Published : 14 Apr 2015 11:56 AM
Last Updated : 14 Apr 2015 11:56 AM

என்ன படிக்கலாம்? - எம்.எஸ்சி மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு

கதிரியக்க இயற்பியலில் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் கதிரியக்கப் பாதுகாப்பு மருத்துவ அதிகாரி ஆகலாம். ஓராண்டு காலம் கொண்ட கதிரியக்க இயற்பியல் டிப்ளமா (Diploma in Radiological Physics) படிப்பில் எம்.எஸ்சி (இயற்பியல்) பட்டதாரிகள் சேரலாம்.

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஓர் அங்கமான கதிரியக்க இயற்பியல் மற்றும் ஆலோசனை பிரிவில் (Radiological Physics and Advisory Division) இந்த டிப்ளமா படிப்பு வழங்கப்படுகிறது. இதில் சேருவோருக்கு உதவித்தொகையாக மாதம்தோறும் ரூ.9,300 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்சி இயற்பியல் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அத்துடன் பி.எஸ்சி இயற்பியலிலும் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 26. ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. நுழைவுத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் 25 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த டிப்ளமா படிப்பை முடித்த பின்னர் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கதிரியக்கச் சிகிச்சை மையங்களில் ஓராண்டு காலம் பயிற்சி (Internship) பெற வேண்டும். இந்தப் பயிற்சியை முடித்தவர்கள் கதிரியக்கப் பாதுகாப்பு மருத்துவ அதிகாரி சான்றிதழ் தேர்வை (Radiological Safety Officer-Medical, Certification Examination) எழுதலாம்.

இந்தத் தேர்வில் வெற்றிபெறுவோர் கதிரியக்கப் பாதுகாப்பு மருத்துவ அதிகாரி ஆகும் தகுதியைப் பெறுகிறார்கள். தற்போது மருத்துவ இயற்பியல் பயிற்சி பெற்றவர்களுக்கான தேவை அதிகளவில் இருப்பதால் கதிரியக்க இயற்பியல் டிப்ளமா முடிப்பவர்களுக்கு வேலை உறுதி.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஓர் அங்கமான கதிரியக்க இயற்பியல் மற்றும் ஆலோசனைப் பிரிவு, கதிரியக்க இயற்பியல் பட்டயப் படிப்புக்கு 2015 - 2016-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்கு ஏப்ரல் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இறுதி ஆண்டு எம்.எஸ்சி படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விரிவான தகவல்களை ஏப்ரல் 4-10-ம் தேதியிட்ட ‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ இதழில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x