மாணவர்களுக்கு உதவும் புத்தக வங்கிகள்

மாணவர்களுக்கு உதவும் புத்தக வங்கிகள்
Updated on
1 min read

உலக புத்தக தினம்: ஏப்ரல் 23

கிளை நூலகம் பொது நூலகம், மாவட்டத் தலைமை நூலகம் எனப் பல நூலகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த நூலகங்கள் எல்லாம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற நூலகங்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் நூலகங்கள் அந்தந்த மாணவர்கள் பயன்பெறும் வகையிலேயே நடத்தப்படுகின்றன. இதேபோல மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் புத்தக வங்கிகளும் முக்கியப் பங்கு வகித்துவருகின்றன.

சென்னையில்தான்

இந்தப் புத்தக வங்கிகள் தமிழகத்தில் சென்னையில்தான் தொடங்கின. இப்போது சென்னையில் பல்வேறு இடங்களில் புத்தக வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தப் புத்தக வங்கிகளில் அதிக விலையுள்ள புத்தகங்களைக்கூடக் குறைந்த வாடகை செலுத்திப் பெறலாம். இவற்றைப் பருவத் தேர்வு முடியும் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். சுமார் ரூ.4 ஆயிரம் வரை விலையுள்ள புத்தகங்களைக்கூட ரூ.100-க்கும் குறைவான வாடகை செலுத்தி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தப் புத்தக வங்கிகள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களுக்கு உதவும்படியே செயல்பட்டு வருகின்றன. பல கல்லூரிகளில் செயல்படும் நூலகங்களில் புதிய புத்தகங்களை உடனுக்குடன் வாங்கி வைக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் புத்தகங்கள் பற்றாக்குறையாக இருக்கும்.

ஆனால், மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளப் புத்தக வங்கிகள் பெரும் உதவியாக இருந்துவருகின்றன. சில புத்தக வங்கிகள் இலவசமாக மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கிச் சேவையும் செய்கின்றன. சில வங்கிகள் குறைந்த வாடகைக்குப் புத்தகங்களை மாணவர்களுக்கு அளிக்கின்றன.

வீட்டுக்கே வரும்

ஒரு புத்தக வங்கியில் புத்தகம் இருக்கிறதா இல்லையா என்பதை இணையதளம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். அவற்றை ஆர்டர் செய்து பெறவும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தக வங்கிகளின் இணையதளத்தில் சென்று இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். சில வங்கிகள் புத்தகங்களை நேரிடையாக வீட்டுக்கே சென்று கொடுப்பதும் உண்டு.

பொறியியல் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்குச் சென்னையில் செயல்பட்டுவரும் புத்தக வங்கிகள் பெரிதும் உதவிவருகின்றன. பல்வேறு பேராசிரியர்கள், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் பாடங்களுக்கு எழுதிய புத்தகங்களும் இங்கே கிடைக்கின்றன.

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களை ஒட்டிய நகரத்திலும் சேவை மனப்பான்மையுடன் புத்தக வங்கிகள் உருவானால் கிராமப்புற மாணவர் சமுதாயம் பெரிதும் பயன் அடையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in