Last Updated : 10 Mar, 2015 01:33 PM

Published : 10 Mar 2015 01:33 PM
Last Updated : 10 Mar 2015 01:33 PM

காரமான ஆந்திரா: மாநிலங்கள் அறிவோம்

கி.மு.800-களில் ஆந்திரம் குறித்த பதிவுகள் ஐதரைய பிராமணத்தில் உள்ளது. ஆந்திரர், புலிண்டர்கள், சாபர்கள் உள்ளிட்ட இனக்குழுக்கள் வசித்துள்ளன. ஆந்திர நாட்டைப் பற்றி கி.மு.350-களில் மெகதஸ்தனிஸும் குறிப்பிட்டுள்ளார். மகா அசோகரின் 13-வது கல்வெட்டிலும் குறிப்புகள் உள்ளன.

மவுரியர்களுக்குப்பிறகு சாதவாகனர்கள், கிழக்கு சாளுக்கியர்கள், கிழக்கு கங்கர்களும் பல்லவ சாம்ராஜ்யமும் அதன்பிறகு சோழ வம்சமும் ஆண்டது. பின்னர் காக்கத்தியர்கள், டெல்லி சுல்தான், அலாவுதீன் கில்ஜி படையெடுப்பு, பாமினி பேரரசு, விஜயநகரப் பேரரசு, குதுப் ஷாகி வம்சம், மொகலாயர் காலம், ஆங்கிலேயர் ஆதிக்கம், என ஆந்திரம் பலரையும் கண்டது.

ஹைதராபாத்

இன்றைய நவீன நகரமான ஹைதராபாத்தை கி.பி.1590- 91- ல் நிர்மாணித்தவர் குதுப் ஷாகி வம்ச அரசர் மொகமது அலி. 1724 - ல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த நிஜாம் கமார்-உத்-தின் கான் ஹைதராபாத்தை ஆண்டார். ஆங்கிலேயர் ஆதிக்கத்திலும் அவர்களுடன் நட்பு பாராட்டியதில் தன்னாட்சி பெற்ற தனி நாடாகவே விளங்கியது.

1857- ல் நடந்த முதல் விடுதலைப்போரில் ஆந்திரத்தின் பங்கு அளப்பரியது. ராம்ஜி கோண்ட் தலைமையிலான வீரர்கள் தீரத்துடன் போரிட்டனர். சீரலா, பேரலாவில் வரிவிதிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முதல் முறையாகப் பெண்கள் சிறை சென்றனர். பின்னாளில் காந்தியடிகள் அறிவித்த வரி கொடா இயக்கத்த்துக்கு முன்னோடியாக இந்தப் போராட்டம் அமைந்தது.

விடுதலை இந்தியாவில்..

1947- ல் நாடு விடுதலையடைந்தது. மொழிவாரி மாநிலக் கோரிக்கையை தார் கமிஷனும் ஜவஹர்கலால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமைய்யா கொண்ட ஜெ.வி.பி. கமிஷனும் நிராகரித்தது. மக்களின் கோபம் பெரும் போராட்டமாக வெடித்தது. இதனால் 1952- ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸுக்குப் பலத்த அடியும் கம்யூனிஸ்ட்களுக்கு அதிக இடங்களும் கிடைத்தன.

தனி மாநிலத்துக்காக சுவாமி சீதாராம் நடத்திய சாகும்வரை உண்ணாவிரதம் வினோபாவேயின் தலையீட்டால் நிறைவடைந்தது. ஆனால் பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் 1952 டிச.15 - ல் அவரது மரணத்தில்தான் முடிந்தது.

இது ஆந்திரத்தைக் கலவரக்காடாக மாற்றியது. மக்களின் பேரெழுச்சியைக் கண்டு மிரண்டுபோன நேரு, “தெலுங்கு பேசும் 11 மாவட்டங்களையும் பெல்லாரியின் மூன்று தாலுகாக்களையும் இணைத்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும்” என அறிவித்தார். மொழியின் அடிப்படையில் உருவான முதல் மாநிலமும் அதுதான்.

1953 அக்டோபர் 1- ம் தேதி கர்னூலைத் தலைநகராகக் கொண்டு புதிய ஆந்திர மாநிலம் உதயமானது. முதல் முதலமைச்சராக பிரகாசம் பொறுப்பேற்றார். இருப்பினும் விசாலாந்திராவை எதிர்நோக்கி ஆந்திரர்கள் காத்திருந்தனர்.

போலோ ஆபரேஷன்

ஹைதராபாத் தனிநாடாக இருக்கவே நிஜாம் மன்னர் உஸ்மான் அலிகான் விரும்பினார். 1948 செப். 13-ம் தேதி ‘போலோ ஆபரேஷன்’ என்ற போலீஸ் நடவடிக்கை மூலம் 5 நாளில் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆபரேஷனுக்குத் தலைமையேற்ற மேஜர் ஜெனரல் ஜே.என்.சவுத்திரி 1949 டிசம்பர் வரை ராணுவ ஆளுநராக இருந்தார். எம்.கே.வெல்லோடி முதல்வராக நியமிக்கப்பட்டார். 1952-ல் நடந்த பொதுத்தேர்தலில் ஹைதராபாத் முதல்வராக ராமகிருஷ்ணாராவ் தலைமையிலான அரசு அமைந்தது.

விசாலாந்திரா

விசாலாந்திரா அமைப்பதற்கான கோரிக்கை குறித்து நியமிக்கப்பட்ட சையத் பசல் அலி குழுவிடம் தெலங்கானா மாநிலக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. பின்னர் தெலங்கானா மேம்பாட்டுக்காக மண்டலக் கவுன்சில் ஏற்படுத்துவது என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 20 மாவட்டங்களுடன் 1956 நவம்பர் 1-ம் தேதி ஆந்திரப் பிரதேசம் பிறந்தது. முதல் முதலமைச்சராக நீலம் சஞ்சீவரெட்டி பதவியேற்றார்.

இப்படியாக உருவான மாநிலம் 2014 ஜூன் மாதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுப் புதிய தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது தனிக்கதை.

தற்போது 13 மாவட்டங்களை உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் 2-வது நீண்ட கடற்கரையைக் கொண்டது. கிழக்கே வங்கக்கடலும் வடக்கே தெலங்கானாவும் தெற்கில் தமிழ்நாடும் வடகிழக்கே ஒடிஷாவும், மேற்கில் கர்நாடகமும் எல்லையாக அமைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் தெலங்கானாவுக்கும் ஹைதராபாத் தலைநகராக இருக்கும். தற்போது விஜயவாடாவைத் தலைநகராக்கும் வேலைகளில் ஆந்திரப்பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது.

உகாதி கோலாகலம்

தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி கோலாகலப் பண்டிகையாகும். திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் இந்தியாவிலேயே அதிக வருவாய் கொண்ட கோயில். உலகப் பிரசித்திபெற்றது.

இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பேசும் மொழி தெலுங்கு. உருதும் புழக்கத்தில் உள்ளது. தெலங்கானா பிரிந்த நிலையில் தற்போதைய ஆந்திரத்தின் மக்கள் தொகை 4.9 கோடி. படிப்பறிவு 67.4 சதவீதம்.

வளம்

11.14 லட்சம் ஹெக்டேரில் 54 சதவீதம் நிலம் பாசன சாகுபடி பெறுகிறது. அரிசி, மக்காச்சோளம், பருப்பு, நிலக்கடலை, சூரியகாந்தி, வாழை, மாம்பழம், புகையிலை, பருத்தி, கரும்பு, மிளகாய் ஆகியவை முக்கிய விளைபொருட்கள். கிருஷ்ணா, கோதாவரி, சாராதா உள்ளிட்ட நதிகள் பாய்கின்றன. கிரானைட் மற்றும் சுண்ணாம்பு தாதுகள் நிறைந்துள்ளன. சிறந்த சுற்றுலா பிரதேசமாகவும் திகழ்கிறது ஆந்திரப் பிரதேசம்

இந்துக்கள் 92.25 சதவீதம், இஸ்லாமியர் 6.09 சதவீதம், கிறிஸ்தவர்கள் 1.51 சதவீதம், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமண மதத்தினர் சராசரியாக 0.5 சதவீதம் என்ற அளவில் உள்ளனர்.

கலை இலக்கியம்

சாதவாகனர்கள், கிழக்கு சாளுக்கியர்கள், விஜநகரப்பேரரசுகளின் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம். தெலுங்கின் முதல் கவிஞர் நானய்யா பாட்டா, திகானா, யெர்ரப்ரகடா, அல்லசானி பெத்தன்னா கவிதைகளின் பிதாமகன்கள் எனப் போற்றப்படுகின்றனர். வீரேசலிங்கம் பந்துலு எழுதிய ராஜசேகர சரித்திரம் தெலுங்கின் முதல் நாவல். 1950-ல் முதல் சிறுகதை காலிவனா, முதல் தகவல் திரட்டு விஜனசர்வாசமு 1923-ல் வெளிவந்தது.

கேளிக்கை நடனங்கள், குச்சிப்புடி, பாமா கல்பம், கொல்லா கல்பம் உள்ளிட்ட தொன்மையான நடனங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. 1918-களில் விதவை மறுமணத்தை வலியுறுத்தியது புரட்சிகர கன்யாசல்கம் நாடகம். 1966 கணக்கெடுப்பின்படி 700 நாடகக் கம்பெனிகள் இருந்துள்ளன.

தகவல் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் மாநிலமாக மிளிர்கிறது. மிகப்பெரிய சினிமா தொழிற்சாலையாக தெலுங்கு படவுலகம் (டோலிவுட்) உருவெடுத்துள்ளது. அதிகப் படங்களைத் தயாரித்துக் கின்னஸ் சாதனை படைத்த ராமாநாயுடு, கர்நாடக இசை மேதை பத்மபூஷன் விருதாளர் எம்.பாலமுரளிகிருஷ்ணா உள்ளிட்டவர்களை ஈன்றது ஆந்திரம்தான்.

காரமான ஆந்திர உணவைப் போலவே போர்க்குணமும் அன்பும் கலாச்சாரப் பெருமையும் மிகுந்து காணப்படுவது ஆந்திரத்தின் தனித்துவம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x