Last Updated : 07 Apr, 2015 11:17 AM

 

Published : 07 Apr 2015 11:17 AM
Last Updated : 07 Apr 2015 11:17 AM

வெட்டிவேரு வாசம் 30- ‘சீஸரும் லிங்கேசனும்...’

நாய்களுக்கும் எனக்குமான உறவு விநோதமானது. சில சமயங்களில் என்னை முறைத்து உறுமியிருக்கின்றன. தொண்டை கிழியக் குரைத்தபடி குழுவாகத் துரத்தியிருக்கின்றன. ஆனால், இதற்கொரு மறுபுறமும் உள்ளது.

சில நாய்கள் அதீதமான நட்பு பாராட்டுவதும் உண்டு. ஏற்காட்டில், தாவி வந்து முன்னங்கால்களை என் மார்பில் பதித்து என் முகத்துக்கு நேரே அதன் முகத்தை வைத்து ஏக்கத்துடன் பார்க்கும் ராணி; குன்னூரில் மரியாதை யும் பணிவுமாக உடன் நடந்து வந்து நான் வாங்கிப்போடும் பொறையைச் சுவைக்கும் மணி; நான்கு வருஷத்துக்கு ஒரு முறைதான் பார்க்க நேர்ந்தாலும் என்மேல் விழுந்து புரண்டு விளையாடும் கொடைக்கானல் ப்ரௌனீ என்று ஏகப்பட்ட பைரவ நண்பர்கள். அவர் களில் மறக்கமுடியாதவன் சீஸர்.

ஓர் அதிகாலை நடைப் பயிற்சியின் போது, பெசன்ட் நகர் தெரு ஒன்றில் திரும்பினேன். வேதனையில் தோய்ந்த அவலமான ஊளை கேட்டது. சுற்றி லும் பார்த்தேன். தோட்ட வீடு ஒன்றின் முகப்பு இரட்டை கேட்டில் ஒன்றின் அடியில் ஒரு நாயின் கழுத்து சிக்கியிருந்தது. வெளியே வரவும் முடியாமல், பின்னுக்கு இழுத்துக் கொள்ளவும் தெரியாமல் வலியுடன் அது ஊளையிட்டது. அந்த வீட்டுப் பெண்மணி என்ன செய்வது என்று புரியாமல் திகிலுடன் நின்றிருந்தார்.

இன்னொரு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன். நாயின் கழுத்துப் பகுதியைப் பற்றி அழுத்தி பக்கவாட்டில் திருப்பினேன். இழுத்தேன். சர்ரக் என்று கழுத்து உள்ளே வந்தது. விடுவித்தேன். நாய் ஒரே பாய்ச்சலில் வெளியே ஓடியது. நின்றது. திரும் பிப் பார்த்தது. வாலை ஆட்டிக் குரைத்தது. நன்றியறிதல்!

அடுத்ததொரு நாளில் சைக்கிளில் விரைந்த ஒரு பள்ளிச் சிறுவன் ‘சீஸர்' என்று குரல் கொடுத்தபடி பெடலை வேகமாக மிதிக்க, அதே நாய் நாலு கால் பாய்ச்சலில் அவனுடன் ரேஸ் ஓடத் தொடங்கியது. அதன் பெயர் சீஸர் என அறிந்தேன்.

சீஸர் ரேஸ் ஓடி முடித்துவிட்டு, என்னைத் தேடி மூச்சிரைத்தபடி ஓடி வந்தான். நாக்கிலிருந்து நுரைக்கோடு வழிந்தது. அருகே வந்து நின்று என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். கண்களில் நட்பு தெறித்தது. அவனது தலையைப் பிடித்து மெல்ல வருடினேன். முனகலாக ஊளையிட்டான்.

அன்றைக்கு ஆரம்பித்த நட்பு தொடர்ந் தது. தினம் பொறை, மிக்சர், முறுக்கு, பிஸ்கட் என்று ஏதாவது ஒன்றைக் கொடுப்பேன். “சாப்பிடு...” என்று சொல்லும் வரை சீஸர் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பான்.

ஒரு நாள் சீஸர் ஒரு பெட்டைத் துணை யைக் கூட்டிவந்தான். பெட்டையும் அவனுமாக க்யீங்க்… க்யீங்க்… என்று நன்றி முனகல்களோடு நான் கொடுத்ததைத் தின்றுவிட்டுச் சென்றார் கள். வாலாட்டிப் பழகினார்கள்.

இருவரும் சிறு குழந்தைகளுடன் ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். பிஸ்கட் கொத்த வரும் காக்கைகளை விரட்டாமல் வேடிக்கை பார்ப்பார்கள். பரட்டைத் தலைப் பிச்சைக்காரி ஒருத்தியிடம் சென்று அலுமினிய பிளேட் டீயை நக்கி உறிஞ்சுவார்கள்.

ஒரு நாள் உறவுக்காரக் குழந்தை களோடு கடற்கரைக்குச் சென்றபோது சீஸரையும் அவனது காதலியையும் செருப்புகளுக்குக் காவலாக அமர்த்தி விட்டு அலைகளின் நடனத்தைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தேன். ஓர் அங்குலம் கூட நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.

இன்னொரு நாள் நடைப் பயிற்சியின் போது திடீரென்று என் முதுகில் படீர் என்று ஓர் அடி விழுந்தது. திகைத்துத் திரும்பினால் பல வருடங்களாகப் பார்க் காத ஒரு நண்பன். வியப்புடன் அவனிடம் பேசுவதற்குள் சீஸர் பாய்ந்து வந்து அவன் கையை வாயால் பற்றிவிட்டான். நண்பன் பயந்து போனான்.

“சீஸர் விடு...” என்றேன். விலகினான்.

என்னைப் பார்த்து யாரும் கத்திப் பேசினாலோ, என்னை அடிப்பது போல் கையை ஓங்கினாலோ சீஸருக்குப் பிடிக்காது. காப்பாற்றப் பாய்ந்து ஓடி வருவான்.

சீஸரின் வாழ்க்கையில் ஓர் அவலம் நிகழ்ந்தது. ஒரு பின்னிரவில் சாலையில் அவனும் அவனது காதலியும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை ரசித்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

திடீரென்று சீஸரிடமிருந்து அவனது காதலி விலகி நடுச்சாலைக்குச் சென் றாள். ‘விஷ்க்' என்று பாய்ந்து வந்த ஒரு லாரியின் பாதையில் குறுக்கிட்டு சக்கரத்தில் சிக்கினாள். விநாடிக்குள் தரையோடு தரையாகத் தேய்ந்தாள்.

சீஸர் திகைத்தான். ஊளையிட்டபடி பெட்டையைச் சுற்றிச் சுற்றி வந்தான். ஒதுங்கிச் சென்று சோகமாக அமர்ந் தான். நானும் கையாலாகாத நிலையில் இருந்தேன். துக்கம் நெஞ்சை அடைத்தது.

இரண்டே நாட்கள்தான். 'நம்மால் மாற்ற இயலாத ஒன்றை ஏற்றுக்கொள் வதே சரி' என்ற தத்துவத்தை எனக்கு போதிப்பது போல் சீஸர் மறுபடியும் உற் சாகமாகிவிட்டான். என்னிடம் பழையபடி நட்பு பாராட்டினான். பரட்டைத் தலை பிச்சைக்காரியிடம் விளையாடத் தொடங் கினான். சிறுவனின் சைக்கிளைக் குதூகலத்துடன் துரத்தினான்.

பணக்காரனோ, ஏழையோ, அழகனோ, குரூபியோ அதெல்லாம் நாய்களுக்கு ஒரு பொருட்டே அல்ல; அவற்றின் மொழி அன்பு என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

‘ஐ’ திரைப்படத்தில், கதாநாயகன் லிங்கேசனின் (விக்ரம்) எதிரிகள் சதி செய்து, அவன் அழகைக் குலைத்து, கூன னாக்கி விடுவார்கள். ஒதுக்குப்புறமான பாழ்வீட்டில், அவன் தலைமறைவாக இருக்கும்போது, அவனிடம் ஒரு ‘சீஸர்' நட்பு பாராட்டும்.

லிங்கேசனின் அன்புக்கு அடிமையாகிவிடும். ஒரு முக்கியமான கட்டத்தில், லிங்கேசனைத் தாக்க நினைக்கும் வில்லன் மீது பாய்ந்து அவனைக் கடிக்கும்.

மனிதர்கள் வெளிப்படுத்திய அலட்சியமோ, அசூயையோ அதனிடம் இருக்காது. நாய்க்கு லிங்கேசன் கூனனாகவோ, குரூபியாகவோ தெரியவில்லை. இன்னோர் அன்பான உயிராக மட்டுமே தெரிந்தான்.

பார்த்த, பழகிய பல சீஸர்களின் குணமே இப்படிப்பட்ட நெகிழ்ச்சியான காட்சிக்கு வழிவகுத்தது.

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x