Last Updated : 03 Apr, 2015 11:14 AM

 

Published : 03 Apr 2015 11:14 AM
Last Updated : 03 Apr 2015 11:14 AM

கிரேசியைக் கேளுங்கள் 27 - கடவுள்களின் பூலோக வாகனம் !

கோமதி நமச்சிவாயம், திருநெல்வேலி.

தெய்வங்கள் பூலோகம் வந்தால் ஒவ் வொரு கடவுளும் தேர்ந்தெடுக்கும் வாகனம் எதுவாக இருக்கும்?

வள்ளிக்குக் காதல் கடிதம் எழுத வசதியாக முருகருக்கு ‘Mail வாகனம்’, பிள்ளையாருக்கு கம்ப்யூட்டர் ‘Mouse வாகனம்’. பத்து அவதாரம் எடுத்த மஹா விஷ்ணுவுக்கு ‘ஐ-10 கார்’ வாகனம். ராமருக்கு ‘மாருதி’ வாகனம். கிருஷ்ணருக்கு ‘ஓரம் போ… ருக்குமணி வண்டி வருது’பாடிக்கொண்டே போக சைக்கிள் வாகனம்.

அம்பாளுக்கு ‘அம்பா(ள்)ஸிடர்’. தில்லை ‘நட’ராஜரான சிவன் நடந்தே செல்வார். பஸ்மாசுரனை அழித்ததால் மோகினிக்கு ‘பஸ்’ வாகனம். ஆடி வரும் அம்மனுக்கு ‘Audi’ கார் வாகனம். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் செல்லும் சூரிய பகவானுக்கு ‘7 HP (Horse Power) வேகத் தில் செல்லும் வாகனம்’.

நமக்கு தெய்வங்களும் அதிகம். நம் ஊரில் வாகனங்களும் அதிகம்!

மத்தளராயன், மாம்பலம்.

பெண்ணின் அழகான இடையைப் பார்த்தால் உங்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்?

‘ஹிப் ஹிப் ஹுரே...’

துபாய் ரமேஷ், சென்னை.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்றுவிட்டதே?

என்ன செய்வது ‘தோனி’ இம்முறை ‘பியூனி’ஆகிவிட்டார். ஆஸ்திரேலிய ‘கிளார்க்’ ‘ஆபீஸராகி’விட்டார்!

நந்தினி, பெங்களூர்.

கனவுக்கும் நனவுக்கும் என்ன வித்தியாசம்?

கனவு… நாம் மட்டுமே காணும் நனவு. நனவு… நாம் காண்பதை மற்றவர்களும் காணும் கனவு!

கே.காசி, மதுரை-4.

காலையில் எழுந்தவுடன் கழுதை முகத்தில் விழித்தால் நல்லது என்கிறான் நண்பன். மனைவி முகத்தில் விழித்தால் நல்லது என்கிறார் மாமனார். யார் முகத்தில் விழிப்பது?

‘ASS’ you please!

வான்மதி, சென்னை-21.

பரமசிவன் பார்வதிக்குப் பாதி உடலைத் தந்ததோடு நில்லாமல், ‘அர்த்தநாரீஸ்வரர்’ கோலத்தில் அனைவருக்கும் தெரியும்படி காட்சி அளிக்கிறார். ஆனால், மகாவிஷ்ணு மட்டும் ஏன் லட்சுமியை மார்பில் வைத்து மேலாடையால் மூடி, மறைத்தும்விட்டாரே?

பலத்தை (சக்தியை) காட்ட வேண்டும். பணத்தை (செல்வத்தை) பத்திரமாகப் பூட்ட வேண்டும்!

கே.மாதவன், கும்பகோணம்-2.

வில்லன் எப்படி உத்தமனாக இருக்க முடியும்? (நாம் ஏதாச்சும் சொல்லப் போய்… கமல் கோபிச்சுக்கு வாரேன்னு பதில் சொல்லாம விட்டுடக் கூடாது)

காண்டீப வில்லன் ‘மத்யமன்’. அர்ச்சுனன் கண்ணனிடம் கீதையைக் கேட்டு உத்தமனாகவில்லையா? ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிய ‘வில்லி’புத்தூர் ஆண்டாள் ‘உத்தமி’ அல்லவா!

சி.மாதவி, திருச்சி-20.

உங்களை யாராவது பிஸ்கோத்து என்று திட்டினால், பதிலுக்கு என்ன சொல்லித் திட்டுவீர்கள்?

திட்டும் நேரத்தில் அடுத்த நாடகத்துக்காக திட்டம் தீட்டுவேன். ‘சாக்லேட் கிருஷ்ணா’ மாதிரி ‘பிஸ்கேட் பலராமன்’!

புருஷோத்தமன், திருநள்ளார்.

அது என்ன சார் பித்தலாட்டம்? ப்ளீஸ் அர்த்தம் தருக...

பித்தளை தங்கமாட்டம் மின்னி ஏமாற்றினால் அது பித்தலாட்டம்!

சி.மணி, மரக்காணம்.

ஒரு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என்பதை ‘ஜாம் ஜாம்’னு நடந்தது என்று ஏன் சொல்கிறோம்?

நடு ரோட்டில் பந்தல் போட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் அதாவது ‘டிராஃபிக் ஜாம்’ இல்லாமல் நடந்ததை ‘ஜாம் ஜாம்’னு நடந்தது என்று சொல்கிறார்களோ, என்னவோ!

ஜெ.வடிவேல், சேலம்.

மவுன விரதத்தை சைலன்ட் மோடு என்று சொல்லலாமா?

அதிர்ந்து பேசுவதை ‘வைப்ரேஷன் மோடு’ என்று சொல்வீர்களா?!

கி.மனோகரன், பொள்ளாச்சி.

பெண் பாடகிகளில் உங்களுக்குப் பிடித்த பாடகி யார்… ஏன்?

எஸ்.ஜானகி.

காரணம் நம்பர் 1: இந்தக் கிரேசிக்கு ராசியான பெயர் ஜானகி.

காரணம் நம்பர் 2: ஐம்பது வயதிலும் ஆறு வயது சிறுமி போலப் பாடச் சொன்னால் ‘N0’ சொல்லாமல் ‘Yes’ சொல்லி பாடி சாதித்த பாடகி S.ஜானகி!

ஜி.மாலா கோபாலன், திருவாரூர்.

வாட்ஸ் அப் என்றதும் உங்கள் மனதில் ஓடும் எண்ண ஓட்டம் என்னவோ?

1979-ல் எனது ‘கிரேசி கிரியேஷன்ஸ்’ நாடகக் குழுவின் முதல் நாடகம் ‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’.

அந்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான அந்த பல்ப், மேடையின் உச்சியில் (அப்பில்) எரிந்தபடி தொங்கிக் கொண்டிருக்கும். 36 வருடங்களாகியும் அந்த பல்பும் ப்யூஸ் ஆகவில்லை. நாடகமும் பழசாகவில்லை. 600 முறை போட்டும் இன்னமும் புதுசாக ‘ஹவுஸ்ஃபுல்லாக’ஓடிக் கொண்டிருக்கிறது. ‘அப்பில் தொங்கும் 100 வாட்ஸே இன்னுமொரு நூற்றாண்டு இரு!’

தேன்மொழி, சென்னை-26.

நீ என்னென்னமோ வாங்கியிருப்பே நைனா. அத்த வுடு. நீ ஜகா வாங்குனத சொல்லுபா?

ஜகா வாங்காமல் ஜாப் வாங்கியதை சொல்கிறேன்.

24 வயதில் இண்டர்வியூ சென்றேன். ‘தாஜ்மகாலைக் கட்டியது யார்’ என்று கேட்டார். அதை கட்டிய கொத்தனாரின் பெயர் நினைவுக்கு வராததால் திருதிருவென்று முழித்தேன். பிறகு சுதாரித்துக்கொண்டு, ஜகா வாங்காமல் பதிலுக்கு அவரைப் பார்த்து ‘ஷாஜகானைக் கட்டியது யார்?’ என்று கேள்வி கேட்டேன்.

இண்டர்வியூ செய்தவர் திரு திருவென முழிக்க, ‘ஷாஜகானைக் கண்ணாளம் கட்டியது மும்தாஜ்’என்றேன். ஜாப் கிடைத்தது. நான்தான் அந்த ரியல் எஸ்டேட் நிறுவன வேலையில் இருந்து ஜகா வாங்கி சுந்தரம் கிளேட்டனில் சேர்ந்தேன்!

- இன்னும் கேட்கலாம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x