Published : 27 Apr 2015 11:10 AM
Last Updated : 27 Apr 2015 11:10 AM

ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் பணத்துக்கு பங்கமா?

ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து விரிவாக சொல்வதற்குப் பதிலாக ஒரு பயனாளிக்கு நடந்த சம்பவம் அதன் உண்மை தன்மையை உணர்த்தலாம்.

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் மாதவன். கடந்த ஆண்டு ஒரு வீட்டு உபயோகப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். வழக்கு விவரம் அந்த நிறுவனத்தின் வாஷிங்மெஷின் வாங்கியதுடன், அவர்களிடமே ஆண்டு பராமரிப்பு பணிக்காக பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் ஒப்பந்த காலத்தில் வாஷிங் மெஷினில் ஏற்பட்ட பழுது தொடர்பாக அவர் போன் மூலம் தகவல் தெரிவித்தும் நிறுவனத்தினர் வாஷிங் மெஷினை சரி செய்து தரவில்லை. அந்த நிறுவனத்தின் இணைய தளம் வாயிலாக புகார் அளித்த பிறகு நிறுவனத்திலிருந்து வந்தவர்கள் புகார் தொடர்பாக விசாரித்து விட்டுச் சென்றுவிட்டனராம். அவர்களும் பழுதை சரி செய்து தரவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்த நடவடிக் கையும் நிறுவனம் மேற்கொள்ள வில்லை எனவே அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து இழப்பீடும் கோரி யிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு என்றும், ஆனால் அதை கடைப்பிடிக்காமல் வாடிக்கையாளரை நிறுவனம் அலைக் கழிப்பு செய்து, சேவை குறைபாடு செய்துள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் அவருக்கு இழப்பீடாக ரூ.2,500, ஆண்டு பராமரிப்புக்காக பெற்ற தொகை மற்றும், வழக்கு செலவாக ரூ.1,000 என மொத்தம் ரூ.7,154-யை திருப்பி தரவேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தக் கதை எங்களுக்கு எதுக்கு என்கிறீர்களா...

ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தங்களில் அலைக்கழிக்கப்பட்ட அனுபவங்கள் நமக்கும் இருக்கும்தான். ஆனால் இந்த நுகர்வோரைப்போல சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நாம் முற்படுவதில்லை அவ்வளவுதான்.

வீட்டு உபயோகப்பொருள் என்றில்லை, வீடு வாங்கினால்கூட பராமரிப்பு ஒப்பந்தம் போடத்தான் செய்கிறோம். ஆனால் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டுள்ளபடி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது சேவையை அளிக்கிறார்களா என்றால் நம்மால் திருப்திகரமான பதில் சொல்ல முடியவில்லை. ஒப்பந்த காலத்துக்குள் என்னதான் சேவை கிடைக்கும் என்பதில் தெளிவான வரையறைகளை சொல்வதில்லை ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள்.

எனது நண்பர் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு ஏசி வாங்கினார். ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தமும் சம்பந்தப்பட்ட நிறுவனத் திடமே ஏற்படுத்திக் கொண்டார். கடந்த ஆண்டு எந்த சிக்கலும் கிடையாது. இந்த ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பித்துக் கொண்டார். தற்போது கோடைக்காலம் தொடங்கியதும் பயன்பாடு அதிகமாக ஏசியிலிருந்து நீர் ஒழுக ஆரம்பித்துள்ளது. இதை சரிசெய்து தருமாறு அவர்களிடம் புகார் அளித்துள்ளார். வந்து பார்த்தவர்கள் உதிரிபாகம் மாற்ற வேண்டும் என்று அதற்கு ஒரு தொகையை சொல்லியிருக்கிறார்கள்.

ஏசியை வாங்கி இரண்டு வருடங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் அதன் மதிப்பில் 20 சதவீத தொகைக்குமேல் பராமரிப்பு கட்டணமாக கொடுத்திருக்கிறார். இப்போது தனியாக உதிரிபாக செலவும் சேர்ந்திருக்கிறது. ஒன்றரை ஆண்டுக்குள் பொருளின் விலையில் கால்வாசி பணத்தை செலவழிக்க வேண்டும் என்றால் யாருக்குத்தான் மனசு வரும்? அப்புறம் எதற்கு இந்த ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம்?

சேவை உண்மைதான்

இது தொடர்பாக சென்னையில் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கு பிறகான சேவையில் ஈடுபடும் நிறுவனத்தினருடன் பேசினோம். ஆண்டு பராமரிப்பு கட்டணத்தில் எல்லா சேவைகளையும் அளித்துவிட முடியாது. பழுதில்லாமல் இயங்குவதற்கான அடிப்படை பராமரிப்புகளை மட்டுமே செய்து கொடுப்போம். இரண்டாவது உதிரிபாகங்களுக்கான விலை என்பது நிலையில்லாதது. எனவேதான் அந்த சேவையை சேர்த்துக் கொள்வதில்லை. அவற்றை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பத்தான் செய்து கொடுக்கிறோம் என்றனர். தவிர பராமரிப்பு விஷயங்களில் வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது. முறையாக செய்து கொடுத்தால்தான் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பதால் அனைத்து நிறுவனங்களுமே இதில் தெளிவாக இருக்கின்றன என்றனர்.

அனுபவங்கள் பலவிதம்

ஆனால் பயனாளிகளின் அனுப வங்கள் அப்படியில்லை. இது தொடர்பாக இந்த ஒப்பந்தங்களில் பாதிக்கப்பட்ட சிலரோடு பேசினோம். இந்த ஒப்பந்தம் தேவையா தேவையில்லையா என்பது தெரியாமல்தான் இதற்கு பணம் கட்டினோம்,கட்டுகிறோம். என்றைக் காவது ஒருநாள் வருவார்கள். முக்கிய மான பழுதுகளையும் பார்ப்பதில்லை என்றனர்.

சிலரோ ஒரு வருடம் பணம் கட்டியதும், அதற்கு பிறகு அடுத்தடுத்த வருடங்களில் கட்டுவதை விட்டு விடுகிறோம் என்றனர்.

நிறுவனத்துக்கே லாபம்

நாம் சேகரித்த விவரங்கள்படி தெரிந்து கொண்டது என்னவென்றால் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தங்களில் பலனடைவது என்னவோ நிறுவனங்கள்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். வாடிக் கையாளர்கள் ஒப்பந்தத்தைப் படித்துப் பார்ப்பது கிடையாது என்பதை யெல்லாம் தாண்டி, இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு அலைந்து கொண்டு அல்லது நேரத்தை செலவிட்டுக் கொண்டு என்கிற மனநிலைக்கு வந்துவிடு கின்றனர். இதுதான் நிறுவனங்களில் லாபம் என்கின்றனர்.

வாடிக்கையாளர் பிரிப்பு

சில நிறுவனங்கள் இந்த ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் போடுவதற்கு வாடிக்கையாளர்களை தனித்தனி வகையாக தரம் பிரித்து விடுகின்றனர். பிளாட்டினம், பிரீமியம், சாதாரணம் என்று வகைப்படுத்தி விடுகின்றனர்.

சாதாரண பிரிவில் உள்ள வாடிக்கையாளர் கூடுதலாக சேவையை எதிர்பார்க்கிறபோது பிரீமியம் அல்லது பிளாட்டினம் வாடிக்கையாளராக மாறுங்கள் அப்போதுதான் சேவை கிடைக்கும் என்று பிரித்து விடுகின்றன. ஆனால் கொடுக்கிற சேவையில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது. உதிரிபாகங்கள் போய்விட்டது என்றால் மாற்றிக்கொடுப்பார்கள் அவ்வளவுதான். இப்படி ஒரு பிளானிலிருந்து இன்னொரு பிளானுக்கு மாற இரண்டு மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

நிறுவன வாடிக்கையாளர்கள்

சேவைத்துறை என்பது தனியாக வளர்ந்து வரும் தொழில் என்பதால் பெரும் நிறுவனங்களுக்கான சேவை களும் இந்த விதமாக மேற்கொள்ளப் படுகின்றன. கணினி, மின் சாதனங்கள், ஜெனெரேட்டர், குளிர் சாதனங்கள் போன்றவற்றைப் பராமரிக்க தனியாக பணியாளர்களை நியமித்துக் கொள்வ தில்லை. இப்படியான பராமரிப்பு ஒப்பந் தங்கள் மூலமாக மேற்கொள்வது வளர்ந்து வருகிறது.

வாரண்டி காலம்

வாரண்டி காலத்துக்குள் என்றால்தான் கட்டணம் கட்டுபடியாகும் . உதாரணமாக ஒரு ஏசி வாங்கிய முதல் ஆண்டுக் குள் என்றால் 1 டன் ஸ்பிளிட் ஏசிக்கு ரூ. 3,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. வாரண்டி காலம் முடிந்தது என்றால் ரூ. 4,000 வரை எகிறிவிடும். இது ஆண்டு கணக்கிற்கு ஏற்ப அதிகரிக்கும். ஆனால் முதல் ஆண்டில் என்ன சேவை கிடைக்கிறதோ அதே சேவைதான் அடுத்தடுத்த ஆண்டும் கிடைக்கும்.

பணத்துக்கு பங்கமா?

ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் என்பது நமது பணத்துக்கு பங்கம் வைக்கிறது என்பதுதான் பெருவாரியான அனுபவஸ்தர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் சின்னச் சின்ன பழுதுகளுக்கு நமது நேரத்தை ஒதுக்கிக் கொண்டிருக்க முடியாது என்பதற்காக அதற்கு கொடுக்கும் விலையாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். பொருள் மதிப்பா? பண மதிப்பா? நேரமா? அலைச்சலா? என்பதை பொறுத்து ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தங்களை முடிவு செய்வது நல்லது.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x