Published : 21 Apr 2015 12:38 PM
Last Updated : 21 Apr 2015 12:38 PM

ஆங்கிலம் அறிவோமே- 54: மரக்கட்டை முகமா உங்களுக்கு?

ஒரு நண்பர் Sleep, asleep இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று விழிப்புணர்வுடன் கேட்டிருக்கிறார்.

Wake, awake இரண்டுக்கும் உள்ள அதே வித்தியாசம்தான் என்று சொன்னால் பற்களை நறநறத்து எனாமலை சேதப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

Side, aside என்பதற்கு உள்ள வித்தியாசத்தையும் let us not brush aside. சரியா?

முதலில் sleep என்ற வார்த்தையைப் பார்ப்போம்.

I will sleep later.

I cannot sleep because of the noisy environment.

இந்த வாக்கியங்களில் sleep என்பதன் அர்த்தம் தூங்குவது என்பது நமக்குத் தெரியும்.

அதாவது உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு நிலை.

Sleep என்பதை noun ஆகவும் பயன்படுத்தலாம், verb ஆகவும் பயன்படுத்தலாம்.

Six hours sleep is necessary என்பதில் sleep noun ஆகவும், please sleep here என்பதில் verb ஆகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்போது asleepக்கு வருவோம். He will not attend to your call, as he is asleep.

பயன்பாட்டில் உள்ள வித்தியாசம் புரிகிறதா? Asleep என்பது adjective. புரியவில்லையென்றால் மற்றொரு உதாரணத்தைப் படியுங்கள்.

Wake, awake இரண்டுக்கும் வருவோம்.

Wake என்பது verb. Wake me up by 5.00 A.M. Don’t wake me. I want to have a sound sleep.

Awake என்பது தொடர்ந்து adjective ஆகப் பயன்படுத்தப்படுகிறது.

When you came here, I was awake.

Wake, awake இரண்டுமே தூக்கத்திலிருந்து எழுவது என்ற ஒரே அர்த்தத்தை அளிப்பதுதான். I usually wake at 5.00 A.M.

சில சமயம் கொஞ்சம் உருவகம் போலவும் wake பயன்படுத்தப்பபடுகிறது. Many rules are implemented in the wake of elections என்பதில் கடைசி வார்த்தைகள் ‘தேர்தலின் விளைவாக’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

WOOD

Wood என்றால் மரக்கட்டை என்று அர்த்தம். அதனால்தான் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத முகத்தை wooden face என்கிறோம்.

Robert Frost என்ற பிரபலக் கவிஞரின் ஒரு பாடலின் சில வரிகள் இவை.

The woods are lovely, dark and deep,

But I have promises to keep.

And miles to go before I sleep, and

Miles to go before I sleep.

இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ‘இந்த உலகில் நான் முடிக்க வேண்டிய பணிகள் மிக அதிகம் உள்ளன’ என்பதுதான். இதில் woods என்ற வார்த்தை காடு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மரங்கள் அடர்ந்த காடு!

யாரையாவது dead wood என்று குறி ப்பிட்டால் அவரால் இனி எந்தப் பயனும் இல்லை என்று பொருள். நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் தனக்குக் கீழ் வேலை செய்யும் சிலரை dead wood என்றுகூடத் தங்கள் மதிப்பீடுகளில் குறிப்பிடுவதுண்டு.

சிலரைப் பார்த்திருப்பீர்கள். எதையாவது சொல்லிவிட்டு touch wood என்பார்கள். அதோடு ஏதாவது மரத்தைத் (அது மர நாற்காலியாகவும் இருக்கலாம்) தொடுவார்கள். முகத்தில் பரவசமும், சங்கடமும் இருக்கும். அதென்ன touch wood?

ஏதோ ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்கிறீர்கள். அதில் உங்களுக்குப் பெருமை வேறு. அதைச் சொன்னவுடன் திருஷ்டி பட்டுவிடுமோ என்று சின்னதாகக் கவலை ஏற்படுகிறது. அந்தப் பெருமையான விஷயம் தொடர்ந்து நடக்க வேண்டுமே என்ற ஆதங்கம் உண்டாகிறது. அப்போது touch wood என்று நீங்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு அடிப்படை இதுவாக இருக்கலாம். பண்டைய காலத்தில் மரங்களில் நல்ல ஆவிகள் வசிக்கும் என்று நம்பினார்கள். எனவே மரங்களைத் தொட்டு ஆசிகளைக் கேட்கும் வழக்கம் இருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த touch wood பழக்கம். அதற்காக மர நாற்காலிகளிலெல்லாம் ஆவிகள் வசிக்குமா என்று கேட்கக் கூடாது. “என் மகன் நான் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்” என்று கூறினால் உடனே தொடுவதற்கு மரம் அருகில் இருக்க வேண்டுமே! மரத்துக்குப் பதிலாக மர நாற்காலி (அதற்காக wooden face உள்ள ஒருவரின் முகத்தைத் தொடக் கூடாது).

Not out of the woods என்றால் இன்னும் ஆபத்திலிருந்து அல்லது சிக்கலிலிருந்து வெளியேறவில்லை என்று பொருள். The patient is not out of the woods என்றால் அவர் இன்னமும் ICU-வில் இருக்க வாய்ப்பு அதிகம். The country’s economy is not out of the woods என்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் திணறிக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தம்.

INDEMNITY - GUARANTEE

Indemnity, Guarantee இரண்டுமே உத்தரவாதங்கள்தான். ஆனால் indemnity என்பது நீங்கள் உங்களுக்காகக் கொடுக்கும் உத்தரவாதம். எடுத்துக்காட்டாக வங்கி அளித்த Demand Draft-ஐ (வரைவோலையை) நீங்கள் தொலைத்து விட்டீர்கள். வங்கியிடம் தொலைந்ததற்குப் பதிலாக வேறொரு D.D. கொடுக்கச் சொல்கிறீர்கள். அப்போது நீங்கள் indemnity கொடுக்க வேண்டுமென்று வங்கி கேட்க வாய்ப்பு உண்டு. அதாவது தொலைந்த வங்கி வரைவோலையை வேறு யாராவது தில்லுமுல்லு செய்து தங்கள் கணக்கில் போட்டு விட்டிருந்தால் அதை நீங்கள்தான் வங்கிக்கு ஈடு செய்ய வேண்டும்.

Guarantee என்பது இன்னொருவருக்கு நீங்கள் அளிக்கும் உத்தரவாதம். உங்கள் நண்பரை உத்தமமானவர் என்று கருதி அவருக்குக் கடன் கொடுத்தவருக்கு நீங்கள் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கலாம். இது Guarantee (அவர் உத்தம வில்லனாக மாறி escape ஆகிவிட்டா ல், அவர் வாங்கிய கடனை நீங்கள் வங்கிக்கு அழ வேண்டியிருக்கும்).

ஆக indemnity என்பது நீங்கள் அடையும் பலனுக்கு நீங்கள் தரும் உத்தரவாதம். Guarantee என்பது யாரோ அடையும் பலனுக்கு நீங்கள் தரும் உத்தரவாதம்.

COMPLACENCY CONTENTMENT - COMPLAISANT

Complacency என்றால் என்னவென்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். மற்றொரு வாசகர் contentment என்றால் என்னவென்று கேட்டிருக்கிறார். இரண்டுமே தொடர்புள்ள வார்த்தைகள். எனவே இரண்டைப் பற்றியுமே இங்குக் குறிப்பிடலாம்.

Complacency என்பது ஒரு விதத்தில் திருப்தியைக் குறிக்கிறது. Contentment என்பதும் ‘இதற்குமேல் அவசியமல்ல’ எனும் அர்த்தத்தை அளிப்பதுதான். ஆக இரண்டுமே ‘போதும் என்ற மனநிலை’யைக் குறிக்கின்றன.

ஆனால் complacency என்பது கொஞ்சம் எதிர்மறையான அர்த்தத்திலும், contentment என்பது ஒருவித ஆக்கபூர்வமான அர்த்தத்திலும் கையாளப்படுகின்றன.

‘Your marks are better. But there are no grounds for complacency’ என்றால், வாங்கிய மதிப்பெண்கள் பரவாயில்லைதான். ஆனால் இதுவே போதும் என்று இருந்துவிடாதே (‘அதாவது, உன் முயற்சிகளை நிறுத்திக் கொள்ளாதே’) என்று அர்த்தம். Self-approval, smugness போன்றவற்றை complacencyக்குச் சமமான வார்த்தைகளாகக் குறிப்பிடலாம்.

Contentment என்பது ‘எனக்கு இது போதும். பேராசை கிடையாது’ என்ற அர்த்தத்தைத் தரக்கூடியது. He leads a life of contentment.

இன்னொரு வார்த்தை இருக்கிறது complaisant. இது complecent (complacency-யின் மறுவடிவம்) என்பதற்கு நேர் எதிர். அதாவது “பிறரின் விருப்பங்களை நிறைவேற்ற மிகவும் ஆர்வமாக இருக்கும் நிலை”.

சென்ற பகுதியில் கேட்கப்பட்ட விடைகளுக்கான antigrams இதோ.

1) VIOLENCE

2) LEGISLATION

3) ASTRONOMERS

4) UNTIED

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x