அறிவியல் துளிகள்: ‘ரத்த’ மழையின் மர்மம்
‘ரத்த’ மழையின் மர்மம்
கேரளத்திலும் இலங்கையிலும் 1896-ம் ஆண்டு முதலாக சிவப்பு வண்ணத்தில் மழை பெய்த சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதன் மர்மம் புரியாமல் மக்களிடம் பல நம்பிக்கைகள் நிலவின.
ஐரோப்பாவின் ஆஸ்திரியா நாட்டிலிலுள்ள சிவப்பு வண்ணப் பாசிகளின் விதைகள் காற்றின் மூலம் மேகங்களில் ஏறிக் காற்றின் திசைப்படி கேரளா, இலங்கை வழியாகச் செல்லும்போது பெய்யும் மழை சிவப்பாக இருப்பதாக இந்தியா, ஆஸ்திரியா நாடுகளின் விஞ்ஞானிகள் செய்துள்ள ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செவ்வாயில் கனிமங்கள்
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்துக்கு குரியோசிட்டி எனும் ஒரு தானியங்கி ரோபாட்டை அனுப்பியுள்ளது. அது சில ஆண்டுகளாகச் செவ்வாய்க் கிரகத்தின் தரைப் பரப்பில் ஆய்வுகளை நடத்திவருகிறது. அது கடந்த மார்ச் 18-ல் செவ்வாயின் தரையில் கனிம வளங்கள் செழுமையான முறையில் கீற்று கீற்றாகப் பொதிந்துள்ளதைக் கண்டு பிடித்துப் படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.
செவ்வாயின் தரையில் பாளம்பாளமாய் கனிமங்கள்.
நடனம் சொல்லித்தரும் கண்ணாடி
கண்களில் அணியக்கூடிய கம்ப்யூட்டராக கூகுள் நிறுவனம் 2013-ல் வெளியிட்ட கண்ணாடிக் கணினி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை. மேலும் மேம்படுத்தப்படுகிற அந்தக் கண்ணாடிக் கணினியில் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு ஏற்ற நடன அசைவுகளை அணிந்திருப்பவருக்குத் தெரிவிக்கும் தொழில்நுட்பத்துக்கான காப்புரிமைக்கும் கூகுள் நிறுவனம் விண்ணப்பித்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுளின் கண்ணாடிக் கணினி
விஞ்ஞானியின் பெயருக்குக் காப்புரிமை
உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (73) தன்னுடைய பெயரையே காப்புரிமை செய்துள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இன்னமும் பணியாற்றி வருகிறார். வினோதமான நோயால் உடல் முழுவதும் குறுக்கப்பட்டு நவீனச் சக்கர நாற்காலியில் வலம் வருகிறார்.
சமீபத்தில் அவரை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் எடுத்து அது பெரும் வெற்றியடைந்தது. அவரை மையமாக வைத்து இத்தகைய வணிக முயற்சிகள் அதிகரிப்பதையொட்டித் தனது பெயரை ஒரு ட்ரேட் மார்க்காக மாற்றும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கலாம்.
தன்னைத் தாக்கியிருக்கிற வினோதமான நோயை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் ஒரு அறக்கட்டளை அமைக்கப்போவதாகவும் அதற்கு இந்தக் காப்புரிமையால் வரும் நிதி உதவும் எனத் தெரிகிறது.
ஸ்டீபன் ஹாக்கிங்
கருந்துளைக்குள் பொருளா?
பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகளில் உள்ளே செல்கிற ஒளி உள்ளிட்ட பொருள்கள் எல்லாம் மாயமாகி விடுவதாகப் பல காலமாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டீஜன் ஸ்டோஜ்கொவிக் சமீபத்தில் சமர்ப்பித்துள்ள ஆய்வில் கருந்துளையின் ஈர்ப்பாற்றலைக் கணித்து அதனுள் இருக்கிற பொருள்களை அறியலாம் என முன்மொழிந்துள்ளார். வானியல் விஞ்ஞானி களிடையே இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கருந்துளையின் கலைவண்ணப் படம்
