Published : 03 Apr 2015 12:06 PM
Last Updated : 03 Apr 2015 12:06 PM

மார்லன் பிராண்டோ- ஹாலிவுட்டின் கலகக்காரன்!

ஏப்ரல் 3- மார்லன் பிராண்டோ 91வது பிறந்த தினம்

அரசியலும் சினிமாவும் பிரிக்க முடியாத சக்திகள். புரட்சிகரமான வேடங்கள் ஏற்று நடித்த கதாநாயகர்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். ஆனால் புரட்சிகர கதாபாத்திரமாக மாற வேண்டிய வாய்ப்பு நிஜ வாழ்வில் எதிர்ப்படும்போது, ‘நாயக நடிகன்’என்ற வட்டத்துக்குள் பதுங்கிக்கொண்டு ‘தேங்கிப் போனவர்க’ளே அதிகம்.

மாறாகத் திரையில் ஏற்று நடித்த முற்போக்குக் கதாபாத்திரமாக மாறும் சூழ்நிலை பொதுவாழ்வில் அமைந்தபோது அதைத் தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதிப் போராட்டக் களங்களில் முன்நின்றவர். சினிமா தனக்களித்த புகழ் வாழ்க்கையைச் சமூக நீதிக்கு ஆதரவாகவும் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் பயன்படுத்தி கடைசிவரை வாழ்ந்த நடிகர் ஒருவர் இருந்தார். அவர்தான் மார்லன் பிராண்டோ. அமெரிக்க சினிமாவின் ‘காட்ஃபாதர்’.

கறுப்பின மக்கள், செவ்விந்தியர்கள் முதலானோரின் உரிமைகளுக்காக நிஜவாழ்வில் போராடிய நாயகன். அமெரிக்கவில் வல்லதிக்கத்தை தொடர்ந்து எதிர்ப்பவராகவும் வாழ்ந்தவர். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளைக் காற்றில் பறக்கவிட்டு சுதந்திரமான காற்றைப் போல் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றார் பிராண்டோ.

தனது செயல்பாடுகள் எதுவாயினும் அவற்றை மறைத்து, தன்னைப் பற்றிய போலியான மதிப்பீடுகளை உருவாக்க ஒருபோதும் அவர் விரும்பவில்லை. தன்னைப் பற்றி அலை அலையாக எழுந்த அனைத்து எதிர்மறை விமர்சனங்களையும் தனது அற்புதமான நடிப்புத் திறமையால் கடந்து சென்றார். நடிப்புக்காக இருமுறை ஆஸ்கர் விருதுபெற்றவர். “நடிப்பை நான் வெறுக்கிறேன்” எனத் தனது இறுதிக் காலத்தில் கூறிய இந்த அபூர்வக் கலைஞன், தனது கலை வாழ்க்கைக்கான விதையை நாடக ஆசிரியரான தனது தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

பிரிவும் துயரும்

மார்லன் பிராண்டோ பிறந்தது அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தில் உள்ள ஓமாஹா நகரில். பிராண்டோவின் அப்பாவுடைய பெயரும் மார்லன் பிராண்டோதான். பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் உயர்பதவி வகித்தவர்.

தனது பெயரையே தன் மகனுக்கும் வைத்தார். தொழிலின் நிமித்தம் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்ததால், தன் குழந்தைகளுக்காக அவர் நேரம் செலவழிக்கவில்லை. எப்போதாவது வீட்டுக்கு வரும் அவர் பிள்ளைகளிடம் ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்துகொண்டார். பிஞ்சுகளின் கண் முன்னே மனைவியை பெல்ட்டால் அடிப்பார். அடித்த சிறிது நேரத்தில் மனைவியை அரவணைத்துக்கொண்டு அழத் தொடங்கிவிடுவார்.

பிராண்டோவின் அம்மா டோரத்தி ஜூலியா ஒரு நாடக ஆசிரியை. சிறந்த நாடக நடிகை. ஓமாஹா நகரின் புகழ்பெற்ற நாடகக் குழுவான ‘ஒமாஹா கம்யூனிட்டி பிளே ‘ஹவுசின்’ இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். இதனால் பிராண்டோவின் வீட்டுக்கு எந்த நேரமும் நாடகாசிரியர்களும், நடிகர்களும் வருவதும் செல்வதுமாக இருப்பார்கள்.

நாடக ஒத்திகைகளுக்கும் பஞ்சமிருக்காது. இதனால் ஐந்து வயது முதலே அரங்க நடிப்பின் வாசம் பிராண்டோவின் ரத்தத்தில் கலந்தது. பிராண்டோவின் அம்மா ஒரு குடிநோயாளியாக இருந்தார். பின்னாளில் தனது சுயசரிதையில், “அம்மாவைப் பற்றி நினைத்தால் அவர்மீது வீசும் ஜின் வாசனைதான் முதலில் ஞாபகத்துக்கு வரும்” என்று மார்லன் பிராண்டோ எழுதியிருக்கிறார்.

கலையை ரசித்து வளர்ந்த வீட்டில் தனது 11-வது வயதில் கண்ணீரை ருசித்தார் பிராண்டோ. தாயும், தந்தையும் மணவிலக்கு பெற்றுப் பி‌ரிந்தார்கள். அம்மா, பாட்டி இரண்டு தமக்கையுடன் இளமைப் பருவத்தைக் கழித்த பிராண்டோவுக்குப் பெற்றோரின் பிரிவு மனதில் ஆழமான வடுவைப் பதித்துவிட்டது.

விழித்துக்கொண்ட நடிப்பு

அறுந்த வால் என்று பள்ளிக் காலத்தில் பெயரெடுத்தார் பிராண்டோ. தனது பதினெட்டாவது வயதில் பள்ளி நாடகத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவம் அவரது நடிப்புத் திறனைக் கிளர்ந்தெழச் செய்துவிட்டது. நடிப்பைப் பற்றிப் பேசத் தொடங்கிய மகனைச் சமூகத்துக்கான நடிகனாகப் பார்க்க விரும்பினார் அவருடைய அம்மா.

இதனால் பிராண்டோவுக்கு முன்பே நடிப்புப் பள்ளியில் பயில நியூயார்க் நகருக்குச் சென்றுவிட்ட தன் மகளைத் தொடர்ந்து மகனையும் அங்கே அழைத்துச் சென்றார். அது 1942-ம் ஆண்டு. நியூயார்க்கில், ‘சமூக ஆய்வுக்கான புதிய நடிப்புப் பள்ளி’ என்ற நாடகப் பட்டறையில், மகன் பிராண்டோவைச் சேர்த்துவிட்ட பின் ஊர் திரும்பினார். அங்கே ஸ்டெல்லா ஆட்லெர் என்ற நடிப்பு ஆசிரியையின் மாணவராக இருந்தார் பிராண்டோ.

அப்போது ரஷ்ய நாடக ஆசான் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கி அளித்த ‘மெத்தட் ஆக்டிங்’ நடிப்பு முறை அமெரிக்காவையும் எட்டியிருந்தது. அமெரிக்காவின் ‘ஆக்டர்ஸ் ஸ்டூடியோ’ அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்ட முன்னணி நடிகர்கள் பலர், இதுவே நவீன நடிப்பு உத்தி, இதுதான் சரியான வழி எனக் கருதிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் உணர்வுகள், சூழ்நிலைகள் இவற்றில் உண்மையை வலியுறுத்தவேண்டும் என்ற கருத்தை பிராண்டோ கொண்டிருந்ததால் மெத்தட் ஆக்டிங் முறையையும் அவர் கடந்து நின்றார். தன்னை மெத்தட் ஆக்டர் என்று சொல்வதை அவர் மறுத்தார். ஆனால் பிராண்டோவே அமெரிக்க மெத்தட் ஆக்டிங் முறையின் தலைசிறந்த முன்மாதிரி என்று இன்றும் விமர்சகர்களால் வருணிக்கப்படுகிறார்.

தனது நடிப்பு ஆசிரியை ஆட்லெரைப் பற்றி பிராண்டோ குறிப்பிடும்போது “நடிக்கும்போது நிஜமாக இருக்க வேண்டும் என்றும், நான் சொந்தமாக உணராத உணர்வுகளை நடித்தெடுக்க முயல வேண்டாம் என்றும் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்” என்று யதார்த்த நடிப்பின் வரையறையைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

நியூயார்க்கில் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான செல்வாக்கைச் செலுத்திக்கொண்டிருந்த இடதுசாரிச் சூழ்நிலையில்தான் பிராண்டோ இத்தகைய யதார்த்த நடிப்பைக் கற்றுப் புரட்சிகர நாடகங்களில் பிரகாசிக்கத் தொடங்கினார். இதுதான் அவரைச் சமூக நீதிக்கான அரசியலின் போராட்டக் களங்களில் முன்னே நிற்க வைத்தது.

வரைபட எல்லைகளைக் கடந்து..

ஸ்கேண்டிநேவியாவில் இருந்து குடியேறியவர்களைப் பற்றிய ‘ஐ ரெமம்பர் மமா’ (I Remember Mama) என்ற நாடகத்தின் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்து அந்தக் கதாபாத்திரத்தின் பெயராலேயே ‘நெல்ஸ்’என்று நாடக வட்டாரத்தில் புகழ்பெற்றார் பிராண்டோ. அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தவர், 40களின் அமெரிக்க மெத்தட் ஆக்டரும் நாடக ஆசிரியருமான எலியா கசன்.

அவரது இயக்கத்தில் ‘தி மென்’ என்ற படத்தில் அறிமுகமான பிராண்டோ, அதன் பிறகு அவரது இயக்கத்தில் ‘எ ஸ்ட்‌‌ரீட் கார் நேம்டு டிஸையர்’, ‘ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார். 1954-ல் வெளியான ‘ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட்’படத்தில் பிராண்டோ வெளிப்படுத்தியிருந்த யதார்த்த நடிப்பு முறை உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்களை உருவாக்கியது நடிப்புக்கான முதல் ஆஸ்கர் விருதையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.

பல்வேறு நாடுகளின் முன்னணி நடிகர்களையும் அவரது நடிப்பு முறை ஆகர்ஷித்தது. பிராண்டோவின் நடிப்புடன் நடிகர் திலகம் சிவாஜியை ஒப்பிட்ட அறிஞர் அண்ணா “தமிழகத்தின் மார்லன் பிராண்டோ சிவாஜி” என்று பாராட்டினார். சிவாஜி, அமெரிக்கா சென்று ஹாலிவுட்டில் பிராண்டோவைச் சந்தித்தார். தமிழகத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் பிராண்டோவின் நடிப்பு குறித்துப் பாராட்டி எழுதினார்.

கலகக்காரர்

தன் திரைவாழ்வில் மாபெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பிராண்டோ 1972 -ல் வெளியான ‘காட்ஃபாதர்’படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து அந்தப் படத்தை உலகுக்கான நடிப்புப் பள்ளியாக விட்டுச் சென்றுவிட்டார். உடல் மொழி, உளவியல் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைந்து, கதாபாத்திரத்தின் ஆன்மாவைத் தேடிச் செல்லும், பிராண்டோவின் நடிப்புமுறை ஒரு தனிமனிதனின் அதிருப்தியிலும் கவலையிலிருந்தும் உருக்கொண்டது.

கடைசிநாட்கள்வரை ரசிகர்களை ஈர்க்கும் காந்த சக்தி கொண்டவராக இருந்த பிராண்டோ, நினைவில் கொள்ளப்படுவது ஒரு மாபெரும் நடிப்பு ஆளுமை என்பதால் மட்டுமல்ல; உலகமும் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள்மீது திணிக்கப்படும் இரண்டாம் தர வாழ்நிலையைத் தொடர்ந்து எதிர்த்து நின்ற மாபெரும் ‘கலகக்காரர்’ என்ற காரணத்தாலும்தான்.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x