Last Updated : 05 Apr, 2015 02:19 PM

 

Published : 05 Apr 2015 02:19 PM
Last Updated : 05 Apr 2015 02:19 PM

பெண் குழந்தையும் 111 மரங்களும்

பெண் குழந்தைகள் பிறந்தாலே பெரும்பாலும் சுமையாகக் கருதப்படும் இந்தியச் சூழலில் பெண் குழந்தைகளைக் கொண்டாடுகிறது ஒரு கிராமம். அதுவும் கல்வியறிவு குறைவாகவும் பெண்கள் பற்றிய பிற்போக்குத்தனங்கள் அதிகமாகவும் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் சின்னஞ் சிறிய கிராமம் ஒன்றில் இந்த அற்புதம் நிகழ்ந்து வருகிறது.

பிபிலாந்திரி கிராமத்தில் ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகிறார்கள். ஓர் ஆண்டில் சுமார் 60 பெண் குழந்தைகள் பிறந்தால் 6660 மரங்கள் நடப்படுகின்றன. வேம்பு, ரோஸ்வுட், மா, நெல்லி மற்றும் மூலிகை மரங்கள் நடப்படுகின்றன. மரங்கள் கரையான்களால் அரிக்கப்படாமல் இருப்பதற்காக அருகிலேயே கற்றாழைச் செடிகளை வளர்க்கிறார்கள். வளர்ந்த மரங்களில் இருந்து காய், கனிகள், மூலிகைகள் பெறப்படுகின்றன. லட்சக்கணக்கான கற்றாழைகளில் இருந்து மருந்துகள், ஜுஸ், ஜெல், ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஊரே சேர்ந்து மரம் நடும் விழாவை நடத்துகிறார்கள். அதற்குப் பிறகு மரங்களைப் பராமரிப்பது பெண்களின் பொறுப்பு. இதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்கின்றன.

எட்டாயிரம் வீடுகள் உள்ள இந்தக் கிராமத்தில் மரம் நடும் விழா கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து நடத்தப் படுகிறது. கிராமத் தலைவர் ஷ்யாம் சுந்தர் பலிவாலின் மகள் கிரண் இளம் வயதிலேயே இறந்து போனார். அவரது நினைவாக இனி பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கொண்டாட வேண்டும் என்றும் முடிவு செய்தார் ஷ்யாம் சுந்தர். அதற்காக ஒரு கமிட்டியை ஆரம்பித்தார். பெண் குழந்தைகள் பிறந்தவுடன் 111 மரங்களை நடுவதோடு, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கிராமப் பஞ்சாயத்து 21 ஆயிரம் ரூபாயை அளிக்கிறது. இந்த 21 ஆயிரம் ரூபாயுடன் குழந்தையின் பெற்றோர் 10 ஆயிரம் ரூபாய் போட வேண்டும். அதைக் குழந்தையின் பெயரில் வங்கியில் போட்டு விடுகிறார்கள். குழந்தைக்கு 20 வயதாகும்போது இந்தத் தொகை பயன்படும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க வேண்டும், உரிய வயது வருவதற்குள் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது, மரங்களைப் பத்திரமாக வளர்க்க வேண்டும் என்று பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். இதில் எது ஒன்றை மீறினாலும் பலனை அனுபவிக்க முடியாது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ வாய்ப்பில்லாமல், கிராம மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.

“எங்கள் குழந்தைகளை எவ்வளவு ரசிப்போமோ, எவ்வளவு அன்பு செலுத்துவோமோ அதே போலத்தான் மரங்கள் மீதும் அன்பு செலுத்துகிறோம், ரசிக்கிறோம். எங்கள் பெண்கள் வளரும்போது இந்த மரங்களும் சேர்ந்து வளர்கின்றன. பெண் குழந்தைகளால் குடும்பம் தழைக்கும். மரங்களால் இந்தப் பூமி செழிக்கும்’’ என்கிறார்கள் கிராமத்தினர்.

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்கிறார்கள். திட்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். பிபிலாந்திரியில் மது, ஆடு, மாடு மேய்த்தல், மரம் வெட்டுதல் என்ற மூன்று விஷயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தக் கிராமத்தில் எந்தவிதக் குற்றமும் நிகழவில்லை. காவல்துறை வரவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என்று மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் சொல்கிறார்கள்.

பிபிலாந்திரி கிராமம் பல விதங்களில் முன்னுதாரணமாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் திகழ்கிறது. தண்ணீர் மேலாண்மை, கல்வி, ஆரோக்கியம், கழிவு நீர் வெளியேற்றம் என்று அடிப்படை விஷயங்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அரசாங்கம், தன்னார்வ அமைப்புகளின் விருதுகளைப் பெற்றிருக்கிறது. இவர்களுக்கு என்று தனியாக இணையதளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவரும் காலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடி, பெண்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரச் செய்து, தெளிவான புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இந்தக் கிராமத்தினர். இதுவரை இரண்டரை லட்சம் மரங்களை நட்டு சுற்றுச்சூழலைப் பேணி வருகிறார்கள். பெண்களை மதிக்கும் சமூகமும் சுற்றுச் சூழலைக் காக்கும் சமூகமும் முன்னேற்றத்தை அடையும் என்பதற்கு பிபிலாந்திரியே சாட்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x