

மனதில் ஊக்கம் உள்ளவருக்கு வாழ்வில் தேக்கம் இருக்காது. சோம்பல் என்ற வியாதி வராது. ஊக்கம் உள்ளவர் தனக்கு வரும் கஷ்டங்களில் முன்னேற்றத்துக்கான வாய்ப்பைப் பார்க்கிறார்.ஆனால் சோம்பல் உள்ளவரோ, தனக்கு வரும் நல்ல வாய்ப்பில்கூட முதலில் அதில் உள்ள கஷ்டத்தைப் பார்த்தே கவலைப்படுவார்.
நமக்கு வரும் சிக்கல்களில் சிறப்படையும் வாய்ப்பு இருக்கிறது.
சாதாரண மனிதர்கள் சாதா ரணங்களுக்கே சரிந்து விடுவார்கள். விவேகமும் விடாமுயற்சியும் உள்ளோருக்கு முதலில் சாதா ரணங்கள். பின் சாதனைகள் என்பதே விதி.
கல்லூரிப் பருவத்தில் சில மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவாக உள்ளது. படிப்பில் கவனம் செலுத்தாமல் காதல் என்ற பெயரில் கஷ்டப்படுகின்றனர். கஷ்டப்படுத்தவும் செய்கின்றனர்.
கவிஞர் இக்பால் “கவலைப்படாதே பிறை நிலவே! உன்னுள்தான் பூரணச்சந்திரன் புதையுண்டு கிடக்கிறான்” என்றார்.
அவநம்பிக்கையைத் துரத்தி, நம்பிக்கையை மனதில் பதியம் போடுங்கள். மாவீரன் நெப்போலியனிடம் உன் படையில் எத்தனை பேர் எனக் கேட்டார்களாம். “ என்னைச் சேர்க்காமல் 50 ஆயிரம் பேர். என்னையும் சேர்த்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்” எனப் பதில் சொன்னாராம். அத்தகைய தன்னம்பிக்கை மனத்தைக் கடன் வாங்குங்கள்.