Published : 08 May 2015 10:51 am

Updated : 08 May 2015 10:51 am

 

Published : 08 May 2015 10:51 AM
Last Updated : 08 May 2015 10:51 AM

திரைப் பாடம் 23- குற்றவாளிகள் குழந்தைகளாக மாறினால்...

23

தோ ஆங்கே பாரா ஹாத்

குற்றவாளிகள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா என்ற உளவியல் கேள்விக்குத் தட்டையாகப் பதில் கூற முடியாது. மரபணுக்கள், மூளையின் செயல்பாடு, சில மனோவியாதிகள் போன்றவை சமூக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடச்செய்யும்.


குடும்பமும் சமூகமும்தான் குற்றவாளிகளை அதிகம் உருவாக்குகின்றன என்பது உண்மை. போதுமான தாயன்பு கிடைக்காத பற்றாக்குறையான சூழல் குற்ற ஆளுமையை உருவாக்குவதற்கு அதிக சாத்தியமாக அமைகிறது என்ற கூற்றை முன்வைத்த பவுல்பி எனும் உளவியல் ஆராய்ச்சியாளர் குற்றவியலுக்குப் புது ரத்தம் பாய்ச்சினார்.

குற்றவாளி எனும் சமூக பிம்பம் அவனை/ அவளை எப்படிக் காலம் முழுவதும் குற்றவாளியாகவே வைத்திருக்கச் செய்கிறது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். ஒரு முன்னாள் கைதிக்குப் பெண் தருவோமா, வேலை தருவோமா, வீடு வாடகைக்கு தருவோமா?

குற்றவாளிகள் தண்டிக்கப் படுகிறார்கள். ஆனால் சீர்திருத்தப்படுகிறார்களா? சிறைச்சாலைகள் தண்டனைச் சாலைகளா, சீர்திருத்தக் கூடமா? சீர்திருத்தக்கூடம் என்றால், சிறை என்ற நிறுவனத்தின் செயல்பாடுகள் அப்படி ஒரு மன மாற்றத்தைக் கொண்டு வரும் ரசவாதக் களமாக இருக்கின்றனவா? தனிமையும், நேரமும், சரியான அறிவுரையுமே ஒரு குற்றவாளியைச் சீர்திருத்திவிட முடியுமா? குற்றவாளிகள் பற்றிய சமூக எண்ணத்தை மாற்றிவிட முடியுமா?

இப்படிக் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கான ஒரு விடைதான் திறந்தவெளிச் சிறைச்சாலை. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏர்வாடா எனும் இடத்தில் அமைந்த சிறை நன்னடத்தையுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றவாளிகளைச் சற்றுச் சுதந்திரமான இடத்தில் தொழில் செய்ய வைத்து மனமாற்றத்தை உண்டாக்க முயல்கிறது. திஹார் சிறைச்சாலையில் கிரண் பேடியின் நிர்வாகத்தில் சிறைக் கைதிகள் விப்பாசனா கற்று மனமாற்றம் பெற்ற நம்பிக்கைக் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இன்று குற்றங்கள் பெருகிவரும் சூழலில் குற்றவாளிகளின் மனமாற்றம் பற்றிய படைப்புகள் மிக அவசியமானவை. அந்த வகையில் ‘தோ ஆங்கே பாரா ஹாத்’ படம் முக்கியமானது.

இந்தியாவின் பழம்பெரும் இயக்குநர் சாந்தாராமின் படைப்பு. வெளியான ஆண்டு 1957. மனிதாபிமான உளவியல் சிந்தனையைக் கலாபூர்வமாக்கிய படைப்பு இது. எட்டாவது பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் வெள்ளிக் கரடி விருது பெற்று உலகின் கவனத்தைப் பெற்ற இந்திப் படம்.

‘தோ ஆங்கே பாரா ஹாத்’ என்றால் இரு கண்களும் பன்னிரண்டு கைகளும். சிறை அதிகாரி ஒருவர் ஆறு கொலைக் குற்றவாளிகளைத் தன் பொறுப்பில் விடுவித்து சமூகத்தில் கலந்து வாழச் செய்து அவர்களைச் சீர்திருத்துவதுதான் கதைக் கரு. ‘மை சிக்ஸ் கன்விக்ட்’ (My six convict) என்ற பிரெஞ்சுப் படத்தின் தாக்கத்தில் உருவான திரைக்கதை. “இது எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படமாச்சே?” என்கிறீர்களா? ஆமாம். எம்.ஜி.ஆர். தமிழிலும் என்.டி.ஆர். தெலுங்கிலும் இதை மறு ஆக்கம் செய்து வெற்றி பெற்றார்கள்.

படத்தை இயக்கியதோடு ஆதினாத் எனும் சிறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார் சாந்தாராம். அவர் மனைவி சந்தியாதான் படத்தின் கதாநாயகி.

தன் மேலதிகாரியின் எச்சரிக்கையையும் மீறிக் கொலைக் குற்றத்துக்காகச் சிறைக் கைதியாக வாழும் ஆறு பேரைத் தன் பொறுப்பில் வெளியே அழைத்துச் செல்கிறார். “உங்களை நம்பித்தான் இந்தச் சமூக ஆய்வைச் செய்கிறேன்” என்று கூறி அவர்களைத் தன் சொந்த நிலத்திலேயே பணி புரிய வைக்கிறார். வறண்ட நிலத்தில் விவசாயம் செய்ய, மண்ணும் மனமும் வளம் பெற ஆரம்பிக்கின்றன. பல சிக்கல்களுக்கும் போராட்டத்துக்கும் பின்னர் அவர்களிடம் மன மாற்றத்தைக் கொண்டுவருகிறார்.

விளைந்த காய்கறிகளைக் குறைந்த விலைக்கு விற்கச் செல்கையில் அதனால் பாதிக்கப்பட்ட வியாபாரியால் பலி ஆகிறார் சிறை அதிகாரி.

சிறைக் கைதிகளின் சீர்திருத்தம் என்பது வெறும் உபதேசங்களில் மட்டும் நடப்பதில்லை. அதே போல் திடீர் சுதந்திரம், மது, பெண்ணாசை, கொலை எண்ணம், திருட்டு போன்ற இச்சைகளில் சிக்கிப் பின்னுக்குப் போகும் கைதிகளைக் கருணை, கண்டிப்பு என இரு முறைகளிலும் நல்வழிக்குக் கொண்டுவருகிறார்.

அவரை விட்டு ஓடிப்போகும் கைதிகளைச் சிறை அதிகாரியின் கண்கள் மன அளவில் வாட்டுகின்றன. அவரின் கருணை மிகுந்த தீட்சமான கண்களை நினைத்துத் திரும்பி வருகின்றனர். எல்லா நேரங்களிலும் கடவுளின் கண்கள் நம் மீது இருக்கின்றன என்பதன் குறியீடுதான் அந்தக் காட்சி.

தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வ நாத்துக்கு சாந்தாராம் மிகப் பெரிய ஆதர்சம். ஒரு குழந்தையின் வருகை எப்படிக் கொடிய மனதில் தாயுள்ளத்தைத் தோற்றுவிக்கும் என்பதற்கும் இப்படம் சாட்சி. பின் இதே கருத்தைத் தாங்கி ‘குழந்தைக்காக’ என்ற படம் தமிழில் வந்தது.

மனித நேயம் கொண்ட குற்றவாளிகளிடம் ஒரு கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கும் பெரும் பொறுப்பைக் கொடுத்து வெற்றிபெறும் படம்தான் ஷோலே. அதற்கும் இந்தப் படத்தின் தாக்கம் நிச்சயம் காரணம் எனலாம்.

தொடக்ககால பாரம்பரிய படங்களின் மிகை நடிப்பு சற்றுத் தென்பட்டாலும் அதைக் கலாபூர்வமான இசையையும் நடனத்தையும் சேர்த்து அற்புதக் காவியமாக மாற்றியுள்ளார் வித்தைக்காரரான சாந்தாராம்.

“பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா...

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா...

ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா.

அமைதி தெய்வம் முழு மனதில் கோவில் கொண்டதடா”

என்ற வரிகள் “சட்டி சுட்டதடா” பாடலில் கண்ணதாசன் எழுதியிருப்பார்.

மிருகத்தைத் தெய்வமாக்கும் திருப்பணியைக் கொண்டாடும் படைப்பு இது.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


தவறவிடாதீர்!

  திரைப் பாடம்சினிமாஉலக சினிமாதோ ஆங்கே பாரா ஹாத்

  Sign up to receive our newsletter in your inbox every day!

  More From This Category

  weekly-updates

  சேதி தெரியுமா?

  இணைப்பிதழ்கள்

  More From this Author

  x