Last Updated : 21 Apr, 2015 01:04 PM

 

Published : 21 Apr 2015 01:04 PM
Last Updated : 21 Apr 2015 01:04 PM

பிளஸ் 2-க்குப் பிறகு: வருமானம் தரும் ஹார்டுவேர் பயிற்சி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சொல்லியுள்ளபடி, நாட்டில் லட்சக்கணக்கான வேலைகளைத் தரும் வாய்ப்பு கொண்டது கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறை. அடிப்படைப் பழுது நீக்கல் தொடங்கி, நிறுவனங்களின் சிஸ்டம் அட்மின்வரை பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு உண்டு.

எந்தப் பிரிவுப் பாடமென்றாலும் கணினிப் பயன்பாடு தவிர்க்க முடியாதது என்பதால் அறிவியல், பொறியியல் மட்டுமன்றி அனைத்துத் துறையினரும் கணினி ஹார்டுவேரில் அடிப்படைப் பயிற்சி பெறலாம். படிப்பு மற்றும் பணி சார்ந்து பயன்படாவிட்டாலும், சிறு பழுதுகளை நாமே சரிபார்க்கவும் இப்பயிற்சி உதவும்.

அறிவியல், பொறியியல் படிப்பை மேற்கொள்ள இருப்பவர்கள் தாராளமாக இந்த விடுமுறையில் கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். இது கல்லூரி மேற்படிப்பின்போது நிச்சயம் கைகொடுக்கும். புத்திசாலித்தனமாக இதையே பகுதி நேரப் பணியாகப் பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள்.

இந்த வாய்ப்புகள் சம்பாத்தியம் மட்டுமன்றி, வளரும் துறையின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய ஹார்ட்வேர் படிப்புகள் எவையெவை, அவற்றை எப்படிப் படிக்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார், துறை சார்ந்த வல்லுநர் வந்தவாசி ஜெ.சதீஷ்குமார்.

அடிப்படை ஹார்ட்வேர் பயிற்சிகள்

பிளஸ் 2 என்றில்லை பத்தாம் வகுப்பு முடித்ததுமே கணினி ஹார்ட்வேர் பயிற்சி பெறலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி போதும். சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளாகவும் இவை கிடைக்கின்றன. சாப்ட்வேர் பயிற்சி மையங்கள் பலவும் அடிப்படை ஹார்டுவேர் பயிற்சியை வழங்கிவருகின்றன. ஆனால் ஹார்ட்வேர் துறையைப் பொறுத்தவரை, பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழுக்கு மதிப்பில்லை.

ஒருவர் நிரூபித்துக் காட்டும் திறன் மற்றும் நடைமுறை அறிவையே வேலைவாய்ப்பின்போது நிறுவனங்கள் பரிசோதித்து அறிகின்றன. அதனால், குறுகியகாலப் பயிற்சியைத் தொடர்ந்து நடைமுறையில் கணிசமான அனுபவம் பெற்ற பிறகு ஆன்லைன் சான்றிதழ்களை வழங்கும் தேர்வுகளை எதிர்கொள்ளலாம். ஹார்ட்வேர் துறையில் A+, நெட்வொர்க்கிங்கில் N+ எனச் சான்றிதழ்களைப் பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.

நடைமுறை அனுபவம் அவசியம்

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பயிற்சிகளில் card level, chip level என 2 நிலைகள் உண்டு. இந்த விடுமுறை இடைவெளியில் கார்ட் லெவலில் காலெடுத்து வைக்கலாம். தொடர்ந்து ஆர்வத்தின் அடிப்படையில் கல்லூரி தொடங்கியதும், வார இறுதி விடுமுறையில் சி லெவலில் பயிற்சி பெறுவது பற்றி, பின்னர் தீர்மானித்துக்கொள்ளலாம். பயிற்சி மையங்களில் வழங்கப்படும் பாடத்தைவிட நடைமுறைப் பயிற்சியே அவசியம்.

இந்தப் பயிற்சிகளை முடித்த மாணவர்கள், பயிற்சி பெற்ற நிறுவனங்கள் அல்லது மற்ற இடங்களில் ஊதியம் இன்றி உழைப்பை வழங்க முன்வருவது அனுபவ அறிவை விருத்தி செய்யும். போதிய அனுபவ அறிவைப் பெற்ற பின்னர், நண்பர்களுடன் இணைந்து தொழில் ரீதியாகவோ அல்லது தமக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அழைப்பின் பெயரிலோ ஹார்ட்வேர் பழுது நீக்கல் பணியை மேற்கொள்ள முடியும். இதில் பெரிய முதலீடு எதுவுமின்றி மாதந்தோறும் கணிசமான தொகையைக் கல்லூரி மாணவர்கள் பலர் சம்பாதிப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

நெட்வொர்க்கிங் பயிற்சிகள்

இன்றைய இணையப் பயன்பாட்டு உலகில் நெட்வொர்க்கிங்கில் பயிற்சி பெறுவதும் கூடுதல் திறனை வளர்த்தெடுக்க உதவும். சிறு அலுவலகமானாலும், உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனமானாலும் கணினிகளைப் பிணைத்த அலுவலகப் பயன்பாட்டில் இந்தத் துறைக்கு வல்லுநர்கள் தேவை இன்னமும் அதிகரிக்கும். பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு பயிற்சிகளைப் பெற்றவர்கள் cisco சான்றிதழ்களைப் பெற முயல்வதன் மூலம், தங்கள் திறனைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

இதன் அடுத்த கட்டமாக Administration level பயிற்சியைப் பெறலாம். மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். சான்றிதழ்கள் இந்தத் துறையில் நாம் பெற்ற பயிற்சிக்குக் கட்டியம் கூறும். பெரிய நிறுவனங்களில் பணியில் சேர விழைகையில் இந்தச் சான்றிதழ்கள் உங்கள் மதிப்பைக் கூட்டும்.

இந்த ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சிகள் 3 மாதத்தில் தொடங்கி 1 வருடப் பயிற்சியாகக் கிடைக்கின்றன. கோடைகாலப் பயிற்சியாக வழங்குபவர்கள் துரிதப் பயிற்சியாக இந்த விடுமுறையில் பாடத்தை வழங்கிவிட்டு, நடைமுறை பயிற்சியைச் சாவகாசமாக அளிப்பதும் உண்டு. ரூ. 2 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 16 ஆயிரம்வரை, நிலைகள் மற்றும் பயிற்சி மையங்களைப் பொறுத்துக் கட்டணங்கள் வேறுபடும்.

ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தற்போது அதிகரித்துள்ளன. ஆனால், அடிப்படைப் பயிற்சியை நேரில் பெறுவதே சிறந்தது. மேலதிகப் பயிற்சிகளைக் கல்லூரி படிப்பின் போக்கில் பகுதி நேரமாக ஆன்லைனில் பயிலலாம்.

இதர ஹார்ட்வேர் பயிற்சிகள்

சில வருடங்களுக்கு முன்புவரை கோடை விடுமுறைப் பயிற்சியாக இருந்து வந்த ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி மெக்கானிசம் பயிற்சிகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் தொழில்முறை அனுபவஸ்தர்கள் ஆகியோரது ஆக்கிரமிப்பாலும், மாணவர்களின் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் படிப்பு மோகத்தாலும் வரவேற்பு இழந்திருக்கிறது. மேற்படிப்பு சார்ந்து ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேரலாம்.

மற்றபடி சீஸனில் மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளதும், நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ரிஸ்க் உடையதுமான இப்பயிற்சிகளைத் தவிர்க்கலாம். மாறாக சி.சி.டி.வி., இன்வெர்ட்டர்கள், சோலார் பேனல்களை நிறுவுதல் போன்ற வேலைவாய்ப்புகளும் தற்போது அதிகரித்துவருகின்றன என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம்.

‘ஸ்மார்ட்’ வேலைவாய்ப்பு

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி ஹார்ட்வேர் துறை ஆர்வமுள்ளவர்கள் வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் துறையில் பயிற்சி பெறலாம். அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைக்கான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன. தன்னளவில் விரிவடைந்துவரும் இத்துறையில் திறன் மிகுந்த நபர்களின் தேவை நாளும் அதிகரித்துவருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தற்போது இந்தப் பயிற்சியில் அதிகம் சேர்கிறார்கள்.

3 மாதம் தொடங்கி 1 வருடம்வரை விரியும் இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி லட்சம்வரை செல்கிறது. அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி சுவாரசியமாகவும் பயனுள்ள விடுமுறைப் பயிற்சியாகவும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x