Last Updated : 24 Apr, 2015 12:55 PM

 

Published : 24 Apr 2015 12:55 PM
Last Updated : 24 Apr 2015 12:55 PM

கோணங்கள் 26: 99 ஆண்டுகள் உரிமை சரியா?

முன்பெல்லாம் வாரத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அது தற்போது கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகி, எட்டு முதல் பத்துப் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. இப்படிப் படங்கள் வருவதால் பல பிரச்சினைகள். திரையரங்குகளில் ஏற்கனவே ஓடுகிற படங்கள் ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களின் தமிழ் மொழிமாற்றுப் படங்கள் என ஒரு பட்டியல் தனியே இருக்கிறது. இதில் எத்தனை படங்களைத்தான் மக்கள் பார்ப்பார்கள்?

வாரா வாரம் பத்திரிகையாளர்களுக்காகப் போடப்படும் காட்சிகள்கூடச் சில சமயம் காலை, பிற்பகல், மாலைக் காட்சி என மூன்று காட்சிகள் கூட வரிசையாகத் திரையிடப்படுகின்றன. ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் அதைப் பார்த்து மாங்கு மாங்கென்று விமர்சனம் எழுதிக் குவிக்கிறார்கள். இன்றைய இணைய உலகில் யார் முதல் விமர்சனம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஹிட்ஸ் என்ற நிலையில் அவசர அவசரமாய் எழுதுவதும், பல சமயங்களில் எழுதாமல் போவதுமாய்ப் போய்க்கொண்டிருக்க, அதைப் படிக்கும் மனநிலையில்கூட ரசிகன் இருக்கிறானா இல்லையா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது.

இன்றைய சேனல் உலகமும் அப்படித்தான் இருக்கிறது. நான்கைந்து சேனல்கள் இருந்த காலத்தில் அதில் காட்டப்படும் நிகழ்ச்சிகளுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போது கிடையாது. ஒரு பேச்சரங்கம் வெற்றிபெற்றால் அதே போல கோட் சூட் போட்டுக்கொண்டு எல்லா சேனல்களிலும் ஒரு நிகழ்ச்சி வர ஆரம்பித்துவிடுகிறது. சேனல் மாற்றுகிற இடைவெளியில் கிடைக்கும்

டி.ஆர்.பி.யையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிற நிலையில்தான் பல சேனல்களும் இருக்கின்றன.

ஒரு படத்தை இரண்டு மூன்று கோடி ரூபாய் கொடுத்து வாங்கினால் அதன் ‘ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட்’ என்ன என்பதைக் கணக்கிட்டால் பல படங்களுக்குக் கிடைக்கவே கிடைப்பதில்லை என்கிறார்கள். ஏன்? சில வருடங்களாய்ப் படங்களைப் போட்டிபோட்டு வாங்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம், பல பெரிய மற்றும் சிறிய படங்களை வாங்கியது. அதில் பெரிய வெற்றிபெற்ற படத்தை அவர்களது டிவியில் குறிப்பிட்ட விடுமுறை நாளில் சிறப்புத் திரைப்படமாய் ஒளிபரப்பியது. அதே நாளில் மற்ற சேனல்கள் போட்டிக்கு ஒளிபரப்பிய படங்களைவிட இது நல்ல படமும்கூட. ஆனால் கிடைத்த டி.ஆர்.பி. மிகக் குறைவு. அப்படத்தை ஒளிபரப்பியதன் மூலமாய்க் கிடைத்த விளம்பர வருமானமும் குறைவுதான்.

ஒரே ஒளிபரப்பில் போட்ட காசை எடுக்கவே முடியாது. வெற்றிப் படமாய் இருந்து, பண்டிகை நாட்களில் ஒளிபரப்பு செய்தால் தலை தப்பிக்க வாய்ப்பிருப்பதாகப் பல சேனல் தலைமை அதிகாரிகள் என்னைக் கூப்பிட்டுத் திட்டிக்கொண்டே விவரத்தைச் சொன்னார்கள். குறிப்பாக அந்தப் படத்தின் திரையரங்க வெற்றியின் அளவு, சேனலின் மார்க்கெட் மதிப்பு எல்லாவற்றையும் கணக்கிட்டுத்தான் ஒவ்வொரு பத்து நொடி விளம்பரங்களுக்கும் விலை நிர்ணயம் செய்கிறார்கள். அப்படி நிர்ணயிக்கப்படும் விலையில் அப்படத்தை மார்க்கெட் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது அப்படத்துக்குப் போட்ட முதலில் பத்து சதவிகிதத்தையாவது எடுக்குமா என்றால் இல்லை என்றே சொல்கிறார்கள் சேனல் தலைகள்.

இப்படிப்பட்ட நிலையில் மறு ஒளிபரப்பில் எப்படி அதே நல்ல விலைக்கு மார்க்கெட்டிங் செய்து விளம்பரம் வாங்க முடியும்? “பல சமயங்களில் பல படங்களின் முதலீட்டை நாங்க எடுப்பதேயில்லை. இந்த லட்சணத்தில் விளம்பர நேரக் கட்டுப்பாடு வேறு” என்றும் புலம்புகிறார்கள்.

ஒரே சேனலை வைத்துக்கொண்டு போராடும் சேனல்களுக்கு நடுவில் நான்கைந்து சேனல் வைத்துக்கொண்டிருக்கும் சேனல்களுக்கு முதல் ஒளிபரப்பில் கணிசமான அளவில் விளம்பர வருமானம் பெற முடியாவிட்டாலும், தொடர்ந்து முதல் நிலை சேனல்களிலும், பின்பு மற்ற சேனல்களிலும் ஒளிபரப்பித் தங்களின் முதலிடத்தை நிலை நிறுத்திக்கொள்வது பெரிய சாதகம். இந்த வசதி ஒற்றை சேனல்களுக்குக் கிடையாது. அதனால் தன்னிடம் உள்ள ஹிட் படங்களைச் சிறப்பு தினங்கள் என்றில்லாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் அதே படத்தை ஒளிபரப்பி, சூப்பர் ஹிட் திரைப்படம் என்று விளம்பரப்படுத்தி போட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம்.

சேனல் வட்டாரங்கள் இப்படி ஆயிரம் காரணங்களைப் பிரச்சினைகளாகச் சொன்னாலும், ஒரு ஜி.ஈ.சி. சேனலுக்கு மிக முக்கியமான நிகழ்ச்சி சினிமாதான். சினிமா சாராத பல நிகழ்ச்சிகள் இன்று மக்களிடையே பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. சினிமாவுக்குக் கிடைப்பதைவிட அதிகமாகவே இந்நிகழ்ச்சிகளுக்கு டி.ஆர்.பி. கிடைக்கிறது என்றாலும் அதை மார்க்கெட் செய்து நிலைநிறுத்த சினிமாக் கலைஞர்களும், அவர்களது பிரபல்யமும் தேவையாய் இருக்கிறது. அதேநேரம் சினிமா பிரபலங்களுக்கும் இந்நிகழ்ச்சிகளின் மூலமாய் மைலேஜ் கிடைக்கவே செய்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

சினிமாவே இல்லாத ஒரு டிவி சேனல் என்ற குறிக்கோளோடு ஆரம்பிக்கப்பட்ட சேனல் ஒன்று இன்றைக்குப் பழைய தூர்தர்ஷன் சீரியல்கள், மற்றும் வெளிநாட்டு தமிழ் மொழியாக்கப் படங்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய நிலை. அப்படியிருக்க, சினிமா எனும் சாஃப்ட்வேர் இல்லாமல் ஒரு சேனல் வெற்றிகரமாய் வளைய வருவது இயலாத காரியம் என்றே சொல்ல வேண்டும்.

அப்படிப்பட்ட சினிமா எனும் சாஃப்ட்வேரை வாங்கும்போது பெர்பெச்சுவல் ரைட்ஸ் (perpetual rights) என்ற பெயரில் ஒட்டுமொத்தமாய் 99 வருடங்களுக்கு வாங்கிக்கொண்டு, எதிர்காலத்தில் வரும் எல்லா விதமான தொழில்நுட்பம் அனைத்துக்குமான உரிமை என எழுதி வாங்கிக்கொண்டு, அதை சக்கையாய்ப் பிழிந்தெடுத்துக்கொள்ள, உரிமை கொடுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது சினிமா உலகம். திரையுலகுக்கும் தொலைக்காட்சிகளுக்குமான உறவில் நன்மை விளைய முதல் சீர்த்திருத்தம் தொடங்க வேண்டியது இதிலிருந்துதான்.

தொடர்புக்கு sankara4@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x