Published : 17 Apr 2015 14:37 pm

Updated : 17 Apr 2015 14:37 pm

 

Published : 17 Apr 2015 02:37 PM
Last Updated : 17 Apr 2015 02:37 PM

உறவுகள்: தோழியா, காதலியா?

1. நான் படித்து முடித்துவிட்டு கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். படிக்கும்போது நெருங்கிய தோழி ஒருத்தி கிடைத்தாள். மிகவும் பாசமாகவும், அக்கறையோடும் இருப்பாள். நான் படிப்பை முடிக்கும் காலகட்டத்தில் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினேன். ஆனால் கல்லூரியை விட்டு வெளியேறியதும் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு வந்தது. நானும் யதார்த்த வாழ்க்கையின் சிக்கல்களை ஏற்றுக்கொண்டு நல்லபடியாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

இதனிடையே குடும்பப் பொறுப்பை நானே ஏற்று நடப்பதன் காரணமாக நான் காதலித்த பெண்ணோடு சந்திப்புகள் குறைந்தன. அவள் மீது நான் கொண்ட காதலும் குறைந்தது. இப்பவும்கூட நானும் அவளும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எனக்கு அவள் மேல் இருப்பது காதலா என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் என்னுடைய தோழியோடு தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன்.


அடிக்கடி அவளோடு சண்டை வருகிறது. காரணம், அவள் சமீப காலமாகப் பழைய நெருக்கத்தோடு பழகுவதில்லை. ஏன் எனக் கேட்டபோது, “இப்போது நான் வேலை பார்க்கும் ஐடி கம்பெனியில் புதிய நண்பன் கிடைத்திருக்கிறான்” என்றாள். எனக்குப் பொறாமை மூண்டது. அவளிடமே ஏன் என்னைத் தவிர்க்கிறாய் என வெளிப்படையாகக் கேட்டேன். “என் மீது அதிகப்படியான பிரியம் வைத்திருப்பதால் உனக்கு அப்படித் தோன்றுகிறது” எனச் சாதாரணமாகச் சொல்கிறாள். நானும் அவளும் ஏழு வருடங்களாக நண்பர்கள். இதுவரை இப்படி அவள் பிரித்துப் பேசியதில்லை. ஏன் என்னை ஒதுக்குகிறாள் என்பது புரியவில்லை. மனம் வலிக்கிறது.

சந்திப்பது குறைந்ததும் காதல் குறைந்தால், அது காதலே அல்ல. அந்த உறவை மறந்துவிடலாம் என்றே தோன்றுகிறது! காதலென்பது விறுவிறு என்று காட்டாறாகப் பெருகும். அவள் இல்லையேல் வாழ்வில்லை என்று கட்டியம் கூறும். காதல் பிறக்கும் விதங்கள் பல. சில காதல்கள் அனுதாபத்தில் பிறக்கும்; சில நட்பிலிருந்து காதலாக மாறும், இன்னும் வேறு விதங்களிலும் தோன்றக்கூடும். உங்களது காதல் இரண்டாவது ரகம். உங்களை ஏமாற்றி உள்ளே வந்து இடம் பிடித்துக்கொண்டது இந்தக் காதல்.

நண்பரே, உங்கள் மனதை நீங்களே அறிய முடியாதபோது, இன்னொருவர் மனதுக்குள் எட்டிப் பார்த்து என்ன கண்டுபிடிக்க முடியும்? நெருக்கமானவள் என்று நீங்கள் உரிமை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அத்தரப்பில் அது காதலாகத் தெரியவில்லையே! வேறொரு பக்கம் அவரது மனம் திரும்பிவிட்டதை அவரே சொல்லிவிட்டாரே! நட்பினால் ஏற்பட்ட பாசத்தால் உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ள அவருக்கு மனமில்லையோ? அதனால்தான் பூசி மெழுகுகிறாரோ? உங்களைவிட வேறு ஒருவரை முக்கியப்படுத்தி அவர் பேசுகையில் உங்களுக்கு வலிக்கத்தானே செய்யும்? உங்கள் தோழிக்கென்று ஒருவர் அமைந்தபின், உங்களை முன்நிறுத்திப் பார்த்தாரென்றால், அவர்களுக்குள் பிரச்சினை வராதா?

தோழியிடமிருந்து சற்று விலகியிருப்பதுதான், அவர் உங்கள் மீது கொண்ட உண்மையான நட்புக்கு நீங்கள் தரும் மரியாதை. இந்த ஆரோக்கியமான இடைவெளி உங்கள் இருவருடைய மண வாழ்வுக்கும் நல்லது. இப்போது கடினமாக இருந்தாலும் நாளடைவில் புரிந்துகொள்வீர்கள். கொச்சையாகச் சொல்லப்போனால், உறவுகள் லாப, நஷ்டக் கணக்குதான்! இதமாக இருக்கும்வரை ஒரு உறவு, லாபக் கணக்கில் வரும். அதே உறவு தொந்தரவாகத் தோன்ற ஆரம்பித்தால் நஷ்டக் கணக்கில் எழுதப்பட்டுவிடும்! தோழிக்குத் தொந்தரவாக இல்லாதவரைதான் உறவு நீடிக்கும். உங்களுக்கு எது வேண்டும்?

2. நான் இரண்டு ஆண்டுகளாக சிவா என்பவரைக் காதலிக்கிறேன். அவரும் கடந்த ஜனவரி மாதம்வரை என்னைக் காதலித்தார். காதலிக்கும்போது அவர்தான் என் மேல் அதிகப்படியான பாசத்தோடு இருந்தார். ஆனால் அவர் வேலைக்குச் சென்றபின் என்னிடம் பேச நேரம் இல்லை. அவ்வளவு கடினமான வேலை என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. ஆகையால் என்னிடம் சரியாகப் பேசவில்லை என்ற கோபத்தில் அவரையும் அவர் குடும்பத்தினரையும் திட்டிவிட்டேன். அடுத்த நாள் மனித்துவிடு எனும் வார்த்தையைச் சொல்லிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் நான் பத்து நாட்களாகியும் பேசவில்லை.

அதற்கிடையில் அவர் வீட்டில் இதையெல்லாம் சொல்ல, அவர்களும் என்னை வெறுத்துவிட்டார்கள். அப்போதுதான் என் பெற்றோருக்கு நான் காதலிப்பது தெரிந்தது. இரண்டு பேரும் வெவ்வேறு ஜாதி எனத் தெரிந்தும் என் மீதுள்ள பாசத்தினால் என் காதலை ஏற்றுக்கொண்டு சிவா வீட்டுக்குப் போய்ப் பேசினார்கள். அங்கு சிவா இல்லை. அவருடைய அப்பா, அம்மா “சிவா மனசு மாறி ஏத்துக்கிட்டா எங்களுக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை” எனச் சொன்னார்கள். “சிவா வந்தவுடன் உன் கிட்ட பேச சொல்றேம்மா” என்றும் சொன்னார்கள்.

அதே மாதிரி அடுத்த நாளே சிவா என் அப்பாவிடம் தொலைபேசியில் பேசினான். ஆனால் குடித்திருந்தான். நான் அவனுக்குத் தேவையில்லை எனத் திரும்ப திரும்பச் சொன்னான். குடித்துவிட்டு சொன்னதையே திரும்பத் திரும்பப் சொல்லிக்கொண்டிருந்ததால் என் வீட்டில் அவனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார்கள். அதற்குப் பிறகு அவன் தன் மொபைல் போனை அணைத்துவிட்டான். இன்று வரை அதே நிலைதான். இந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்ய என்று தெரியவில்லை. முன்பைவிடவும் இப்போது அவனை அதிகமாகக் காதலிக்கிறேன். அவன் எனக்குக் கிடைக்க ஆலோசனை கூறுங்கள்.

சிவாவுக்கு உங்களிடம் பேச நேரமில்லை எனும் சூழல் வந்தபோது, அவர் கையைவிட்டுப் போய்விடுவாரோ என்ற பாதுகாப்பின்மை உங்களுக்கு வந்தது யதார்த்தம்தான். அந்த உணர்வின் படபடப்பில், அவசரமாக இரண்டு வேலைகள் செய்துவிட்டீர்கள். சிவாவையும் அவரது குடும்பத்தையும் நிந்தித்தது, மன்னிப்புக் கேட்பதை ஒத்திபோட்டது ஆகிய இரண்டையும்தான் சொல்கிறேன். நடந்ததை மாற்ற முடியாது. இனி என்ன செய்வது என்று யோசிக்கலாம்.

பிரகாசமான நம்பிக்கையூட்டும் சில செய்திகளைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர் சரியென்று சொன்னது மட்டுமல்லாமல், நீங்கள் தாறுமாறாக நடந்திருந்தும், சிவாவின் பெற்றோரும் சம்மதித்திருக்கிறார்கள்! காதலில் பிரச்சினை என்றாலே 'கட்டிங்கில்' அடைக்கலம் தேடும் இளைஞர்கள் ரகம் போலும் சிவா! உங்கள் படபடப்பு எனக்குப் புரிந்தாலும், ‘எடுத்தோம், கவிழ்த்தோம்' என்று செயல்படாமல், சிக்கலை அவிழ்க்கப் பொறுமையாக நீங்கள் முயல வேண்டும் என்றே கருதுகிறேன்.

சிவாவின் கோபம் தணியட்டும். பிறகு நீங்கள் அவரை நேரில் சந்தித்து அவரது தவறுகளைப் பற்றிப் பேசாமல், உங்கள் தரப்பில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேளுங்கள். சந்திப்பதற்கு முன் அவர் உங்களை என்ன சொன்னாலும் கோபப்படக் கூடாது; அமைதியாகப் பதிலளிக்க வேண்டும் எனும் தீர்மானத்துடன் செல்லுங்கள். அவர் அப்போதே பதில் சொல்லாவிட்டாலும், சிந்திக்க நேரம் கொடுங்கள். நல்ல பதிலோடு திரும்பி வரலாம். வரவேயில்லையென்றால், அவரது காதலின் ஆழம் அவ்வளவுதான் என்று ஒத்துக்கொள்ளுங்கள்.

அது சரி பிரச்சினை, கவலை, என்றால் பாட்டிலை நாடிப் போவாரா சிவா? அது சரியில்லையே. நீங்கள் யோசியுங்கள்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in


தவறவிடாதீர்!

    உளவியல் ஆலோசனைஉறவுகள்உறவு சிக்கல்காதல் பிரச்சினைவழிகாட்டி

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author