Last Updated : 03 May, 2014 01:10 PM

 

Published : 03 May 2014 01:10 PM
Last Updated : 03 May 2014 01:10 PM

கொண்டாட்டமாகச் சில கோடைக் காலப்பயிற்சிகள்

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும்தான். இனி ஒரு மாதம் ‘ஸ்கூல், ஹோம் ஓர்க், அசைன்மெண்ட்’ எதுவும் இல்லை. இஷ்டம்போல் விளையாடலாம். விடுமுறைக் குழந்தைகளைச் சமாளிப்பதே பெற்றோருக்குப் பெரும்பாடுதான். பெற்றோர் சிலர் குழந்தைகளைச் சுற்றுலாவிற்குச் அழைத்துச் செல்வர். சிலர் உறவினர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். ஆனால் குழந்தைகளின் கோடை விடுமுறையை அர்த்தமுள்ள அனுபவமாக மாற்ற கோடை முகாம்கள் ஒரு நல்ல வாய்ப்பு. வழக்கமான கோடை முகாம்கள் போல் அல்லாமல் குழந்தைகளின் ஆளுமையை வளர்க்கும் விதத்திலும் நமது பண்பாட்டை உணர்த்தும் விதத்திலும் சில முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இம்மாதிரியான கோடை முகாம்கள் குறித்து ஒரு முன்னோட்டம்.

தமிழ்க் கொண்டாட்டம்

ஆங்கில வழிக் கல்வியின் தாக்கம் இப்போது அதிகமாகி விட்டது. எளிய குடும்பப் பின்னணி கொண்டவர்களும் தங்கள் குழந்தைகளைக் கடன்பட்டாவது ஆங்கில வழிப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்கிறார்கள். இன்னொரு மொழியை அறிந்துகொள்வது நல்லதுதான். என்றாலும் நம்முடைய தாய்மொழியைக் குழந்தைகளுக்குக் கற்பிப்பது நமது கடமை அல்லவா? அதற்கான வாய்ப்பை தமிழ் மொழிக் கூடம் அமைப்பு நடத்தும் இந்தக் கோடை முகாம் ஏற்படுத்தித் தருகிறது. தமிழ் மொழியையும், தமிழர் கலாசாரத்தையும் குழந்தைகளுக்குப் பிடித்த பாணியில் கற்றுக்கொடுக்கிறது இந்த முகாம். “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், இசை,வீரம், உணவு, நகர - கிராம வாழ்க்கைமுறை போன்றவற்றைக் குழந்தைகளுக்குச் செயல்முறை வடிவில் கற்றுத் தருகிறோம். தமிழ் மொழியைக் குழந்தைகளுக்குப் பிடித்தமான மொழியாக மாற்றுவதுதான் இம்முகாமின் முக்கிய நோக்கம்” என்கிறார் ஒருங்கிணைப்பாளர் அனு. பல்லாங்குழி, தாயம், கல்லாங்காய் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடவும், தமிழ் இசைப் பாடல்களைக் கற்கும் வாய்ப்பையும் இந்த முகாம் வழங்குகிறது.

வயது : 2 ½ - 14

இடம் : மந்தவேலி, வேளச்சேரி, வடபழனி, பெரம்பூர் உள்ளிட்ட 20 இடங்கள்

நாள் : மே 1 முதல் 31 வரை

தொடர்புக்கு : 42109486



ரோபோட்டிக்ஸ் பயிற்சி

பென்சிலையும் பேனாவையும் கையில் கொடுத்தால் உங்கள் குழந்தை வரைந்துகொண்டே இருக்கிறதா, சின்னச் சின்ன விஷயங்களில் ஆழமாகக் கேள்வி கேட்கிறதா, விளையாட்டுப் பொருட்களையெல்லாம் பிரித்து ஆராய்ச்சி செய்கிறதா? இதையெல்லாம் குற்றமாகப் பார்க்காதீர். உங்கள் குழந்தை படைப்பாற்றல் உள்ள குழந்தை எனப் பெருமை கொள்ளுங்கள். இம்மாதிரி குழந்தைகளின் படைப்பாற்றல் வளர்ச்சிக்கு இன்ஸ்டிவ் மைன்ட்ஸ் நடத்தும் ரோபோடிக்ஸ் முகாம் உதவியாக இருக்கும். “அனிமேஷனில் விளையாட்டுகளை உருவாக்குவது, மனப்பாட முறையில் இல்லாமல் செயல்வழியில் ரோபோட்டிக்ஸ் ப்ரோகிராமிங் செய்ய கற்றுத் தருவது, டிஜிட்டல் கதைகளை உருவாக்குவது, கணிதத் திறமைகளை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். டிஜிட்டல் புலமை என்பது இப்போதுள்ள குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கிறது. அதைச் சரியான வகையில் பயன்படுத்த இந்த முகாம் உதவி செய்யும்” என்கிறார் அதன் நிறுவனர் கல்பனா.

வயது: 7 வயதுக்கு மேற்பட்டோர்

இடம்: பள்ளிக்கரணை, சென்னை

நாள்: ஜூன் 1 முதல்

தொடர்புக்கு: 9500046144

மிதவை முகாம்

ஒரு வித்தியாசமான விளையாட்டைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைக்க நினைப்பவர்களுக்குத் தமிழ்நாடு செய்லிங் அசோசியேஷன் நடத்தும் இந்த மிதவை முகாம் சரியான தேர்வாக இருக்கும். சென்னைத் துறைமுகத்தில் நடைபெறும் இந்த முகாம் குழந்தைகளுக்குக் கடலில் பயணம் செய்த ஓர் உற்சாக அனுபவத்தை வழங்கும். “இந்த மிதவைப் பயிற்சி குழந்தைகளுக்குத் தேர்ந்த பயிற்றுநர்கள் மூலம் கற்றுத்தரப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த விளையாட்டு இப்போது பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது. இந்தச் சாகச விளையாட்டு பிடித்துப்போகும் குழந்தைகள் தேசிய அளவில் சாம்பியன்களாக உருவாகியிருக்கிறார்கள்” என்கிறார் ஒருங்கிணைப்பாளர் சாந்தா ரவிக்குமார்.

மூன்று மணி நேரம் வழங்கப்படும் இந்தப் பயிற்சியில், ஆறு குழந்தைகளுக்கு ஒரு மீட்பு படகு என்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டில் தேர்ச்சி பெற நினைப்பவர்கள் மூன்று வருடப் பயிற்சிப் படிப்பில் சேரலாம்.

வயது: 7 வயதுக்கு மேற்பட்டோர்

இடம்: சென்னை துறைமுகம், கேட் எண்: 7

நாள்: மே 4 முதல் 11 வரை

தொடர்புக்கு : 93809 69383

பன்முக விளையாட்டுகள்

உங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டில்தான் கவனம் இருக்கிறதா, ஓடும்போது உறங்கும்போது பந்தைக் கையில் பிடித்துக்கொண்டே அலைகிறதா? இம்மாதிரியான விளையாட்டு ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கான முகாம்தான் இது. ஒன்பது விதமான பந்து விளையாட்டுகளை அறிமுகம் செய்து வைக்கிறது ஸ்போர்ட்டிபீன்ஸ் கோடை முகாம். “சாக்கர், கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, ரக்பி, ஹாக்கி, பேஸ்பால், கைப்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட ஒன்பது வகையான பந்து விளையாட்டுகளைக் கற்றுத் தருகிறோம். அத்துடன் சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்கிறோம்” என்கிறார் ஒருங்கிணைப்பாளர் சோபியா. விளையாட்டுகளுடன் உடற்பயிற்சிகளையும் கற்றுத்தருவது இந்த முகாமின் சிறப்பு.

வயது: 3 8

இடம்: அடையார், அண்ணாநகர், ஒஎம்ஆர், வேளச்சேரி, மயிலாப்பூர்

நாள்: மே 5 முதல் 23 வரை தொடர்புக்கு: 044-66044763

படம் : பெரியசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x