Published : 19 Apr 2015 01:55 PM
Last Updated : 19 Apr 2015 01:55 PM

காரிலும் பிரசவிக்கலாம்

மருத்துவமனைக்குப் போகும் வழியில் காரிலேயே உங்கள் குழந்தை பிரசவமாகிவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

முக்கலும் திணறல் ஒலியும் காற்றைத் துளைக்கின்றன. அரற்றல் ஒலி உயர்ந்து நிதானமாக இறங்கி மீண்டும் எழுகிறது. மூச்சிரைப்பு தொடர, அரற்றல் மறைகிறது. இப்போது ஒரு பெரும் ஓலம் கேட்கிறது.

ஒரு நிம்மதிப் பெருமூச்சு கேட்கிறது. நடக்காத ஒன்று நடந்ததைப் போன்ற உணர்வு பரவுகிறது.

பொறுமையற்று வாகனங்களிலேயே பிறந்து விடும் குழந்தைகளின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு சுவாரசியமான கதை இருக்கும். பெரிய கால அவகாசத்தில் சொல்லப்படும் அக்கதை வசீகரமாகத் தோன்றினாலும், மறுபடி அதைப் போன்ற அனுபவத்தைப் பெறுவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள்.

பயணம் செய்யும் காரில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது நிறைய சிக்கல்களைக் கொண்டது. காரின் தூய்மையற்ற சூழல் தாய்க்கும் சேய்க்கும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிரசவத்திற்குப் பிறகு நடக்க வேண்டிய அத்தியாவசிய காரியங்களை காரில் செய்ய முடியாது.

இருப்பினும் பயணத்தில் நடக்கும் சுகப்பிரசவக் கதையொன்றைக் கேட்கும்போது சந்தோஷம் வரவே செய்கிறது. பயணிக்கும் காரில் குழந்தை பெற்றவர்களின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்தவர் ஐஸ் ஹாக்கி விளையாட்டு வீரர் டேரன் ஹெல்ம். அவரது புகைப்படம் இணையத்தில் அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டது.

அதற்கடுத்த வாரம் உபேர் வாடகைக் காரில் ஒரு குழந்தை பிறந்ததைப் பற்றி ‘நியூ யார்க் போஸ்ட்’ ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அந்தக் குழந்தை அணிந்திருந்த தளர்வான ஆடையைப் பார்க்கும் சிடுமூஞ்சிகளுக்குக்கூடச் சிரிப்பு வந்துவிடும். உபேர் நிறுவனம், தமது காரில் பிறக்கும் புது சிசுக்களுக்குக் கொடுக்கும் ‘உபேர் ரைடர் ஒன்லி’ ஜாக்கெட் தான் அது. அத்துடன் அந்தக் காரை ஒட்டிய டிரைவருக்குச் சிறிய பரிசும், அவரது காரைக் கழுவிக்கொள்வதற்கு இலவச சேவையும் ஒரு முறை வழங்கப்படுகிறது.

உலகின் எல்லாப் பகுதிகளிலுமே, கர்ப்பவதிப் பெண்களின் மீது வாகன ஓட்டுநர்கள் கனிவுடனேயே இருக்கின்றனர். இந்தியாவிலும் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கர்ப்பவதிகளைச் சவாரி அழைத்துச் செல்லும்போது மிதமாகவே வண்டிகளை ஓட்டுகின்றனர். பிரசவத்துக்கு இலவசம் என்று சலுகை கொடுக்கும் ஓட்டுநர்களும் நம்மிடம் உண்டு. இந்த சேவை‘நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ என்ற பிரபல பாடலிலேயே இடம்பெற்றுள்ளது.

மேற்கு நாடுகளில் இதுபோன்ற அசாதாரணமான விஷயங்கள் கொண்டாடப் படுகின்றன. மனைவி காரில் பிரசவிப்பதைக் கணவர் வீடியோ எடுப்பதை யூட்யூப்பில் பார்க்க முடியும்.

அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளாக ஆகும் போது நம்மூரில் நடக்கும் சம்பவங்கள் பெரிதாகப் பதிவாவதில்லை. ஏனெனில் இந்த விஷயங்கள் இங்கே வழக்கமானவை. கிராமங்களில் மிகவும் சகஜமாக இந்தப் பரிமாற்றங்கள் உள்ளன. அத்துடன் இதுபோன்ற அசாதாரணமான பிரசவங்கள் பற்றிப் பெற்றோர்கள் அதிகம் பேச விரும்புவதில்லை.

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x