Published : 04 Apr 2015 03:30 PM
Last Updated : 04 Apr 2015 03:30 PM

டாக்டர் தோழனுக்கு 30 வயசு- உலகப் புகழ்பெற்ற மருத்துவக் கையேட்டின் பயணம்

உலகப் புகழ்பெற்ற மருத்துவப் புத்தகம் அது. சாதாரணப் பயனாளிகள் முதல் மருத்துவர்கள்வரை போற்றும் நூல். ஆனால், அதை எழுதியவர் டாக்டர் அல்ல, உயிரியலாளர். உலகில் எண்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் தமிழிலும், மருத்துவ அறிவை 30 ஆண்டுகளாகப் பரப்பிவருகிறது. அந்தப் புத்தகம் 'டாக்டர் இல்லாத இடத்தில்', எழுதியவர் டேவிட் வெர்னர்.

ஒரு பக்கம் தமக்கு இருக்கும் நோயின் அறிகுறிகளை அறியத் தவறி, உயிருக்கே ஆபத்தான நிலைக்குப் பலரும் போய்விடுகிறார்கள். மற்றொரு புறம் தெரிந்த அரைகுறை அறிகுறிகளை வைத்துக்கொண்டு, இணையத்தில் தேடி இந்த நோயாக இருக்குமோ, அந்த நோயாக இருக்குமோ என்று காரணமின்றி அச்சத்திலேயே பலரும் வாழ்கிறோம். இரண்டுமே நம் உடல்நலனைப் பாதிக்கக்கூடியவைதான். இந்தக் குழப்பங்களில் இருந்து தெளிவு பெறுவதற்கு 'டாக்டர் இல்லாத இடத்தில்' கைகொடுக்கும்.

யார் அவர்?

பள்ளி ஆசிரியரான டேவிட் வெர்னர் அடிப்படையில் ஒரு உயிரியலாளர். மெக்சிகோ மலைகளில் உள்ள உயிரினங்களை வரைவதற்காக, 60-களில் அவர் மெக்சிகோ சென்றிருந்தார். அங்குள்ள மக்களுக்கு முறையான மருத்துவச் சேவை கிடைக்காததையும், கிடைக்கும் மருத்துவமும் கடும் செலவுமிக்கதாக இருப்பதையும் பார்த்தார். இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பலரது உதவியைப் பெற்று 1977-ல் 'டாக்டர் இல்லாத இடத்தில்' புத்தகத்தின் முதல் பதிப்பை ஸ்பானிய மொழியில் வெளியிட்டார். விரைவிலேயே அது ஆங்கிலத்திலும் வந்தது.

இந்த நூலின் உருவாக்கத்திலும் மேம்படுத்தும் பணியிலும் டேவிட் வெர்னருடன் பல பயனாளிகள், வல்லுநர்கள், சிறப்பு மருத்துவர்கள் பங்களித்து வருகின்றனர். புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்புக்குக் கரோல் தூமன், ஜேன் மேக்ஸ்வெல் போன்றோர் தங்கள் ஆராய்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளதில் இருந்தே இந்தப் புத்தகத்துக்கு உள்ள மதிப்பை உணர்ந்துகொள்ளலாம்.

'வாலன்டரி ஹெல்த் அசோசியேஷன் ஆஃப் இந்தியா' இந்திய சூழலுக்கு ஏற்றவாறு இந்த நூலை ஆங்கிலத்தில் பதிப்பித்தது. இன்றைக்கு அச்சில் மட்டுமில்லாமல், 26 மொழிகளில் 'டாக்டர் இல்லாத இடத்தில்' புத்தகத்தை இலவசமாகப் படிக்கலாம்.

புதிய பதிப்பு

இந்நூல் அடிப்படை மருத்துவம் பற்றி பேசுகிறது. எப்படி நாமே ஒரு நோயை - மருத்துவப் பிரச்சினையைப் புரிந்துகொள்வது, அதற்கான திட்டவட்டமான அறிகுறிகள் என்ன, எளிய சிகிச்சை முறை என்ன, எந்தக் கட்டத்தில் மருத்துவரை அணுக வேண்டும் என்றெல்லாம் விளக்குகிறது.

இந்த நூல், டாக்டர் தேவையில்லை என்று சொல்லவில்லை. டாக்டர் இல்லாத நிலையில் என்ன செய்ய வேண்டும், எந்தக் கட்டத்தில் டாக்டரிடம் போக வேண்டும், டாக்டரிடம் எந்த மாதிரிக் கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று விரிவாகப் பேசுகிறது.

இந்த நூல், டாக்டர் தேவையில்லை என்று சொல்லவில்லை. டாக்டர் இல்லாத நிலையில் என்ன செய்ய வேண்டும், எந்தக் கட்டத்தில் டாக்டரிடம் போக வேண்டும், டாக்டரிடம் எந்த மாதிரிக் கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று விரிவாகப் பேசுகிறது.

அது மட்டுமல்லாமல் அலோபதி மருத்துவம் பற்றி புரிந்துகொள்ள, அதில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தன்மை, பக்க விளைவுகள் பற்றிய அறிவும் அவசியம். அதற்கு இந்நூலில் உள்ள மருந்துகளைப் பற்றிய முன்னெச்சரிக்கை பகுதியும், தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்த தனிப் பகுதியும் உதவும்.

ஒவ்வொரு பிரிவிலும் ஊட்டச்சத்து, நோய் தொற்று, நோய்த் தடுப்பு, கண்டறியும் முறைகள், முதலுதவி பற்றி கூறப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பில் இக்காலத்தில் பெருநோய்களாக மாறிவிட்ட நீரிழிவு, புற்றுநோய், காசநோய், ஹெச்.ஐ.வி., பற்றித் தெரிந்துகொள்ளலாம். மனநலம் பற்றிய தனிப் பிரிவும் உண்டு.

சிந்திக்கத் தூண்டிய முயற்சி

'டாக்டர் இல்லாத இடத்தில்' முதல் பதிப்பைக் கொண்டுவந்த க்ரியா ராமகிருஷ்ணன், அந்த முயற்சி குறித்து நினைவுகூர்ந்தார்:

எண்பதுகளின் தொடக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சி குறித்தும், குறிப்பிட்ட சமூகத்துக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் சார்ந்த விழிப்புணர்வும் அதிகரித்துவந்தது. அந்த நிலையில் 'டாக்டர் இல்லாத இடத்தில்' ஆங்கிலப் பதிப்பு என் கவனத்தைக் கவர்ந்தது. உடல்நலனில் மக்களைத் தற்சார்பு பெற வைப்பதே, இந்த நூலின் அடிப்படை நோக்கம்.

அத்துடன் உடல்நலனைப் பராமரிப்பதை அந்தந்த மக்கள் சமூகத்தின் பொறுப்பாகவும் இந்த நூல் மாற்றுகிறது. வளரும் நாடுகளில் தேவையற்ற மருந்துகளை மருந்து நிறுவனங்கள் திணிக்க முயற்சித்துவந்த அந்தக் காலத்தில், தேவையான-தேவையற்ற மருந்துகள் பற்றி இந்த நூல் பேசியது. உடல்நலம், மருத்துவம் சார்ந்து அறிவியல்பூர்வமாக சிந்திக்கத் தூண்டிய முதன்மை முயற்சி அது.

யார் இந்த டேவிட் வெர்னர்?

'டாக்டர் இல்லாத இடத்தில்' நூலையும் வேறு பல மருத்துவ விழிப்புணர்வு வழிகாட்டிகளையும் வெளியிட்டுள்ள ஹெஸ்பேரியன் அறக்கட்டளை, டேவிட் வெர்னர் உருவாக்கியதே. தற்போது ஹெல்த்ரைட்ஸ் என்ற அமைப்பு சார்பாகச் செயல்பட்டு வரும் டேவிட் வெர்னர், பொதுச் சுகாதாரச் செயல்பாடுகளில் 40 ஆண்டு அனுபவம் மிக்கவர்.

பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேசப் பொதுச் சுகாதாரப் பள்ளியின் வருகைதரு பேராசிரியர். 50 நாடுகளில் சுகாதாரப் பயிலரங்குகள், பயிற்சிகளை வழங்கியுள்ள அவர் யுனிசெஃப், உலகச் சுகாதார நிறுவனம், யு.என்.டி.பி., உள்ளிட்ட அமைப்புகளின் ஆலோசகர்.

ஹெஸ்பேரியன் அறக்கட்டளை

தொடர்புக்கு: >www.hesperian.org

தமிழுக்கு வந்த கதை

தமிழில் பல முன்னோடி பதிப்பாக்க முயற்சிகளுக்குப் பெயர்பெற்ற க்ரியா மூலம், மூல நூல் எழுதப்பட்டு ஏழே ஆண்டுகளில் (1984, ஆகஸ்ட்) 'டாக்டர் இல்லாத இடத்தில்' தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழக நிலைமைக்கு ஏற்பத் தகவமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த நூல் தமிழில் அறிவியல்பூர்வமாக மருத்துவ-உடல்நலன் சார்ந்த அறிவை, அக்கறையை முன்வைத்த முதல் நூல்களுள் ஒன்றானது. வெளியான பிறகு மருத்துவச் சொல்லாடலை முன்னெடுத்ததுடன், மருத்துவத் தமிழுக்கு முன்னோடியாக இந்நூல் திகழ்கிறது.

இதைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. தமிழில் தந்தவர், ப. சங்கரலிங்கம். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் நூலகராக இருந்தது அவருக்குக் கைகொடுத்தது. க்ரியா ராமகிருஷ்ணன், சி. மோகன், சிவராமன், நாராயணன் உள்ளிட்டோர் நூலைச் செப்பம் செய்தனர். க்ரியா மட்டும் இந்த நூலை 6 பதிப்புகள் கொண்டுவந்துள்ளது.

மொழிபெயர்ப்பு, மொழிநடை, அச்சாக்கம் உட்பட இந்த நூல் உருவாக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள் எல்லாமே, புதிய பாதைகளுக்கு வழிவகுத்தன. 30 ஆண்டுகளுக்கு முன் நவீன அச்சுத் தொழில்நுட்பம் இல்லாத நிலையில், அச்சாக்கத்தில் பல்வேறு புதிய நுணுக்கங்கள் இந்நூலுக்காக பின்பற்றப்பட்டன.

30 ஆண்டுகளாக எளிய தமிழில் மருத்துவ அறிவைப் புகட்டிவருவது மட்டுமல்லாமல், பல புதிய தமிழ்ச் சொற்களையும் இந்நூல் வழங்கியுள்ளது. இன்றைக்குத் தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நீரிழப்பு (Dehydration), நீரூட்டம் (Rehydration), ஆணுறை (Condom) உள்ளிட்ட பல புதிய மருத்துவச் சொற்கள் இந்த நூலில்தான் அறிமுகம் செய்யப்பட்டன.

இன்றுவரை இந்த நூலுக்கு இணையாக வேறு விரிவான, எளிமையான, கையேடு போன்ற மருத்துவ நூல் தமிழில் வரவில்லை. க்ரியாவுக்குப் பிறகு 2011-ம் ஆண்டிலும், 2013-ல் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பையும் அடையாளம் வெளியிட்டிருக்கிறது.

‘டாக்டர் இல்லாத இடத்தில்’ நூல் தொடர்பாக மேலும் அறிய: அடையாளம், 04332 273444 / info@adaiyaalam.net.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x