Last Updated : 28 Apr, 2015 11:54 AM

 

Published : 28 Apr 2015 11:54 AM
Last Updated : 28 Apr 2015 11:54 AM

பிளஸ் 2-க்குப் பிறகு: பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கலை அறிவியல் படிப்புகளைப் போன்று பொறியியல் படிப்பும் தற்போது பரவலாகிவிட்டது. ஒருவர் பொறியியல் படிப்புதான் எதிர்காலம் என முடிவெடுத்தால் மட்டும் போதாது. சரியான கல்லூரியை அடையாளம் கண்டு, அதில் சேர்ந்தால் மட்டுமே உயர்கல்விக் கனவு பூர்த்தியாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகளை இந்தக் கல்லூரிகள் உருவாக்கிவருகின்றன.

அவர்களில் பலர் சரியான சம்பாத்தியம் இல்லாது உழல்வதையும், சிலரை மட்டும் படிக்கும்போதே பெரு நிறுவனங்கள் வாரிக்கொள்வதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே, பொறியியல் படிப்பில் சேர்வது என்பதைவிட அதைச் சரியான கல்லூரியில் படிப்பதே அர்த்தமுடையது.

கவுன்சலிங்கின்போது இருக்கும் சொற்ப நேரத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில், தனக்கான கல்லூரியைத் தேர்வு செய்ய இப்போதிருந்தே தயாராவதும் நல்லது. அதற்கான குறிப்புகளை வழங்குகிறார் மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் மனித வளத் துறை இயக்குநர் வி. சேகர்:

தர மதிப்பீடுகள்

கல்லூரியின் தரத்தைப் பல்வேறு வகைகளிலும் உரசிச் சொல்பவைதான் தர மதிப்பீடுகள். கட்டிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டுமான வசதிகள், கற்பித்தல் மற்றும் செய்முறை சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைச் சீர்தூக்கி ஆராய்ந்து தரமதிப்பீடுகள் முடிவு செய்யப்படுகின்றன.

தேசியத் தர அங்கீகாரக் குழுவின் சான்று (NBA-National Board of Accreditation): ஒரு பொறியியல் கல்லூரிக்குத் தலையாயது என்.பி.ஏ (NBA-National Board of Accreditation) எனப்படும் தேசியத் தர அங்கீகாரக் குழுவின் சான்றிதழ். பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE- All india council for Technical Education) நிர்மாணித்த தன்னாட்சி அமைப்புதான் என்.பி.ஏ. மாணவர் நலன் சார்ந்து பொறியியல் கல்லூரி வழங்கும் வசதிகள் ஒவ்வொன்றையும் மதிப்பெண்கள் அடிப்படையில் அறுதியிட்டு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் உயர்கல்வித் தகுதி, அவர்கள் நீண்ட காலமாக அங்குப் பணிபுரிவது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு நிகராகத் தகுதியான பேராசிரியர்கள் எண்ணிக்கை, கல்லூரியில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி, அவர்களில் மேற்கல்வி மற்றும் வேலை பெறும் விகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

என்.பி.ஏ. தரமதிப்பீடு ஒட்டுமொத்தக் கல்லூரியின் தரத்தை மட்டுமல்லாமல் குறிப்பிட்ட பாடத் துறைக்கும்கூட வழங்கப்படுவது உண்டு. குறிப்பிட்ட கல்லூரியின் அங்கீகாரம், அனுமதி குறித்த விவரங்களை AICTE தளத்திலும் ( >>www.aicte-india.org) குறிப்பிட்ட ஊரில் உள்ள உகந்த கல்லூரிகளை அறிய >www.knowyourcollege-gov.in என்ற தளத்தை நாடலாம்.

தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில்- ‘நாக்’ (NAAC- National Assessment and Accreditation Council): பொறியியல் மட்டுமல்ல கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்குமான தரமதிப்பீட்டை ‘நாக்’ வழங்குகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. நிதியுதவியுடன் தன்னாட்சியாக ‘நாக்’ இயங்குகிறது. என்.பி.ஏ. போல அல்லாது ஒட்டுமொத்தக் கல்லூரி தரத்தையும் ஆராய்ந்து ஏ, பி, சி எனத் தரம் பிரிக்கிறது. ‘ஏ’ எனில் 75-க்கும் மேல். ‘பி’ என்பது 65-75. ‘சி’ என்பது 65-க்கு கீழ் மதிப்பெண்களைக் குறிக்கும். மாணவர் சேர விரும்பும் கல்லூரியின் நாக் அங்கீகாரம் குறித்து, நாக் இணையத் தளத்தில் ( >www.naac.gov.in ) தெரிந்துகொள்ளலாம்.

பல்வேறு வணிக நிறுவனங்கள் வரிசையில் கல்வி நிறுவனங்களும் தங்களது தரத்தை எடுத்துச் சொல்ல ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெறுகின்றன.

பெருநிறுவனங்களுடன் அங்கீகார ஒப்பந்தம்

சிறப்பான கல்லூரிகள் பெருநிறுவனங்களின் அங்கீகார ஒப்பந்தம் செய்திருக்கும். பாடம் சார்ந்த செய்முறை விளக்கம் சார்ந்த பயிற்சிகளை அவர்கள் கல்லூரிக்கு வந்து வழங்கவும், தங்களது தொழில் மையங்களுக்கு மாணவர்களை அனுமதித்து நடைமுறைச் செயல்பாடுகள் குறித்த அறிவைப் பெறுவதற்கும் இந்த ஒப்பந்தங்கள் உதவும். வளாகத் தேர்வின் மூலம் முதன்மை மாணவர்களை இந்த நிறுவனங்களே தேர்வு செய்வதும் உண்டு. ஆகவே, பெரும் நிறுவனங்களுடனான அங்கீகார ஒப்பந்தங்கள் அதிக எண்ணிக்கையில் பெற்றிருக்கும் கல்லூரிகள், மாணவர்களுக்குச் சிறப்பான வெளிச்சத்தைத் தரும்.

உயர்கல்வி மற்றும் வேலைக்கான பயிற்சி

பொறியியல் படிப்பினூடே மென்திறன் வளர்ப்பு, சுய முன்னேற்றப் பயிற்சிகள் மற்றும் அடுத்த கட்ட வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கான பயிற்சி அளிக்கிறார்களா என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். சிறந்த கல்லூரிகள் பகுதி நேரப் படிப்பு மற்றும் பயிற்சியாக இவற்றை வழங்கும். அடுத்த கட்டப் படிப்புகள் மற்றும் வேலைக்கான போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவுறுத்தல் மற்றும் பயிற்சிகள் மாணவர்களின் இலக்குகளை மென்மேலும் கூர்மையாக்கும்.

வெளிநாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த கல்வி நிறுவனங்களோடும் கல்லூரிகள் ஒப்பந்தம் செய்திருக்கும். அங்கிருந்து பேராசிரியர்கள் பாடம் நடத்த வருவது, இங்கிருந்து முதன்மை மாணவர்களைப் பார்வையிட அனுப்புவது, இரு தரப்பு மாணவர்களும் தங்களது கல்வி அறிவைப் பகிர்ந்துகொள்வது, வெளிநாட்டுக் கல்வி நிலையங்களின் ஆன்லைன் தரவுகளைப் பயன்படுத்த அனுமதி ஆகியவை இதில் அடங்கும்.

பாடப் பிரிவுகள்

மாணவர் விரும்பும் பாடப் பிரிவு இருக்கிறதா என்று பார்ப்பதுடன், அந்தப் பிரிவில் பத்தோடு பதினொன்றாகப் பெயருக்குப் பயிற்றுவிக்கிறார்களா அல்லது சிறப்புக் கவனம் அளிக்கிறார்களா என்றும் பார்க்கலாம். எதைப் படிக்கிறோம் என்பதைவிட, எப்படிப் படிக்கிறோம் என்பதற்கு இவை உதவும். பாடப் பிரிவு அல்லது துறை சார்ந்த அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.

அடிப்படை ஆய்வக வசதி என்பது ஆராய்ச்சி நிலை அளவுக்குக் கைகொடுப்பதாக இருக்க வேண்டும். கல்லூரிக்கான பொது நூலகம் மட்டுமல்லாது குறிப்பிட்ட துறை சார்ந்த தனி நூலகம் இருப்பது, தங்கும் விடுதி உள்ளிட்ட கல்லூரி வளாகமே ‘வைஃபை’ அதிவேக இணைய வசதி பெற்றிருப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

கடந்த காலச் செயல்பாடுகள்

கல்லூரி குறித்த விளம்பரங்கள் மட்டுமல்லாது, அந்தக் கல்லூரிக்கான வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் கண் முன்னே நிஜமாகச் செயல்பாட்டில் இருக்கிறதா என்றும் சரிபார்க்க வேண்டும். இவற்றோடு கடந்த காலச் சிறப்பும் கல்லூரியின் தரம் குறித்து உண்மையை வெளிப்படுத்தும்.

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகளின் கடந்த சில வருடங்களின் தேர்ச்சி விபரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். தேர்ச்சி விகிதத்தோடு வெளியில் சென்ற மாணவர்களில் உயர்கல்வி பெறுவோர் அல்லது சிறப்பான வேலை பெற்றோர் குறித்தும் முடிந்தவரை தெரிந்துகொள்ளலாம். இவற்றோடு கல்லூரியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து கல்லூரியின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளலாம்.

பாடம் தவிர்த்த இதர திறன் மேம்பாடு

வெறுமனே பாடம் மற்றும் மதிப்பெண் தேர்ச்சிச் சாதனைகள் ஆகியவை பள்ளி நிலையோடு சரி. பொறியியல் கல்லூரியில் பாடம் தவிர்த்த இதர திறன் மேம்பாட்டுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளை மாணவர்களைப் புடம் போடும். விளையாட்டு, சாரணர், செஞ்சிலுவை, கலை இலக்கியச் செயல்பாடுகள் ஆகியவை மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்குத் துணை புரியும். உடற்பயிற்சி, யோகா, தற்காப்புக்கலை பயிற்றுவிப்பு போன்றவை கூடுதல் அம்சங்கள். துறைவாரியாக அதிக எண்ணிக்கையில் பாடம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த குழுக்கள் இருப்பது, மாணவர்களுக்குப் பாடத்தை ஒரு சுமையாக்காது. மேலும் ஒரு பாடப்பிரிவில் பயிலும் மாணவர் மற்றொரு பாடம் சார்ந்த குழுவில், தன்னை இணைத்துக்கொண்டு கூடுதல் பரிமாணங்களில் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இவை மாணவர்களின் பன்முக அறிவை விரியச்செய்யும்.

விடுதி வசதிகள்

கல்லூரி வேலை நேரம் தவிர்த்த நாளின் பெரும்பகுதியைப் பயணமே விழுங்குமென்றால், விடுதியில் தங்கிப் படிப்பதே சமயோசிதம். அத்தகையவர்கள் கல்லூரி மட்டுமல்லாது விடுதி வசதிகளையும் சரிபார்த்துக்கொள்வது உத்தமம். கல்லூரி வளாக வட்டத்துக்குள் விடுதி இருப்பது நலம். விடுதித் தூய்மை, அமைதியான சூழல், உணவு, தண்ணீர் வசதி, பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றோடு, இணைய வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்றும் அறிந்துகொள்ளலாம்.

கல்வி உதவிகள்

அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கிறார்களா என முன்னதாகவே கேட்டு உறுதி செய்துகொள்ளலாம். பிளஸ் 2 முதன்மை மதிப்பெண் மாணவர்களுக்குச் சில கல்லூரிகள் கட்டணத்தைக் குறைக்கும். அந்தக் கல்லூரிகளில் சேர்வது பெற்றோரின் பொருளாதாரச் சுமையை இலகுவாக்கும்.

சமூக அடிப்படையில் அரசு வழங்கும் கல்விஉதவித் தொகைகளை முறைப்படி கல்லூரி நிர்வாகம் வழங்க ஏற்பாடு செய்கிறதா என்றும் உறுதி செய்துகொள்ளலாம். பெரு நிறுவனங்கள் வழங்கும் ஆராய்ச்சி தொடர்பான கல்விஉதவித் தொகைகளுக்குக் குறிப்பிட்ட கல்லூரியில் இடமிருந்தால், அவற்றைக் கூடுதல் அம்சங்களாகக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x