ரா தட்டி அவரையும் செயல்பட விடாமல் முடக்கியவர் தாணுதான்.

ஃபெப்சி திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லையே?

எஸ்.ஏ.சி. தலைவர் பதவி ஏற்றதும் ஃபெப்சி சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்ததால் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்ததைத் தொடங்கினார்கள். கடந்த 20 வருடங்களாகத் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச் சபையில் வைத்துப் பேசி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஃபெப்சி தொழிலாளர் சம்பளம் சுமுகமாக இரு தரப்புக்கும் ஏற்புடையதாக முடிவுசெய்யப்படும். ஆனால் இந்த முறையைச் சிதைக்கும் விதமாக சம்பளப் பேச்சுவார்த்தையை லேபர் கமிஷனுக்குக் கொண்டு சென்றுவிட்டார் எஸ்.ஏ.சி.

இங்கே வேலைநிறுத்தம் நடந்தபோது அதை சுமுகமாக முடித்து படப்பிடிப்புகள் தொடர அவசர கால அடிப்படையில் செயல்படுவதை விட்டுவிட்டு, விஜய் படத்தின் படப்பிடிப்பை மும்பையில் நடத்தினார் எஸ்.ஏ.சி. ஆனால் அதுபோல் வெளி மாநிலத்துக்குக் கொண்டுசெல்ல வழியில்லாத 67 தயாரிப்பாளர்களின் படங்கள் 48 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாக முடங்கின. இதை நாங்கள் அப்போது தட்டிக்கேட்டோம்.

மிக விரைவில் சம்பளப் பிரச்சினையைச் சுமுகமாகப் பேசித் தீர்த்து ஒப்பந்தம் போட்டே தீருவோம். சின்ன படங்கள், பெரிய படங்கள் என்று இரண்டு வகையாகப் பிரித்துக்கொண்டு தொழிலாளர் சம்பளப் பிரச்சினையை முடிப்போம். அதற்கு ஃபெப்சியின் தலைமை நிர்வாகிகள் ஒத்துழைக்க முன்வந்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகள் தயாரிப்பாளர்களைக் கிள்ளுக்கீரைகள் போல் ஆக்கிவிட்டதாக நீங்கள் ஒரு விழாவில் பேசீனீர்களே?

உண்மைதான். வளர்த்த கடா மாரில் பாயும் என்பார்களே அந்த நிலைதான். பெரிய நட்சத்திரங்களின் படங்களை மட்டுமே வாங்குவோம் என்று தொலைக்காட்சிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். தொலைக்காட்சிகள் சினிமாவை நம்பித்தான் தொடங்கப்பட்டன. இன்றும் சினிமாவையும், சினிமா நிகழ்ச்சிகளையும் நம்பித்தான் இயங்குகின்றன. தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது. அவர்களது வருமானம் ஆயிரம் கோடிகளில் இருக்கிறது. அவர்களுக்கு கன்டன்ட் கொடுக்கும் தயாரிப்பாளர் இனம் இன்றைக்கு அழிந்துகொண்டிருக்கிறது. இதற்கு அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன். எங்களிடையே விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். சினிமாவைப் பொறுத்தவரை தற்போதைய வருமானத்தில் 80 சதவீத வருமானம் எலக்ட்ரானிக் மீடியாவில் இருந்துதான் வருகிறது. மீதமுள்ள 20 சதவீதம்தான் திரையரங்குகள் மூலம் வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்படும் படத்தின் பாடல்கள் கிளிப்பிங்குகளுக்கு உரிய தொகையை கேபிள் டிவிகளிடமிருந்து நேரடியாகத் தயாரிப்பாளர் சங்கமே பெற்று தயாரிப்பாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். கிளிப்பிங்குகளை வாங்கி ஒளிபரப்புவதாகப் போக்குக் காட்டிவிட்டு, முழுப் படத்தையும் திருட்டுக் கேபிள் படமாக ஒளிபரப்பி வந்தவர்கள் இனி அப்படிச் செய்ய முடியாது. அதையும் தீவிரமாகக் கண்காணிப்போம்.

மேலும் தயாரிப்பாளர் சங்கமே தொலைக்காட்சி சேனல் ஒன்றைத் அறிமுகப்படுத்த இருக்கிறது. அப்போது தயாரிப்பாளர் இனம் உயிர்பெறும். ஆடியோ உலகின் அவலம் பற்றிப் பேச ஆரம்பித்தால் ரத்தக் கண்ணீர்தான் வரும். அதேபோல சின்ன படங்களை மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் கண்டுகொள்வதே இல்லை. இதையும் தட்டிக் கேட்காமல் விட மாட்டோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x