Last Updated : 07 Apr, 2015 12:55 PM

 

Published : 07 Apr 2015 12:55 PM
Last Updated : 07 Apr 2015 12:55 PM

மாநிலங்கள் அறிவோம்: எல்லையோர சிகரம்- சிக்கிம்

லிம்பு மொழியில் ‘சு’ என்றால் ‘புதிய’ ‘கியம்’ என்றால் ‘இடம்’அல்லது ‘வீடு’ என்று பொருள். அந்த ‘சுக்கியம்’ மருவிச் சிக்கிம் ஆனது.

ஏறக்குறைய இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த மவுரிய பேரரசோ, மொகலாயர் ராஜ்ஜியமோ சிக்கிமை நெருங்கக்கூட முடியவில்லை. அவ்வளவு தூரத்திலும் உயரத்திலும் அமைந்திருக்கிறது.

திபெத்தியர்களின் அதிகப்படியான வருகையால் பவுத்த மதம் சிக்கிமில் நிலைகொண்டது. கி.பி.8-ம் நூற்றாண்டில் திபெத் புத்தத் துறவி ரின்போச்சே சிக்கிம் வழியாகப் பயணித்ததாகவும், அவரது மூன்று சீடர்கள் பவுத்தத்தைப் பரப்ப சிக்கிம் வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. பவுத்தத் துறவியே மன்னராக ஆக முடியும் என்பதால் குரு டாஷியின் 5-வது தலைமுறையைச் சேர்ந்த புன்ட்சாங் நாம்கய்ல் 1642-ல் சிக்கிம் மன்னராகப் பதவியேற்றார்.

திபெத்தின் ஆதிக்கம்

சிக்கிமில் பெரும்பாலும் திபெத்தின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இருப்பினும் பூட்டானும் தங்கள் பங்குக்கு ஆக்கிரமித்தது. நேபாளத்தின் ஆதிக்க மனப்பான்மை சிக்கிமில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது. நேபாளத்தைப் பிடிக்காத பிரிட்டிஷ் இந்தியா சிக்கிமுக்கு ராணுவ உதவி அளித்ததன்பேரில் போர் நடந்தது. இதில் நேபாளம் பின்வாங்கியது.

இதையொட்டி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு நன்றியாக மோராங்கிலும் பின்னாளில் டார்ஜிலிங்கிலும் வரி வசூலிக்கும் உரிமை பிரிட்டிஷாருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திபெத்தில் வளர்ந்துவரும் ரஷ்யாவின் செல்வாக்கைத் தடுக்கவும் தனது வியாபாரத் தளத்தை விரிவாக்கவும் பிரிட்டிஷ் இந்தியா முடிவுசெய்தது. திபெத்தை இணைக்கச் சிக்கிம் அனுமதியுடன் 1886-ல் சாலை அமைத்தது. இதில் சந்தேகமடைந்து 1888-ல் தாக்குதல் தொடுத்த திபெத்தியர்களை பிரிட்டிஷ் படைகள் அடக்கின. சிக்கிமுக்குள் நுழைந்ததுடன் அரசியல் நிலவரங்களைக் கண்காணிக்க 1889-ல் கிளைவ் வைட் என்ற அதிகாரியையும் நியமித்தது ஆங்கில அரசு.

1947-ல் இந்தியா விடுதலையடைந்தபோது தனிநாடாக நீடிக்க வேண்டும் என்ற சிக்கிம் மன்னர் தாஷி நாம்கய்லின் கோரிக்கையை ஜவஹர்லால் நேரு ஏற்றுக்கொண்டார். இருப்பினும் வெளியுறவு, சட்டம், ஒழுங்கு ஆகியவற்றில் இந்தியாவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் இந்தியா தலையிடவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

துண்டிப்பு

1962-ல் நடந்த இந்திய- சீனப் போரின்போது சிக்கிம் எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. எனவே இந்தியாவைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் “இந்தியா அரசியல் ரீதியாக அபாயகரமான நாடு” என்று 1966-ல் வெளிநாட்டுப் பத்திரிகைக்கு அப்போதைய மன்னர் பால்டன் தொன்ட நாம்கய்ல் பேட்டியளித்தார். இது பதற்றத்தை ஏற்படுத்தியது. சிக்கிமில் முடியாட்சிக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி வெடித்தது.

பொது வாக்கெடுப்பு

சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமைத்த குழுவின் பரிந்துரையின்பேரில் ஐ.நா. பிரதிநிதிகள் முன்னிலையில் அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 97.6 சதவீதம் பேர் இந்தியாவுடன் இணைய வாக்களித்தனர். இதன்பேரில் 1975-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் 22-வது மாநிலமாக சிக்கிம் உதயமானது. 1979-ல் நடந்த பொதுத் தேர்தலில் சிக்கிம் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, நார் பகதூர் பண்டாரி முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

குடியேற்றம்

நேபாளிகளின் அபரிமிதமான குடியேற்றத்தால் தற்போது இந்துக்களே அதிகமாக உள்ளனர். இதன்படி 60 சதவீதம் இந்துக்கள், 28 சதவீதம் பேர் பவுத்தம், 6.6 சதவீதம் கிறிஸ்தவம், மற்றவர்கள் 4 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

மேற்கே நேபாளம், வடக்கு மற்றும் வடகிழக்கே சீனா, திபெத், கிழக்கே பூட்டான், தெற்கே இந்தியாவின் மேற்கு வங்கம் அமைந்துள்ளது. சர்வதேச எல்லைகளைக் கொண்ட மாநிலம் என்பதால் சில விதிமுறைகளுக்கு உட்பட்டே சுற்றுலா செல்ல முடியும்.

சுற்றுலா மூலமே மாநிலத்துக்கு வருவாய் கிடைக்கிறது. உலகின் 3-வது உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்கா இங்குதான் உள்ளது. 28 மலைச்சிகரங்கள், 227 ஏரிகள், 5 வெப்ப நீரூற்றுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகள் என இயற்கை கோலோச்சும் மாநிலம் இது.

அரிசிப் பள்ளத்தாக்கு

பெரும்பாலும் பாறை நிலங்களாய் இருப்பதால் வேளாண்மைக்கு உகந்த மாநிலம் அல்ல. அடுக்கு வேளாண்முறையில் நெல் பயிரிடப்படுகிறது. இதனாலேயே திபெத்தியர்களும் பூட்டானியர்களும் சிக்கிமை அரிசிப் பள்ளத்தாக்கு என்று அழைக்கின்றனர். இதுதவிர சோளம், கோதுமை, பார்லி, ஆரஞ்சு, தேயிலை ஆகியவை உற்பத்தியாகின்றன. ஏலக்காய் உற்பத்தியில் முதல் மாநிலம். டீஸ்டா மற்றும் ரங்கீத் நதிகள் பாய்கின்றன.

தோல் பதனிடுதல் முக்கியமான தொழில். காப்பர், டோலமைட், கிராபைட், நிலக்கரி, துத்தநாகம் போன்ற தாதுகள் உள்ளன. இருப்பினும் தொழில் வளர்ச்சியில்லை.

மக்கள் தொகை 6 லட்சம். ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு 82.2 சதவீதம்.

இணைக்கும் மொழி

சிக்கிமை இணைக்கும் பொது மொழியாக நேபாளம் இருக்கிறது. இதுதவிர டிசோங்கா, க்ரோமா, குருங், லிம்பு, மகர், மஜி, மஜ்வார், ராய், ஷெர்பா, தமங், துலுங், திபெத்தியன் மற்றும் யாகா ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இந்தி, ஆங்கிலமும் புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொருவரும் சராசரியாக ஐந்து மொழிகள் வரை பேசுகின்றனர்.

பூட்டியாக்கள், லெப்சே முக்கியமான பழங்குடியினங்கள். பிஹாரிகள், வங்காளிகள் மற்றும் மார்வாரிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட இனங்கள் வசிக்கின்றன.

பெரும்பாலும் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி, தசரா, சங்காராந்தி உள்ளிட்ட அனைத்துப் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. புத்த மதப் பண்டிகைகளான லோசர் (திபெத் புத்தாண்டு), சாகாத் தாவா, ஹபா துச்சென், டுருப்கா தேசி மற்றும் பும்ச்சு ஆகியவையும் கொண்டாடப்படும். மொகரம் மற்றும் கிறிஸ்துமஸும் முக்கியத்துவம் வாய்ந்தவை. லெப்சா இசை, ராக் இசை சிக்கிமில் பிரபலம்.

உலகின் அழகிய இடமாகவும் பனி மூடிய சிகரங்களுடனும் வண்ணத்துப் பூச்சிகளின் வசிப்பிடமாகவும் இயற்கையின் வனப்பில் உண்மையிலேயே மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது சிக்கிம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x