Last Updated : 03 May, 2015 01:00 PM

 

Published : 03 May 2015 01:00 PM
Last Updated : 03 May 2015 01:00 PM

நிலநடுக்கம்: பெண்களுக்கு இரண்டு பக்கமும் இடி

நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற பேரிடர்களில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்று சொல்லப்படுகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை?

உலகில் 1981 முதல் 2002 வரை 141 நாடுகளில் நடந்த பேரிடர்கள் குறித்து லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் மற்றும் எஸக்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் பலியான பெண்களின் தொகை ஆண்களைவிட அதிகம் என்று தெரியவந்துள்ளது.

நேபாள நிலைமை

சமீபத்தில் நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்திலும் பாதிக்கப்பட்ட 13 லட்சம் பேரில் 53 சதவீதம் பேர் பெண்கள். பேரிடர்களில் பெண்கள் பாதிக்கப்படும் நிலைமைகளைக் குறைப் பதில் நேபாளத்துக்கு 45.2 மதிப்பெண்ணையும், ஜப்பானுக்கு 80.6 மதிப்பெண் களையும் பாகிஸ்தானுக்கு 27.8 மதிப்பெண்களையும் வுமன் ரிசைலன்ஸ் இன்டெக்ஸ் என்னும் அமைப்பு வழங்கியுள்ளது.

பெண்கள் பேரிடர்களில் பாதிக்கப்படுவதற்குச் சமூகவியல் காரணங்களும் உடலியல் ரீதியான காரணங்களும் சேர்ந்தே உள்ளன என்கின்றன ஆய்வுகள்.

இந்தியாவில்

உதாரணத்துக்கு குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் 2001-ம் ஆண்டு நடந்த பூகம்பங்களில் மொத்தமாக முப்பது ஆயிரம் பேர் பலியானார்கள். இவற்றில் இறந்த பெண்களின் எண்ணிக்கை, ஆண்களைவிட அதிகம். வீடுகளுக்கு வெளியே இருந்ததால் ஆண்கள் அதிகமாகத் தப்பித்தார்கள் எனவும், நிறைய பெண்கள் வீட்டுக்குள் இறந்ததால் இடிபாடுகளில் சிக்கி இறந்து போயினர் என்றும் கூறப்பட்டது.

2004-ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பில் இறந்த ஐந்து பேரில் நான்கு பேர் பெண்கள். அப்போது பெண்கள் அதிகமாக இறந்துபோனதற்கு, அவர்களுக்கு நீச்சல் மற்றும் மரம் ஏறத் தெரியாமல் இருந்தது முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.

வங்க தேசத்தில் 1998-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாதிப்பால் பெண்களுக்கு சிறுநீர் பாதைத் தொற்று அதிகமாக ஏற்பட்டது. போதிய கழிப்பறை வசதியின்மையும் மாதவிடாய் சார்ந்த சமூக விலக்கமுமே இந்தப் பாதிப்புக்குக் காரணம்.

முற்றுப்பெறாத பிரச்சினைகள்

பேரிடர்களின்போது தேடுதல் பணிகளிலும் மீட்பிலும் மட்டுமின்றி, மறுவாழ்வுப் பணிகளிலும் பாகுபாடு காட்டப்படுகிறது என்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் சுஷ்மா. குஜராத்தில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் இவர். “பூகம்பம் போன்ற பேரிடர்களில் தண்டுவடம் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். அதனால் உடல் உறுப்புகள் செயலற்றுப் போகும் இளம்பெண்கள் அதிகம். பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது, அவர்கள் வீட்டுக்குள் இருப்பதாலேயே இதுபோன்ற பாதிப்புகள் அதிகமாகின்றன.

பேரிடர் காலங்களில் முதல் சில நாட்களில் மனிதாபிமான உதவிகள் நிறைய குவியும். அடுத்தடுத்த நாட்களில் பிரச்சினை தீவிரமாகி ஒதுங்குவதற்கு ஓர் இடமோ வாழ்வாதாரமோ இல்லாமல்போகும் நிலையில், மனிதர்களுக்குள் பரஸ்பரம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதுபோன்ற நேரத்தில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பாலியல் ரீதியிலான சுரண்டல்கள் மற்றும் கடத்தல் முயற்சிகள் வெவ்வேறு வடிவங்களில் உருவெடுக்கின்றன” என்கிறார் சுஷ்மா.

இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது ஆண்கள் ஒரு முறைதான் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், பெண்களோ அடுக்கடுக்காகப் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர் என்பதுதான் ஜீரணித்துக்கொள்ள முடியாத நிஜம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x