

தங்கம் என்றால் வாயைப் பிளக்காதவர்கள் குறைவு. ஆனால், தங்கத்துக்கு இப்படி மதிப்பு கிடைப்பதற்கு முன்னதாகத் தங்கத்தைப் போலவே பல பொருட்கள் போற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று உப்பு. என்னது உப்பா என்று சந்தேகம் வருகிறது, அல்லவா?
ஒரு காலத்தில் உப்பைப் போன்ற மதிப்புமிக்க பொருள் உலகத்தில் வேறு இல்லாமல் இருந்தது. உப்பு அச்சுகளை காசைப் போலக் கொடுத்திருக்கிறார்கள் என்றால், அது நிச்சயம் மதிப்புடன்தான் இருந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சம்பளத்தைக் குறிக்கும் ‘சாலரி' என்ற வார்த்தை உப்பில் இருந்துதான் வந்தது.
உப்புப் பாதைகள்
பண்டைக் காலம் முதலே உப்பு உணவில் சேர்க்கப்பட்டு வந்திருக்கிறது. உரிய அளவில் சேர்க்கப்பட்ட அதன் உவர்ப்பு சுவை உணவுப் பண்டங்களின் சுவையைக் கூட்டியது. பண்டைக் கால வர்த்தகப் பாதைகள், புதிதாகப் போடப்பட்ட பல சாலைகள் உப்பைக் கொண்டுசெல்வதற்காக உருவாக்கப்பட்டவையாக இருந்தன.
இப்படி உப்பை எல்லோரும் கொண்டாடியதற்குக் காரணம், உலகம் முழுவதும் அது தேவைப்பட்டதுதான். அதேநேரம், உப்பை உருவாக்கும் முறை உலகின் எல்லாப் பகுதிகளிலும் எளிதாக இல்லை. தங்கம், வெள்ளியைப் போல அன்றைக்கு அரிதாகக் கிடைத்த உப்பு மதிப்பு மிக்கதாகவும், பணத்துக்கு ஈடாகவும் கருதப்பட்டது இயல்புதானே.
சம்பளம்
உலகின் பல பகுதிகளில் உப்பு அச்சுகள் பணத்துக்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்டைக் காலச் சீனாவில் உப்பு நாணயங்கள் இருந்தன. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உப்பு அச்சுகள் பணமாகக் கருதப்பட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் பருத்தியை வாங்குவதற்கு வர்த்தகர்கள் உப்புப் பணத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
பண்டைய ரோமில் போர் வீரர்களுக்கு உப்பே சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து ‘சாலரியம்' என்ற ரோமானியச் சொல் உருவானது. சம்பளத்துக்கான ஆங்கிலச் சொல்லான ‘சாலரி', இதிலிருந்து உருவானதுதான். ‘சாலரியம்' என்றால், உப்புப் பணம் என்று அர்த்தம்.
தேயிலை பணம்
உப்பு பணமாகப் பயன்பட்டது போலவே, மற்றொரு உணவுப் பண்டமும் பணமாகப் பயன்பட்டுள்ளது - அது தேயிலை. ஒரு காலத்தில் ரஷ்யா, திபெத், சீனாவில் தேயிலையால் உருவாக்கப்பட்ட அச்சுகள் பணத்தைப் போலப் பயன்பட்டுள்ளன. எடை அதிகமில்லாத அந்த அச்சுகள் தூக்கிச் செல்ல வசதியாக இருந்ததுதான், அதற்கு முக்கியக் காரணம்.