Last Updated : 14 Mar, 2015 04:10 PM

 

Published : 14 Mar 2015 04:10 PM
Last Updated : 14 Mar 2015 04:10 PM

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் 90 வருட அபூர்வ ஆலமரம்

விழுதுகளே இல்லாத அந்த ஆலமரம் எட்டு திசைகளிலும் பரந்து விரிந்து தரையைத் தொட்டுப் பெரு விருட்சமாக நிற்கிறது. சில கிளைகள் சாலையை மறித்து வளைந்து செல்கின்றன. ஆனால், மரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகக் கனரக வாகனப் போக்குவரத்தையே அந்தச் சாலையில் நிறுத்திவிட்டனர் ஒரு கிராம மக்கள்.

இன்னும் சில கிளைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நீண்டு செல்கின்றன. கிளை பரவும் இடங்களில் யாரும் விவசாயம்கூடச் செய்வதில்லை. இதையெல்லாம்விட, உடையும் நிலையில் இருந்த மரக் கிளைக்குக் கிராம மக்கள் இரும்புத் தாங்கியையும் ஏற்பாடு செய்துள்ளது ஆச்சரியம்.

போற்றப்படும் மரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சின்னேரிப்பாளையம் என்ற கிராமத்தில் விழுதுகளே இல்லாத இந்தப் பெரிய ஆலமரம் உள்ளது. சின்னேரிப்பாளையத்தில் இருந்து சின்னநெகமம் செல்லும் வழியில் பட்டாபிராமர் கோயில் உள்ளது. அந்தக் கோயிலின் மேடையாக இந்த ஆலமரம் உள்ளது. இது என்ன பெரிய அதிசயம் என நினைத்தால், காத்திருக்கிறது அடுத்த ஆச்சரியம்.

ஒரு மரம்தானே என நினைத்து வெட்டி வீழ்த்தாமல், அது வளர்வதற்கு வாய்ப்பைக் கொடுத்துப் போற்றுகிறது சின்னேரிப்பாளையம் கிராமம். காரணத்தைக் கேட்டால், கொஞ்சம் பயமும் ஏற்படுகிறது.

செடியாக வைத்ததிலிருந்து இன்றுவரை இந்த மரத்தின் கிளையையோ, குச்சியையோ யாரும் வெட்ட முன்வருவதில்லை. அப்படி வெட்டுவது வேறு அசம்பாவிதத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை உள்ளது. யாராக இருந்தாலும் மரத்தைச் சுற்றித்தான் செல்லவேண்டும்.

மரத்தை வெட்ட நெடுஞ்சாலைத் துறையினர் பல முறை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், யாரும் துணிந்து வெட்டிவிட முடியாது என்கின்றனர் இந்தக் கிராம மக்கள்.

90 வருட மரம்

"சுமார் 90 வருடங்களுக்கு முன்பு தற்போது ஆலமரம் உள்ள இடத்தில் ஒரு புங்க மரம் இருந்தது. அதை வெட்டி வீழ்த்திய ஜமீன் குடும்பம் மெல்லமெல்ல அழிந்துவிட்டது. அதன்பின் பனை மரத்தில் முளைத்த ஆலங்கன்றை இங்கு நட்டு வைத்தனர்.

கிராம மக்கள் அந்த ஆலங்கன்றை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வளர்த்தனர். மரமாக வளர்ந்த பிறகு யாரும் இதன் கிளையை முறிக்க மாட்டார்கள். கிளையையோ மரத்தையோ வெட்டினால், வேறு அசம்பாவிதம் ஏற்படலாம் என்று கிளைகளைக்கூடத் தொந்தரவு செய்வதில்லை. மரத்தில் யாரும் ஏறுவதும் இல்லை" என்கிறார் மரம் வீற்றிருக்கும் பட்டாபிராமர் கோயிலின் பூசாரி குமரவேல் (85).

குமரவேல்

வளர்ச்சி, தேவை என்ற காரணங்களைச் சொல்லி மரத்தை வெட்டாமல், இந்தக் கிராம மக்கள் ஆல மரத்தைக் காத்துவருகின்றனர். 90 வருடங்களுக்கு மேலாக இந்த மரம் சிறிதளவுகூட வெட்டப்படாமல், எந்த இடையூறும் இல்லாமல் அதன் போக்கில் வளர்ந்துவருகிறது.

எல்லா மரங்களுக்கும் இந்த அந்தஸ்து கிடைக்காது என்பதால், இந்த மரம் கொடுத்து வைத்ததுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x