பதூதாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

பதூதாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
Updated on
2 min read

டெல்புகழ்பெற்ற முகமது பின் துக்ளக் ஆட்சி நடைபெற்றபோது இப்ன் பதூதா இந்தியா வந்தார். துக்ளக் அரச வம்சத்தை ஆசியப் பகுதியில் நிலவிய இஸ்லாமிய ஆட்சிகளுள் ஒன்று என்று சொல்லலாம். மெக்காவில் பயின்றவரான இப்ன் பதூதாவை துக்ளக் உடனடியாக நீதிபதியாக நியமித்தார். ஆனால், அந்தப் பதவி மூலம் சுல்தானின் அரசவையைத் தாண்டி பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை.

பதவி பறிப்பு

இந்தக் காலத்தில் சிந்து நதியை ஒட்டி தான் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி இப்ன் பதூதா குறிப்பிட்டுள்ளார். அதில் சிந்து நதிக் கரையில் இந்தியக் காண்டாமிருகத்தைப் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.

துக்ளக்கின் நம்பிக்கையைப் பெற்று ஆறு ஆண்டுகளுக்கு ராஜ வாழ்க்கை வாழ்ந்துவந்த இப்ன் பதூதா, திடீரெனத் துக்ளக்கின் சந்தேகத்துக்கு ஆளானார். அரசருக்கு எதிராகப் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டுப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

கடைசி வாய்ப்பு

அப்போது, மீண்டும் ஒரு முறை ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான அவருடைய கோரிக்கையைத் துக்ளக் நிராகரித்தார். கடைசியாக டெல்லியைவிட்டு நகர்வதற்கான ஒரு வாய்ப்பு வேறு வழியில் அவருக்குக் கிடைத்தது. சீனாவின் யுவான் அரச வம்சத்தைச் சேர்ந்த தூதர் குழு, சீனப் புனித யாத்ரீகர்களிடம் பிரபலமாக இருந்த இமாலயப் புத்த விகாரத்தை மீண்டும் கட்டுவதற்கு அனுமதி கேட்டுத் துக்ளக்கிடம் வந்திருந்தது.

அப்போது சீனாவுக்கு அனுப்ப இருந்த தூதர் குழுவுக்குத் தலைமை வகிக்க இப்ன் பதூதாவுக்கு துக்ளக் வாய்ப்பு வழங்கினார். ஆனால், இப்ன் பதூதாவின் பரிவாரத்தை ஒரு கொள்ளைக் கும்பல் தாக்கியது. எல்லாவற்றையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டார் பதூதா. 10 நாட்களில் தன் குழுவைத் தேடிக் கண்டடைந்து, குஜராத் துறைமுக நகரான காம்பாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து கடல் வழியாகக் கோழிக்கோடு, கொல்லம் துறைமுகங்கள் சென்று 10 நாட்கள் கழித்தார். அப்போது ஏற்பட்ட புயலில் அவருடன் வந்த ஒரு கப்பல் கவிழ்ந்தது.

சீனாவுக்குச் செல்வதில் குறி

இந்த நிலையில் டெல்லி திரும்புவது நல்லதல்ல என்று நினைத்த இப்ன் பதூதா உத்தரக் கர்நாடகா பகுதியில் இருந்த ஜமாலுதின் என்ற குறுநில மன்னரின் பாதுகாப்பில் இருந்தார். தனது சீனப் பயணத்தைக் கைவிட விரும்பாத அவர், மாலத்தீவுகளுக்குப் பயணித்தார். அங்கு ஒன்பது மாதங்கள் இருந்த பின்னர் இலங்கைக்குச் சென்றார்.

இப்ன் பதூதா வந்த கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டதும் மூழ்க ஆரம்பித்தது. அவர்களைக் காப்பாற்ற புறப்பட்ட கப்பலை, கடல் கொள்ளையர்கள் தாக்கிவிட்டனர். மீண்டும் அனைத்தையும் இழந்த பதூதா எப்படியோ மதுரை வந்து சேர்ந்தார். மதுரை சுல்தானாக இருந்த கியாசுதீன் முகமது தம்கானியைச் சந்தித்தார்.

சீனாவுக்குச் சென்று தூதர் பதவியேற்பதில் குறியாக இருந்த பதூதா, இன்றைய வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்துக்கு 1345-ல் சென்றார். அங்கிருந்து சுமத்ரா, மலேசியா வழியாகச் சீனாவைச் சென்றடைந்தார். அடுத்த ஆண்டில் தாயகமான மொராக்கோவுக்குத் திரும்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in