பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு உடனடி வேலைவாய்ப்பு

பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு உடனடி வேலைவாய்ப்பு
Updated on
1 min read

உலகிலேயே அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது இந்தியா. உலகின் மொத்தப் பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதம் ஆகும். பால்வளத்துறையானது ஆண்டுக்கு 20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுவருகிறது.

இதனால், பால்வளத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறுவனமான ‘ஆவின்’, பால்வளத் தொழில்நுட்பப் பணிகளுக்கு, தமிழகத்தில் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு (Dairy Technology) இல்லாத நிலையில், கர்நாடகம், அரியானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பால்வளத் தொழில்நுட்பம் படித்தவர்களைப் பணியமர்த்திவரும் நிலை இன்றுவரை தொடர்கிறது.

பால்வளத் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு இல்லை என்ற குறையைப் போக்கும் வகையிலும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகம் கடந்த 2014-ம் பி.டெக். (பால்வளத் தொழில்நுட்பம்) படிப்பை அறிமுகப்படுத்தியது.

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகேயுள்ள கொடுவல்லியில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் (College of Food and Dairy Technology) இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. உடனடி வேலைவாய்ப்பு தரக்கூடிய பால்வளத் தொழில்நுட்பப் படிப்பு குறித்த தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.திலகர்.

“பி.டெக். டெய்ரி டெக்னாலஜி படிப்பில் 20 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 - வில் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் தகுதி, இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

நான்கு ஆண்டு காலம் கொண்ட இந்த பி.டெக். படிப்பில், பால் பதப்படுத்துதல், பல்வேறு விதமான பால்பொருள்கள் தயாரிப்பு, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், சாதனங்கள், தரக்கட்டுப்பாடு போன்றவை தொடர்பான அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கிறோம். படிப்பு காலத்தில் நேரடி களப்பயிற்சியும் உண்டு.

பால்வளத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவை தற்போது அதிகரித்து வருவதால், இப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நாங்களே ஏற்பாடு செய்வோம். ஆவின் நிறுவனத்திலும் வேலைவாய்ப்புள்ளது. தனியார் நிறுவனங்களில் வாய்ப்புகள் அதிகம். இன்னும் 2 ஆண்டுகளில் எம்.டெக். டெய்ரி டெக்னாலஜி படிப்பைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

பி.டெக். டெய்ரி டெக்னாலஜி உள்ளிட்ட இளங்கலை கால்நடை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in