‘சாண்ட்விச் எப்படி வந்தது?

‘சாண்ட்விச் எப்படி வந்தது?
Updated on
1 min read

பேக்கரிக்குச் செல்லும்போது, ஓரிடத்துக்கு அவசரமாகப் போக வேண்டி வரும்போது எனப் பல்வேறு காரணங்களுக்காக சாண்ட்விச் சாப்பிடுகிறோம். இரண்டு ரொட்டித் துண்டுகள் இடையே அவரவருக்குப் பிடித்த மாதிரி வெங்காயம், தக்காளி, வெள்ளரி அல்லது இறைச்சி வைத்துச் சாப்பிடுவதுதான் சாண்ட்விச்.

என்ன காரணம்?

இந்தச் சாண்ட்விச்சுக்கான பெயர் காரணம் தெரியுமா? இந்த உணவுப் பண்டத்துக்குப் பெயர் தந்தது இங்கிலாந்தில் உள்ள ஊர். இங்கிலாந்தில் உள்ள சாண்ட்விச் நகரப் பிரபு ஜான் மாண்டேகு தான், இந்த உணவுப் பண்டத்துக்குப் பெயர் வரக் காரணம்.

சூதாட்டத்தில் ஆர்வமுடைய ஜான் மாண்டேகு மேஜையில் உட்கார்ந்து சீட்டு விளையாடுவதில் தீவிரமாக இருப்பார். பசிக்கும்போது சாப்பிடக்கூட வெளியே செல்ல மாட்டார். சீட்டு விளையாடும் டேபிளிலேயே பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் நினைத்தார்.

ஆனால், அப்படிச் சாப்பிடும்போதுகூட வழக்கமாக வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் முள்கரண்டி, கத்தியைப் பயன்படுத்தாமல் சாப்பிடும் உணவாக இருந்தால்தானே, சீட்டு விளையாட வசதியாக இருக்கும் என்று நினைத்தார். அப்போது அவர் சாப்பிட ஆரம்பித்ததுதான் சாண்ட்விச்.

வறுக்கப்பட்ட மாட்டிறைச்சியை இரண்டு ரொட்டித் துண்டுகளிடையே வைத்துத் தரும் சாண்ட்விச்சைத்தான் அவர் பெரிதும் விரும்புவார். உட்கார்ந்த இடத்திலேயே சாண்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு விளையாடுவார்.

இன்றைக்கும் பொருந்தும்

அவர் சாப்பிடுவதற்கு முன் சாண்ட்விச் என்ற உணவுப் பண்டமே கிடையாதா என்று கேட்டால், அதற்கு முன்னரும் சாண்ட்விச் என்ற பண்டம் இருந்தது. அதற்கு அப்போது ‘ரொட்டியும் இறைச்சியும்', ‘ரொட்டியும் பாலாடைக்கட்டியும்' என்பதுதான் பெயராக இருந்தது.

சாண்ட்விச் பிரபலம் ஆனதற்கு, அவருடன் சீட்டு விளையாடிய மற்றவர்களும், “சாண்ட்விச் பிரபு ஆர்டர் செய்ததையே எனக்கும் கொடுங்கள்” என்று கேட்டது ஒரு காரணமாக இருக்கலாம். ஜான் மாண்டேகுவுக்குப் பிறகு சாண்ட்விச் என்ற பெயர் அந்த ரொட்டி உணவுக்குக் கிடைத்ததுடன், பிரபலமும் அடைந்தது.

ஒரு வகையில் சாண்ட்விச் பிரபுவின் பெயர் சாண்ட்விச்சுக்கு வைக்கப்பட்டது, இன்றைய சூழ்நிலைக்கும்கூடப் பெருமளவு பொருத்தமாக இருக்கிறது. இன்றைக்குப் பலரும் அவசர வேலைக்குச் செல்லும்போதும், வேலைக்கு இடையேயும் அவசர அவசரமாகத்தான் சாண்ட்விச்சை விழுங்குகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in