Published : 14 Apr 2015 12:02 PM
Last Updated : 14 Apr 2015 12:02 PM

ஆங்கிலம் அறிவோமே- 53: கண்ணே... மணியே... என்பது கொஞ்சல்தானே!

முன்பு Anagrams பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதில் ஒரு வித்தியாசமான வகை உண்டு. அது Antigram. அதாவது இந்த anagramக்கு நேர் எதிரான அர்த்தத்தைக் கொடுக்கும்.

REAL FUN என்பதன் anagram (அதாவது இந்த எழுத்துகளை மாற்றிப் போட்டால்) FUNERAL . இது எப்படி இருக்கு?

புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ள SANTA, SATAN ஆகிய வார்த்தைகளைக் கூட ANTIGRAMS-ஆக வைத்துக் கொள்ளலாம்.

கீழே உள்ளவற்றுக்கான antigramsகளைக் கண்டுபிடியுங்கள்.

1) NICE LOVE

2) IS IT LEGAL? NO.

3) NO MORE STARS

4) UNITED

விடை அடுத்த இதழில் சொல்கிறேன்.

ழுவதா, சிரிப்பதா என்றே புரியவில்லை என்ற இந்த வாக்கியத்தை ஆங்கிலத்தில் I do not know to cry or smile என்று மொழிபெயர்த்துவிட்டு, அது சரியானதுதானா என்றும் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

சரியல்ல. சரியல்ல, சரியல்ல. அதாவது இதில் மூன்று தவறுகள்.

I do not know என்பதற்குப் பிறகு whether என்ற வார்த்தை வரவேண்டும்.

அழுவது என்பதை cry என்றும் சொல்லலாம்தான். ஆனால் கத்துவது என்பதற்கும், அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனவே weep என்ற வார்த்தை மேலும் பொருத்தமானதாக இருக்கும்.

Smile என்பது சிரிப்பு அல்ல. புன்னகை. வாக்கியத்தில் laugh என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

ன்னொரு முக்கியமான விஷயம். ‘to cry’ என்று குறிப்பிடுவதுபோல ‘to smile’ என்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும். வாக்கியத்தின் நடுவே இதுபோன்ற அர்த்தத்தில் and, or ஆகியவை பயன்படுத்தப்படும்போது இரண்டு verbsகளுக்கும் முன்பாகவும் to போட்டாக வேண்டும்.

ஆக, I do not know whether to weep or to laugh என்பது சரி. அது இருக்கட்டும், இப்படிப்பட்ட குழப்பம் இல்லாமல் ஏதாவது ஒரு முடிவை எடுங்கள். அட, smile பண்ணுங்க சார்.

னக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரின் புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதைப் படித்தீர்களா என்று ஒரு நண்பரைக் கேட்டேன். அதற்கு அவர் சட்டென்று “No. Firstly I have no time. Secondly, I do not like his books” என்றார். இப்படிக் கூறிவிட்டுத் தன் நாக்கைக் கடித்துக்கொண்டார். அதாவது என் மனதைப் புண்படுத்தி விட்டாராம்.

இதற்கு அவர் நாக்கைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்குப் பிடித்த எழுத்தாளர் மற்றவருக்குப் பிடிக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் நாக்கைக் கடித்துக்கொண்டே ஆகவேண்டுமென்றால் அதை அவர் வேறொரு விஷயத்துக்காகச் செய்திருக்கலாம். அவர் கூறிய வாக்கியங்களில் ஒரு தவறு இருக்கிறது. First என்றுதான் பயன்படுத்த வேண்டுமே தவிர, firstly அல்ல. ஆங்கிலத்தில் அப்படி ஒரு வார்த்தை கிடையாது.

“இதிலே உங்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லையே?’’ என்று யாராவது கேட்கும்போது “No issues’’ என்று சிலர் பதில் அளிப்பதுண்டு. ‘எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்று இதற்கு அர்த்தம்.

Issue என்ற வார்த்தையை வாரிசு அல்லது குழந்தை என்ற அர்த்தத்திலும் பயன்படுத்துகிறோம். அப்படியானால் Chandran has no issues என்று சொல்லலாமா? கூடாது. இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படும்போது Issue என்று ஒருமையில்தான் பயன்படுத்த வேண்டும்.

PUPIL - PEOPLE

லத்தீன் மொழியில் PUPIL என்றால் சிறிய பொம்மை என்ற அர்த்தம். ஒரு வேளை பள்ளி வகுப்பில் மாணவர்கள் பொம்மைகள் போல அமர்ந்திருப்பதாக நினைத்தோ என்னவோ அவர்களை PUPILS என்று அழைத்தார்கள்.

கண்மணியையும் (அதாவது கண்ணின் எந்தத் துவாரத்தின் வழியாக ஒளி உள்ளே பாய்கிறதோ அது) PUPIL என்று சொல்வதுண்டு.

மக்களைக் குறிப்பிடும்போது PEOPLE என்கிறோம்.

ஒன்றைக் கவனித்தீர்களா? PEOPLE என்பதே பன்மைதான். எனவே PEOPLES என்று குறிப்பிடக் கூடாது. ஆனால் PUPIL என்றால் மாணவன். இதற்குப் பன்மை உண்டு. மாணவர்களைக் குறிக்க PUPILS என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x