Published : 15 Apr 2015 12:37 pm

Updated : 15 Apr 2015 12:37 pm

 

Published : 15 Apr 2015 12:37 PM
Last Updated : 15 Apr 2015 12:37 PM

சினிமா எடுத்துப் பார் 4 - எடிட்டிங் அனுபவங்கள்!

4

எவ்வளவு கடின உழைப்பை செலுத்தி படப்பிடிப்பை நடத்தினா லும், தேர்வுக்குத் தயாராகிற மாணவனைப் போல சென்சாருக்கு முதல் நாள் இரவுதான் அந்தப் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் நடக்கும்.

அப்போது வடசென்னையில் இருந்த மினர்வா தியேட்டரில்தான் சென்சார் பிரி வினர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். காலை 11 மணிக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டும் பணி தொடங்கும். மொத்தமுள்ள 16 ரீல்களில் இரண்டிரண்டு ரீல்களாக ஸ்டுடியோவில் இருந்து காரில் எடுத்துச் செல்வோம்.

அன்று எப்போதும்போல படத்தைத் திரையிடத் தொடங்கியாச்சு. அடுத்தடுத்த ரீல்கள் முறையாக குறித்த நேரத்துக்குள் முழுமை பெற்று ஸ்டுடியோவில் இருந்து காரில் போக வேண்டும். எதிர்பாராத விதமாக அந்த நேரம் ரயில்வே கேட்டில் டிராஃபிக் ஜாம். சென்சார் அதிகாரிகள் பார்க்க வேண்டிய கடைசி இரண்டு ரீல்கள் காரில் இருந்தன. எப்படி முயற்சித்தும் குறித்த நேரத்துக்குள் ரீல் பெட்டியைக் கொண்டுச் செல்ல முடியவில்லை. ஆர்வத்தோடு படம் பார்த்துக்கொண்டிருந்த சென்சார் பிரிவினர், ‘என்னாச்சு படத்தை ஏன் தொடரவில்லை…?’ என்றனர். கடைசியில் விஷயம் அவர்களுக்குத் தெரிய வர, ‘ஒவ்வொரு முறையும் இப்படித்தான் படம் ஓடுதா?’ என்றவர்கள், எப்படி கோபப் பட்டிருப்பார்கள் என்பது உங்களுக்கே புரியும்.

‘இனி முழுப் படமும் தயார் ஆகி வந்தால்தான் சென்சார் குழு பார்வையிட ஆரம்பிக்க வேண்டும்’ என்று அப்போது உத்தரவே போடப்பட்டது.

எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடித்த ‘அன்பே வா’படத்தின் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடல், அப்போது ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படம்பிடித்த பாடல். குதிரை சாரட்டில் நிஜத்தில் ஒரு ராஜா, ராணியைப் போல எம்.ஜி.ஆரும், சரோஜாதேவி இருவரும் அமர்ந்திருப்பார்கள்.

அப்படி ஒரு சூழ லின் பின்னணியில் விண்வெளியில் சாரட் ஓடுவதைப் போல காட்சியாக்கப் பட்டிருக்கும். தியேட்டரில் அனைவராலும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்கப்பட்ட பாடல் அது. ஒரு படத்தின் திரைக்கதை விவாதம் மாதிரி அந்த நாட்களில் எடிட்டிங் அறையில் ஒட்டுமொத்தப் படக் குழுவினரும் விவாதித்து மெருகூட்டப்பட்ட பாடல் அது. இந்த அனுபவம் எல்லாம் பிற்காலத்தில் நான், சினிமா எடுத்தபோது எனக்குப் பெரிய உதவியாக இருந்தது.

ஒருமுறை சவுண்ட் மிக்ஸிங்காக எடிட்டர் கோபு மும்பை புறப்பட்டபோது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். ஹிந்தி பட உலகில் பெரிய அளவில் பேசப்பட்டவர், சவுண்ட் இன்ஜினீயர் முகுல் போஸ். அங்கே அவரைப் போய் சந்தித்தோம். அப்போது இருந்த ஒலிப்பதிவு சாதனத்தின் மூலம் குறைந்த டிராக்குகளைத்தான் மிக்ஸ் பண்ண முடியும். ‘முதலில் மிக்ஸ் செய்த நான்கு டிராக்குகள் பிரின்ட் போடப்படும்.

அந்தப் பிரின்டைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்த நான்கு டிராக்குகளை மிக்ஸிங் செய்ய முடியும்’ என்று முகுல் போஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். மிக்ஸ் செய்த நான்கு டிராக் சவுண்ட் நெகட்டிங் மும்பையில் இருந்தது. பிக்சர் நெகட்டிவ் சென்னையில் இருந்தது. இரவோடு இரவாக பிரின்ட் செய்ய பிக்சர் நெகட்டிவை மும்பைக்குக் கொண்டு வர முடியாது. என்ன செய்வதென்று கோபு சாரிடம் கேட்டேன்.

‘லேப் போகலாம் வா’ என்று என்னை அழைத்தார் கோபு. கையில் இருந்த நான்கு டிராக் சவுண்ட் மிக்ஸிங் நெகட் டிவையும், பிக்சர் பாசிட்டிவையும் வைத்து பிரின்ட் எடுக்க சொன்னார். அந்த பிரின்ட் சவுண்ட் நெகட்டிவ்வாக வந்தது. ‘முகுல் போஸுக்கு படம்தானே வேண்டும். இந்த நெகட்டிவ்வில் படம் வெள்ளையாக இருக்கும் இடம் கருப்பாக இருக்கும். கருப்பான இடம் வெள்ளையாக இருக்கும். மற்றபடி கார், பஸ் போவது எல்லாம் தெரியும். இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டு மற்ற நான்கு டிராக்குகளையும் மிக்ஸ் பண்ணட்டும்’ என்றார்.

கண்டிப்பாக படம் தயாராக வாய்ப்பே இல்லை என்ற மனநிலையோடு ஸ்டுடியோவுக்கு வந்தார் முகுல் போஸ். வந்தவரிடம் கோபு நெகட்டிவ் பிரின்ட்டைப் போட்டு காட்டினார். முகுல் போஸ் அதைப் பார்த்து அசந்துபோய், கோபுவை கட்டிப் பிடித்துக்கொண்டார். ‘இப்படி பாசிட்டிவ்ல ப்ரின்ட் எடுப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை. உன் தொழில் திறமைக்கு என் பாராட்டுகள்’ என்று வாழ்த்தினார். வடநாட்டுக் கலைஞர்கள், அவ்வளவு எளிதில் நம்மை பாராட்ட மாட்டார்கள். அப்படி ஆச்சர்யத்தை அந்த நேரத்தில் எடிட்டர் கோபு செயல்படுத்தினார்.

இயக்குநர்களைவிட அதிவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டியவர் படத்தின் எடிட்டர்தான். அந்த நாட்களில் அப்படித்தான் எடிட்டர்கள் இருந்தார்கள். அப்போதெல்லாம் ஒரு திரைப்படம் முழு மையான மன நிறைவைத் தராத வரையில் ரிலீஸ் தேதியை அறிவிப்பதில்லை.

‘சோரி சோரி’ என்று ஒரு ஹிந்தி படம். ராஜ்கபூர் ஹீரோ. ஒருநாள் ராஜ்கபூர் இயக்குநர் அனந்த் தாக்கூரிடம், தான் வெளிப்படுத்திய எக்ஸ்பிரஷன் ஒன்று எடிட்டிங்கில் கட் ஆகியுள்ளது என்றார். கோபு எடிட்டராகவும், சூர்யா சீஃப் எடிட்டராகவும் இருந்தனர். ‘கண்டிப்பாக அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை’ என்று இயக்குநர் கூறியும் ராஜ்கபூர் மறுத் தார். உடனடியாக எடிட்டர் அறைக்கு வந்து, சம்பந்தப்பட்ட காட்சியின் நெகட் டிவை எடுத்து பார்த்தபோது அப்படி ஒரு காட்சியே இல்லை.

நடிக்கும்போது இப்படி ஒரு முகபாவனையை வெளிப் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நடிகர்கள் மனதில் நினைப்பது இயல்பு தான். சில நேரத்தில் அது வெளிப்படும். அடுத்தடுத்து காட்சி குறித்த பரபரப்பால் சமயத்தில் அதை மறந்துவிடவும் செய் வார்கள். அதையும் அப்போது எடிட்டிங் அறையில் எளிதாக புரிய வைக்கும் சூழல் இருந்தது. பின்னர், ராஜ்கபூர், ‘ஏதோ ஒரு நினைவில் அப்படிச் சொல்லிவிட்டேன்’ என்று இயக்குநரிடம் மன்னிப்பு கேட்டார்.

இப்படி நாளும் பொழுதும் விதவித மான அனுபவங்கள் சூழ்ந்துதான் திரைக் கல்வியைப் பயின்றோம்.

- இன்னும் படம் பார்ப்போம்…


புதன் திரைதொடர்எஸ்பி. முத்துராமன்சினிமாவரலாறுதிரும்பிப் பார்த்தல்தமிழ் சினிமா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author