

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அதன் சர்வதேச அலுவலகங்களை இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்காவில் தொடங்கவிருக்கிறது.
இந்தியாவின் மும்பையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தனது ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் மையத்தைத் தொடங்க இந்திய அரசாங்கத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது என்னும் தகவலை, கல்லூரி வளாகப் பத்திரிகையான தி ஹார்வர்ட் கிரிம்சன் தெரிவிக்கிறது.
“மும்பையைத் தவிர, தென்னாப்பிரிக்காவின் தலைநகரமான கேப்டவுனிலும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலும் சர்வதேச அலுவலகம் அமைக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம் என்கிறார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் ஜார்ஜ் ஐ டொமின்கஸ்.
தென்னாப்பிரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நாங்கள் தொடங்கப்போகும் அலுவலகத்துக்கான பணிகள் பூர்வாங்க நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவில் எங்கள் அலுவலகத்தைத் தொடங்குவதற்கான அனுமதியை இந்திய அரசாங்கம் இந்தக் கோடை காலம் முடிவதற்குள் வழங்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் ஜார்ஜ் குறிப்பிட்டார்.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் தொடங்கும் மையம், மாணவர்கள் மற்றும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெரும்பாலான மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையும்.
பெய்ஜிங்கில் தொடங்கப்படும் அலுவலகம், ஷாங்காயில் ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும். ஷாங்காயில் மாணவர்கள் கலந்துரையாடலுக்கான வளாகமும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுவது சிறப்பு.
உலகம் முழுவதும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்துவதற்காக அதன் தலைவர் ரெவ் ஃபாஸ்ட் இந்தியாவுக்குக் கடந்த 2012-ல் வந்திருந்தார். சீனாவுக்குக் கடந்த மார்ச் மாதம் சென்றிருந்தார்.
- ஆங்கில ‘இந்து’ நாளிதழிலிருந்து - திரு