Last Updated : 28 Apr, 2015 11:02 AM

 

Published : 28 Apr 2015 11:02 AM
Last Updated : 28 Apr 2015 11:02 AM

வெட்டிவேரு வாசம் 32- வெள்ளைச் சட்டைக்கான விலை!

வங்கி வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்திருந் தது. சாயம் வெளிறிய இரண்டு சட்டைகளே என்னிடம் இருந்தன. இருக்கும் சட்டையையே வெந்நீர் ஜோடுதலை வைத்துத் தேய்த்து அணிந்துகொண்டு தெருவில் இறங்கினேன். எதிரில் பள்ளித் தோழன் மணி வந்தான்.

‘‘எங்க மாப்ள கிளம்பிட்டே?''

‘‘பேங்க் இன்டர்வியூடா... எனக்கு இந்த வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கடா...''

என்னை ஏற இறங்கப் பார்த்தான். ‘‘கொஞ்சம் இரு...'' என்றான். சைக்கிளை மிதித்துச் சென்றவன் ஐந்தே நிமிடத்தில் இஸ்திரி போடப்பட்ட ஒரு வெள்ளைச் சட்டையோடு திரும்பி வந்தான்.

‘‘இதைப் போட்டுட்டுப் போ...''

காலத்தினால் செய்த உதவி! அணிந்து சென்றேன். அடுத்த பத்தாவது நாள் வேலையில் சேரச் சொல்லிவிட்டார்கள். வானில் வானவில் முளைத்தது. தார்ச் சாலைகளில் கோடிப் பூக்கள் பூத்தன.

‘‘நான் மட்டும் அந்தச் சட்டையை உனக்குக் கொடுக்காமப் போயிருந் தேன்னா..?'' என்று மணி கேட்டான்.

‘‘ஆமாண்டா... தேங்க்ஸ்டா...'' என்று அவனைக் கட்டியணைத்தேன்.

மூன்று ஆண்டுகள் வெளியூரில் வேலை. சென்னைக்கு மாற்றலாகி வந் தேன். அலுவகத்துக்கு மணி தேடி வந்தான்.

‘‘அவசரமா ஒரு ஆயிரம் ரூவா வேணும் மச்சி... அம்மா திடீர்னு மூச்சு பேச்சில்லாம மயங்கி விழுந்துட்டாங்க...'' என்றான்.

அப்போது கையில் அவ்வளவு இல்லை. எப்படி சமாளிப்பது என்று தயங்கிய வேளையில், ‘‘நான் மட்டும் அந்தச் சட்டையைக் கொடுக்காம இருந் திருந்தா உனக்கு இந்த வேலை கெடைச் சிருக்குன்றே..?'' என்று கேட்டான்.

அலுவலக நண்பனிடம் பணத்தை வாங்கிக் கொடுத்தேன்...

அதுதான் ஆரம்பம். அப்புறம் ஒருநாள் தம்பி விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்து, அறுவை சிகிச்சைக்கு என்று கேட்டு, இரண்டாயிரம் வாங்கிச் சென்றான். அப்பாவுக்கு கேட்ராக்ட் ஆப ரேஷன், தங்கைக்கு காலேஜ் ஃபீஸ் என்று விதவிதமான பாசக் காரணங் களோடு அவ்வப்போது வருவான். கண்ணில் கண்ணீர் ததும்பும். சட்டை பற்றிய குறிப்பு தவறாமல் இடம்பெறும்.

ஒவ்வொரு முறையும் அவன் குடிப் பதற்காகப் பணம் கொடுத்துக் கொண்டி ருந்தேன் என்பது வேறொரு நண்பன் மூலமாகத் தெரியவந்தது. நொந்து போனேன்.

‘இன்னொரு முறை வரட்டும் அவன்...' என்று கறுவியபோது மணி புனேவில் செட்டில் ஆகிவிட்டான். அங்கேதான் அவனுக்குக் கல்யாணமும் நடந்தது. போக முடியவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து அலு வலக வேலையில் ஆழ்ந்திருந்தபோது என் தோள் தொடப்பட்டது. நிமிர்ந்தேன். மணி.

எலும்பும் தோலுமாக இருந்தான். கண்களில் குழிவு. சட்டை, பேன்ட் எல்லாம் நொந்து நூலாகத் தொங்கின. பொல பொலவென்று கண்ணீர்விட்டான்.

‘‘ஒங்கிட்ட அப்பப்ப பொய் சொல்லிக் காசு வாங்கிட்டுப் போய் தண்ணியடிச்ச துக்கு எல்லாம் சேர்த்துவெச்சி ஆண் டவன் சரியான தண்டனை கொடுத் துட்டான்டா. ராணி (அவன் மனைவி) மாடிப் படியில உருண்டு விழுந்து அபார்ஷன் ஆயிடிச்சு. டி அண்ட் சி பண் ணணுமாம். முப்பதாயிரம் வெச்சாத்தான் உயிரோட பாக்கமுடியும்னு டாக்டர் சொல்றார்டா... ‘இன்டர்வியூ போறதுக்கு சட்டை கொடுத்தேன்ல'ன்னு உன்னை பிளாக் மெய்ல் பண்ணதுக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும்...'' என்று கண்ணீர்விட்டான்.

‘‘காசை உங்கிட்ட கொடுக்க மாட்டேன். நானே வரேன்...'' என்ற நிபந்தனைக்கு தலையசைத்தான். பணத்தைத் திரட்டிக் கொண்டு, அவனோடு ஆஸ்பத்திரிக்குப் போனேன்.

ஆஸ்பத்திரியில் ஒரு குறிப்பிட்ட பெண்மணியிடம் கூட்டிச் சென்றான். ‘‘சிஸ்டர்... இவர்கிட்ட அமவுன்ட்டைச் சொல்லுங்க...'' என்று தழுதழுத்தான்.

‘‘இவர் மனைவி ட்ரீட்மென்ட்டுக்கு முப்பதாயிரம் கட்டணும்...'' என்றாள் அவள்.

பணத்தை நீட்டினேன். ‘‘ரசீது கொடுப்பீங்க இல்ல..?''

‘‘ரசீது போடறவங்க லஞ்ச்சுக்குப் போயிருக்காங்க..'' என்றாள் அவள்.

சமாதானப்படுத்திக் கொண்டேன். ‘‘எந்த வார்டுல அட்மிட் ஆயிருக்காங்க?''

‘‘ஐ.சி.யூ.ல. இப்ப அவங்களைப் பார்க்க முடியாது.''

மணி கைகளைப் பற்றிக்கொண்டான்.

‘‘எப்பேர்ப்பட்ட உதவி! இனிமே நான் பாத்துக்கறேன்... நீ ஆபீஸுக்குப் போ... ராணி வீட்டுக்கு வந்ததும் போன் பண்றேன்...'' என்றான். அதன் பின் மணியிடம் இருந்து போன் வரவில்லை. தேடிப் போனால், வீடு மாறியிருந்தான்.

ஏறக்குறைய 18 மாதங்கள் கழித்து ஒரு நாள் சாலையில் அவன் தம்பியைப் பார்த்தேன்.

‘‘மணி போய்ட்டான்பா... ஜாண்டீஸு... குடிக்கக் கூடாதுன்னு டாக்டருங்க சொன் னாங்க.. கேக்கல. குடிச்சான்... அண்ணியும், ரெண்டு வயசுப் பொண்ணும் இப்ப எங்களோடதான் இருக்காங்க...'' என்றான்.

‘‘அபார்ஷனுக்கு அப்புறம் பொறந்த குழந்தையா?''

‘‘யாருக்கு அபார்ஷன்? ஓ... ஒன்னை யும் ஏமாத்தினானா? ஆஸ்பத்திரியில ஒரு நர்ஸுகூட டீல் போட்டுக்கிட்டு, ஆறேழு பேர்கிட்ட சுருட்டிட்டான்...'' என்று முனகினான் மணியின் தம்பி.

இன்டர்வியூவுக்கான வெள்ளைச் சட்டைக்கு நான் கொடுத்த விலை மிக அதிகம்!

குடி ஒரு மனிதனை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழவைக்கும் என்பதற்கு மணி வாழ்ந்து அழிந்த ஓர் உதாரணம்! அவனை மனதில் வைத்துத் தான் ‘கோ’ திரைப்படத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு (கோட்டா ஸ்ரீனிவாசராவ்) தனது 13 வயதுப் பெண்ணை மது குடிக்கும் ஒருவன் (இமான் அண்ணாச்சி) திருமணம் செய்து கொடுக்க முடிவு செய் வதாகக் காட்சி அமைத்திருந்தோம்.

குடிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பார்வையாளர்களும் உணர்ந்திருந்ததால் அந்தக் காட்சி வெற்றிபெற்றது!

- நிறைந்தது

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

மீண்டும் சந்திப்போம்...

அனுபவ உள்ளீடுகளுடன் வெளிப்படும் அனைத்து படைப்புகளும் ரசிகர்களால் வரவேற்கப்படுகின்றன. அந்த அனுபவங்களின் ஏதோ ஒரு படிமத்தில் ரசிகர்களின் அனுபவங்களும் இயைந்து போகின்றன என்பதே இதற்குக் காரணம் என்று கருதுகிறோம்.

எங்களது வாழ்க்கை அனுபவங்களில் சில, நாங்கள் அமைத்த திரைக்கதைகளில் எப்படிப் பிரதிபலித்தன என்பதை ஓரளவு பகிர்ந்துகொண்டிருக்கிறோம். இத்தொடர் தொடர்பாக தங்களது கருத்துகளை எங்களிடம் பகிர்ந்துகொண்ட அத்தனை தோழர்களுக்கும், தோழியருக்கும் மனமார்ந்த நன்றி.

- சுபா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x