Last Updated : 04 May, 2015 12:11 PM

 

Published : 04 May 2015 12:11 PM
Last Updated : 04 May 2015 12:11 PM

வட்டி விகிதம் பூஜ்ஜியத்துக்கும் கீழே குறையுமா?

நீங்கள் ஒருவருக்கு ரூ.1,000 கடன் கொடுக்கிறீர்கள். அடுத்த வருடம் அவர் உங்களுக்கு ரூ. 1,100 கொடுத்தால், வட்டி ரூ.100 அதாவது 10%. மாறாக ரூ.900 கொடுத்தால் வட்டி -10%. அதாவது உங்கள் பணம் ரூ.1,000-ஐ ஒரு வருடம் வைத்துக்கொள்வதற்கு அவருக்கு நீங்கள் ரூ100 கொடுப்பதாக அர்த்தம். இதுதான் எதிர்மறை வட்டி. ஒரு வங்கி “எங்களிடம் கடன் வாங்குங்கள், வட்டி கட்டவேண்டாம், மாறாக உங்களுக்கு நாங்கள் கமிஷன் தருகிறோம்” என்றால் எப்படி இருக்கும்?

யார் முதலீடு செய்தாலும் அதில் வருமானம் எதிர்பார்ப்பதுதான் இயற்கை. பணத்தை யாரும் சும்மா வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் பணவீக்கம் காரணமாக பணத்தின் மதிப்பு குறையும். எனவே 0% வட்டிக்கூட யாரும் கடன் கொடுக்க முன்வரமாட்டார்கள், இந்நிலையில் அதற்கு மேலும் ஒரு படி சென்று 0%விட குறைவாக வட்டி விகிதம் இருக்கமுடியாது என்பதுதான் பொருளியல் கணக்கு.

உண்மை வட்டி விகிதம் என்றால் என்ன?

நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கில் ரூ.10,000 வைத்திருக்கிறீர்கள். அதற்கு வங்கி வருடத்திற்கு 5% வட்டி கொடுக்கிறது. இதற்கு பெயர் இயல்பான அல்லது பெயரளவு வட்டி விகிதம் (nominal interest rate). இந்த ஒரு வருடத்தில் நீங்கள் 3% பணவீக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் உங்கள் உண்மை வட்டி விகிதம் 2% தான். நீங்கள் பெயரளவில் 5% வட்டி வாங்கினாலும், அதில் 3%-ஐ பணவீக்கம் அல்லது விலை ஏற்றம் காரணமாக இழக்கின்றீர்கள் எனவே, உங்களுக்கு உண்மையில் 2% வட்டி தான் கிடைக்கிறது.

ஆக, உண்மை வட்டி விகிதம் = பெயரளவு வட்டி விகிதம் பணவீக்கம். இதிலிருந்து நமக்கு கிடைக்கு பாடம், எப்போதும் நாம் வட்டிக்கு பணம் கொடுத்தாலும் அந்த வட்டி விகிதம் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும்.

இன்று வங்கிகளில் அதிகபட்சம் சிறு சேமிப்பு கணக்கில் 5% பெயரளவு வட்டி விகிதம் இருக்கிறது, ஆனால் பணவீக்கம் 7% என்றால் உண்மை வட்டி விகிதம் -2%. இதை நாம் கவனிப்பதில்லை.

நீண்டகால வைப்பு நிதியில் பொதுவாக உண்மை வட்டி விகிதம் 0%-யைவிட அதிகமாகத்தான் இருக்கும்.

ஐரோப்பாவில் எதிர்மறை வட்டி விகிதம்

ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் கொள்கை வட்டி விகிதம் என்ற ஒன்றை வைத்திருக்கும், இந்தியாவில் இது repo rate என்று பெயர், இது தற்போது 7.5% உள்ளது. இதுதான் மிக குறைந்த வட்டி விகிதமாக இருக்கும், இந்த வட்டி விகிதத்தில் தான் மத்திய வங்கி மற்ற வங்கிகளுக்கு குறுகிய கால கடன் கொடுக்கும்.

மேலும் இந்த வட்டி விகிதத்தை சுற்றியே மற்ற முக்கிய வட்டி விகிதங்களும் இருக்கும். உதாரணமாக வங்கிகளுக்கிடையே குறுகிய கால கடன் மீதான வட்டி விகிதம், குறுகிய கால அரசு கடன் பத்திரங்களின் மீதான வட்டி விகிதம் என எல்லாமே இந்த repo rateக்கு அருகில் இருக்கும்.

அடுத்ததாக repo rate குறையும் போதெல்லாம் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவு அதிகரித்து வட்டி விகிதம் குறையவேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. repo rate அதிகமாகும் போதெல்லாம் வங்கிகள் கொடுக்கும் கடன் குறைந்து வட்டி விகிதம் அதிகமாகவேண்டும். எனவே, repo rate குறைந்தால் பண அளிப்பு அதிகம்மாகும், repo rate அதிகரித்தால் பண அளிப்பு குறையவேண்டும்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) deposit rate -0.2% உள்ளது.

இதன் அர்த்தம் என்ன? ஐரோப்பியாவில் உள்ள மற்ற வங்கிகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருந்து கடன் வாங்கினால், அதற்கு வட்டி கட்ட தேவை இல்லை, கூடுதலாக ECB 0.2% பணத்தையும் கொடுக்கும்.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் 25% அரசு பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 0 விட குறைவாக உள்ளது. ஜெர்மனி நாட்டின் 10 வருட அரசு பத்திரம் 0.௦73% வட்டியுடன் விற்பனையாகிறது.

ஏன் இந்த நிலை?

2014 முழுவதும் 1%க்கு குறைவாக இருந்த பணவீக்கம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த வருட துவக்கத்தில் -0.6% குறைந்தது, கடந்த மார்ச் மாதம் -0.1%ஆக இருந்தது. பணவீக்கம் 0%க்கு குறைவாக இருந்தால் அதனை பணவாட்டம் (deflation) என்பர். அதாவது நாட்டின் சராசரியாக விலைவாசி குறைந்து போவதை இது குறிப்பிடுகிறது. தொடர்ந்து விலை குறைந்தால், வியாபாரம் பெருகாது, பொருளாதாரமும் வளர்ச்சி அடையாது. அதிக பணவீக்கம் எந்த அளவுக்கு கெடுதலோ அதே போல் சிறிய அளவு பணவாட்டமும் கெடுதல்தான்.

பொதுவாக பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்தால், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து மேலும் அதிக கடன் கொடுத்து வளர்ச்சியை தூண்ட முயல வேண்டும். பணவாட்டம் ஏற்படும் போது இந்த போக்கு மேலும் அவசியமாகிறது. எனவே பல ஐரோப்பிய நாடுகளில் பணவாட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மத்திய வங்கிகள் கொள்கை விகிதத்தை 0%விட குறைவாக வைக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

குறைந்த வட்டி விகிதம் என்ன விளைவை ஏற்படுத்தும்

குறைந்த வட்டி விகிதமும் அதிக கடனும் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். ஆனால் 2008 உலக நிதி சிக்கலுக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் வட்டி விகிதத்தை குறைவாகவே வைத்துள்ளன. இருந்தாலும் அங்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. இப்போது மட்டும் எப்படி பொருளாதாரம் வளரும் என்று எதிர்பார்க்கலாம் என்ற கேள்வி எழுகிறது. மேலும் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் போது அதிக கவனத்துடன் கடன் வழங்க வேண்டியுள்ளது.

குறிப்பாக சரியான துறைகளுக்கு கடன் வழங்க வேண்டும். இரண்டாவதாக, அரசு நிதி பற்றாக்குறையை அதிகரித்து, குறைந்த வட்டியில் கடன் வாங்கி வீண் செலவுகள் செய்யலாம்.

இது போன்ற பல சிக்கல்கள் இருக்க, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதை பற்றி ECB யோசிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. உண்மை பொரு ளாதார வளர்ச்சிக்கான வழி வேறு எங்கோ இருக்கிறது, அதனை கண்டுபிடிக்கவேண்டும். நிச்சயமாக அவ்வழி பண கொள்கையில் இல்லை என்பது தான் பலரின் ஆலோசனை.

seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x